Thursday, July 4, 2013

ஆண்கள் பலவிதம்

நீ பேசினால் குயில் கூவுகிறதென்பான்.

சிரித்தாலோ மின்னல் என்பான்,
முத்துச் சிதறல் என்பான்.

நடந்தாலே 
நாட்டியம் என்பான்.
நாட்டியமாடினால் 
நவரசம் அற்புதம் என்று புகழுரைப்பான்.

கவிதை சொல்லவா என்பான் 
உன்பெயர் மட்டும் சொல்லி 
எப்படி இருந்ததென்பான்?

அழகான ஆடை தேர்ந்தெடுத்து 
அணிகிறாயா இல்லை நீ 
அணிவதால் எல்லா 
ஆடையும் 
அழகாய் இருக்கிறதா என ஒன்றும் 
அறியாதவன் போல் கேட்பான்.

கண்ணாலே பேசும் உனக்கு 
வாய் எதற்கு என்பான்.

கர்ணப் பரம்பரை போல் நீ 
காணும் பொழுது மட்டும் 
தானம் தருமம் செய்வான்.
கண்ணைக் கொஞ்சம் நீ திருப்பினால் 
தான் தந்ததையும் சேர்த்துப்  
பிடுங்கிக் கொள்வான்.

அருகிலிருக்கும்போதே கண்களை 
அலைபாயவிடுவான்.
அதற்குக் காரணம் கேட்டால் உன்னைவிட 
அழகு யாரேனும் இருக்கிறார்களா என்று 
ஆராய்ந்ததாய் 
அளப்பான்

கோவிலில் இருந்து வந்தேன் என்பான்.
அங்கே தேங்காய் பொறுக்கியதைச்  
சொல்லாமல் விட்டுவிடுவான்.

உன் மொக்கைப் பேச்சுக்கெல்லாம் 
தொப்பை குலுங்கச் சிரிப்பான்.

சீண்டுவான் சிரிக்கவைப்பான்
நோண்டுவான் நெளியவைப்பான் 

ஆண்கள் பலவிதம்.
அவர்களுள் ஒருவன் உன்னிடம்.

No comments:

Post a Comment