Friday, January 13, 2012

சிவபுராணம் - 3

வரம் பெற்றவன்
வலிமை பெற்றவனானான்;
மூஉலகையும் ஆட்டிப் படைத்தான்;
வரம் தந்தவன்
செய்வதறியாது திகைத்து நின்றான்;
அச்சமயம்
சிவன் இமயமலையில் தவத்தில் இருந்தான்;
பார்வதி தன் பெற்றோரோடு
இமயமலையில் வசித்து வந்தாள்;
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க
காதல் வயப்பட
காமனைப் பணிந்தான் இந்திரன்;
காமன் வந்தான்;
சிவன் இருப்பிடத்தை அழகாய் அமைத்தான்;
அவ்விடம் பார்வதியை வரவழைத்தான்;
கணை விடுத்தான்;
கண் திறந்தான் சிவன்;
நடந்ததை அறிந்தான் அவன்;
சினம் கொண்டான்;
நெற்றிக்கண் திறந்தான்;
காமனை எரித்தான்;

காமன் மனைவி ரதி தேவி;
கண்ணீர் விட்டுக் கதறினாள்;
கணவன் செய்தப் பிழையைப்
பொருத்தருளப் பணிந்தாள்;
தேவர்கள் வந்தனர்;
தரகாசுரனால் நேரும்
துயர் தீர்க்கவே
தங்கட்கு சினம் தரும் செயல் செய்ய நேர்ந்தது,
தயை கூர்ந்து சினம் தணிந்து
காமனை உயிர்ப்பித்து எம்மெல்லோரையும்
தரகாசுரனிடமிருந்துக் காத்தருள்புரிய வேணும்;
இமையோர் வேண்டினர்;
இரங்கினான் ஈஸ்வரன்; எனினும்
இறந்த மன்மதன் இறந்தவனே;
துவாரகையில்
கிருஷ்ணனுக்கு மகனாய்
பிரத்யும்னனாய்
பிறப்பான் என்றான்
பரமேஸ்வரன்;

                                    பார்வதி தவம்


சிவனை மட்டும் தன்
சிந்தையில் கொண்டு வேறேதும்
சிந்திக்காது
தவம் செய்யப் புறப்பட்டாள்;

வசதியான வாழ்வைத் துறந்தாள்;
பட்டு, தங்க நகைகள் துறந்தாள்;
தாய் தந்தை துறந்தாள்;
உணவு உறக்கம் துறந்தாள்;

சிவனையே கணவனாய்க் கொள்ள
கடுந்தவம் செய்தாள்;

சிவன் ஒரு பிராமண வடிவில்
அவள் முன் தோன்றினான்;
பார்வதி அவரை வரவேற்றாள்;
வணங்கினாள்;
கடுந்தவம் செய்யக்
காரணம் என்ன,
வினவினார் வந்தவர்;
விடைதந்தாள் வணங்கி நின்றவள்;
பரமேஸ்வரனே என்
பதியாய் வரத் தவமிருக்கிறேன்,
பார்வதி சொன்னாள்;
பிராமண வடிவெடுத்து வந்தவர்
பலமாய்ச் சிரித்தார்;

முட்டாள் பெண்ணே,
தங்கத்தைத் தந்துத்
தகரத்தை வாங்கிவோர் உண்டா ?
சந்தனத்தைக்
களி மண்ணில் கரைப்பாரா யாரும் ?
கண்ணுக்கழகாய்க்
கண்ணெதிரே தேவர்கள் பலரிருக்க
கானகத்தில் எங்கோ
கண் மூடி அமர்ந்திருக்கும்
அவனா,அச் சிவனா,உனக்கேத்த ஆள் ?
சாம்பல் உடம்பெங்கும் பூசி,
சடையாய் முடி பரவிக் கிடக்க,
பாம்பு மாலையாய் கழுத்தில் கிடக்க,
பூதங்கள் உடனுரங்க,
அவனா உனக்கு ?
அறிவிருக்கா உனக்கு ?
வாழ்வை வீணாக்காது,
வாழப் பழகு; அவ்வாறு
வாழ்வதே உலக மரபு;

கொதித்தெழுந்தாள் பார்வதி;
கோபத்தோடு பேசினாள்;
சிவம் பற்றித் தெரியாத
நீர் ஒரு ஜடம்;
நீர் தான்
அறிவில்லாத முடம்;
கிளம்பிச் செல்லும் வேறு இடம்;

பார்வதி
பிராமணன் இருப்பதை மறந்தாள்;
தன் வேலை தொடர்ந்தாள்;
சிவனை எண்ணித் தியானம் செய்தாள்;

பிராமண வடிவெடுத்து வந்தவன்,
பரமேஸ்வரனாய் மாறி நின்றான்,
பார்வதியின் தவத்தை மெச்சினான்,
வரம் கேட்கச் சொன்னான்;
பதியாய் வந்து, தன்னுள்
பாதி கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment