Saturday, November 22, 2014

தவறு புரிந்தது

 
ஏன் என்னோட யூனிபார்ம தோய்க்கல 
என்று வேலைக்காரியைக் கேட்ட பொழுது
புரியாத தன் தவறு,

ஒனக்கு ABCD கூட தெரியல
என்று அவளைப் பார்த்து சொன்ன பொழுது
புரியாத தன் தவறு,

இன்னிக்கு அதே பொடவையொட ஸ்கூலுக்கு வந்து நிக்காதே
என்றவன் கட்டளையிட்டப் பொழுது
புரியாத தன் தவறு,

எனக்கு டிராயிங்ல ஃபர்ஸ்ட் ப்ரைஸ்
என்றென் பையன் வேலைக்காரியிடம் ஓடிப்போய் சொன்ன பொழுது
இதுவரை புரியாத தன் தவறு...
தாய்க்குப் புரிந்தது;

Thursday, November 6, 2014

நான்

தினம்
விழித்து துதித்து
கழித்து குளித்து
தின்று வயிறு நிரப்பி
உட்கார்ந்து பணம் சேர்த்து
வருவோர் போவோரோடு வாயாடி
பொய்யாய் சிரித்து
புரம் பல சொல்லி
கூடிக்களித்து உறங்கி மடியும் மானிடன் நான்.

Wednesday, October 29, 2014

காபி

பார்த்தவுடனே ஒரு பரவசம்.
தொட்டுச் சுவைக்க துடிக்கும் நெஞ்சம்.
இதழ் வைத்து இழுக்க இழுக்கப் பேரின்பம்.
எத்துனை சுவைத்தாலும்
இல்லை இதற்கொரு எல்லை;

பல வடிவங்கள், பாதகமில்லை;
ஆனால் நிறத்தில் இருக்கு சுவையின் ஆழம்;
அமெரிக்க ஐரோப்ப வெள்ளை வேலைக்காகாது;
ஆப்ரிக்கக் கருப்பு சுவைக்காது;
இந்தியத் தோல் நிறமே
இவ்விடயத்தில் இனிமையானது;

இன்றியமையாதது - இதழ் சுட வேண்டும்,
சூடு இல்லையெனில் சுவையில்லை,
பருகுவதில் ஒரு பலனுமில்லை;

தஞ்சாவூர்க்காரன் நான்,
காபிக்கு அடிமையான ஆண்;

Friday, October 10, 2014

ஆண்டவனுக்கு நன்றி

கண் திறவாது உனைக்
கனவில் கண்டு களித்திருக்கும் போதும்

கண்ணடித்துச் சிரித்துப் பேசிப் பழகும் போதும்

விரல் தடவி விஷமம் செய்யும் போதும்

மெல்ல தோளில் இடித்து
நீ முறைக்கையில்
ஏதுமறியாதவன் போல் உனைப் பார்க்கும் போதும்

எனை ஆணாய்ப் படைத்த
ஆண்டவனுக்கு ஆயிரம் நன்றிகள் நவில்கின்றேன்.

Wednesday, September 17, 2014

உன்நினைவு

கருமேகத்தைக் காணும் போதெல்லாம்,
மழையில் நனையும் போதெல்லாம்,
பூத்து சிரிக்கும் பூவைக் காணும் போதெல்லாம்,
கரையை முட்ட ஓடிவரும் அலையைக் காணும் போதெல்லாம்,
இனிமையான காதல் பாட்டு கேட்டு ரசிக்கும் போதெல்லாம்
மறவாத உன்நினைவு
மறுபடி மறுபடி ஞாபகத்தில் வருவதை
மறுக்கமுடியாது நான் மகிழ்கிறேன்;

Monday, September 15, 2014

கண்ணே நீ வந்துவிடு

காலையில் கண் விழிக்குமுன்னே,
சூரியக் கதிர்கள் எனைச் சுடுமுன்னே,
குயில் வந்து கூவி என்னுறக்கம் களைக்குமுன்னே,
கண்ணே நீயென் கனவிலாவது வந்துவிடு;

காதலன் நானுனைக் கட்டிப்பிடித்து
காதலிக்க இடம்கொடு;

முத்தமிட்டு முத்தம் பெற்று எனை
மோகத்தீயில் ஆழ்த்திவிடு;

கடமைகள் எனை உருட்டி மிரட்டி அடக்கும் முன்
உனை ஆள விட்டுக்கொடு;

 

Sunday, August 31, 2014

அடுத்த ஜென்மத்துக் காதலி



அடுத்த ஜென்மத்துக் காதலி 
---------------------------------------
கண்டாங்கிச் சேலையில்
காலை வேளையில்,
நயனங்களால்
நலம் விசாரிக்கும்
நங்கை ஒருத்தி
நானிருக்கும் அறைக்கு வந்தாள்
நறுமணம் வீசும்
நாலு முழப் பூவோடு;

மை தடவினாள் கண்ணில்;
குறுகுறுப் பார்வை கருவிழியில்;
கண்டோர் தன்னை மறப்பர் அவள் எழிலில்;
தங்க நிற ஆடையில், தத்தையின் ஜொலிப்பில்;

ஒரு பூவே பூ விற்கும் பொழுதது;
அப்பூவின் புன்னகை முன்
போட்டியிட முடியாது
பொன்நகை தவித்தது;

கதவைப் பிடித்துக் கொண்டு
கன்னி வெட்கத்தில் தள்ளி நின்றாள்;
காதலென்று சொல்ல முடியாதெனினும்
காளை என்னைக் கவர்ந்திழுத்தாள்;
அடுத்த ஜென்மத்தில் அழகி நீயென்
அகமுடையாளாய் வர நான் ஆசிர்வதிக்க
அசட்டுச் சிரிப்பு ஒன்று அளித்துவிட்டு
அங்கிருந்து நகர்ந்தாள், என்னெஞ்சை விட்டு நீங்காள்;

Wednesday, August 27, 2014

காத்திருந்தேன்

மாலை வேளையில்
மலர்ச் சோலை மூலையில்
மன்னவனே உனக்காக
மங்கை நான் காத்திருந்தேன்;

கண்கவர் ஆடையிலே
கவிதையொன்று சொல்லிக்கொண்டு
காளை நீ வருவாயென்று
கன்னி நான் காத்திருந்தேன்;

பூவினுள் நுழைந்து வண்டு
புதுத்தேனை நிறையப் பருகி
போதையில் பாதை புரியாது
பறந்து திரிந்ததைப் 
பார்த்துச் சிரித்தேன்;

ஆண் மயிலும் பெண் மயிலும்
ஒன்றையொன்று உரசிக்கொண்டும்
ஒன்றோடொன்று மோதிக்கொண்டும் 
களித்துக் கிடந்ததைக்
காணமுடியாது கண்டுகிடந்தேன்;

நேரம் ஆக ஆக
நீ அங்கு வராது போக
எங்கோ ஒரு சோகப்பாடல் யாரோ பாட
என் கண்ணிலிருந்து கண்ணீர் ஓட
ஏனோ நான் உயிரில்லா உடல்போலே
எழுந்து போனேன்;

Thursday, August 7, 2014

நீ



கண் விழித்தால் அருகில் நீ;
'கண்ணா இங்கெப்படிடா வந்தாய் நீ'
என்றுகேட்டால்
அறைத்தோழி முறைக்கிறாள்;
'அட ராமா' என்று சொல்லிக்கொண்டே
குளியலறைக்குள் சென்றால்
அரையில் ஆடையோடு அங்கே நீ;
ஆடை அணிகையில்
இடையிலிருந்து கை எடுக்காது
இம்சிக்கிறாய் நீ;
உணவருந்த உட்கார்ந்தால்
ஒரு கவளம் கேட்கிறாய் நீ;
ஆண்டவனே துணை என்று
ஆலயம் தொழ சென்றால்
ஆடவன் நீ
அருகில் தொடுதூரத்தில்;
ம் ... வேறென்ன செய்ய
‘மாரியாத்தா காளியாத்தா
என்னையும் சீக்கிரம்
ஆத்தா ஆக்கு‘
என்று வேண்டிக் கொண்டு
வெளியே வந்தால்,
நாலு சக்கர வண்டியில்
எதிரில் நீ.