Friday, October 13, 2017

பொன்மாலைப் பொழுதில் - 1

இன்று இத்தினம் என்னோடு உன் புறப்பாடு
நெஞ்சில் எதற்கு அய்யப்பாடு
எழுந்து வா துணிவோடு
மரங்கள் சூழ்ந்து பூக்கள் நிறைந்த ஒரு காடு
இடையில் நமக்கென்றோர் வீடு
நாமிருவர் மட்டும் தங்க ஏற்பாடு
குயிலோசைக்கேற்றார் போல் நீ பரதம் ஆடு
கூடவே *மனசு மயங்கும் மௌனகீதம் பாடு*
---
இது பின் மாலை நேரம்
அந்தி மெல்ல ஆடி வரும் நேரம்
கண்களால் பேசமுடியாத நேரம்
விரல்கள் விளையாடத் துவங்கும் நேரம்
முல்லை மலரும் நேரம்
ஆதவன் மாயும் நேரம் 
*நிலாக் காயும் நேரம்*
---

நெஞ்சின் இறுக்கம்
உனைக் கண்டால் இறங்கும்
உன் பார்வையில் தெய்வீகம்
என் நெஞ்சில் அதன் அனுக்கிரகம் 
அனவரதமும் உன் ஞாபகம்
சித்தம் சாந்தம்
நெஞ்சிலோர் நிசப்தம்
மெல்ல ஒலிக்கும் சப்தம்
கேட்டால் மனதுள் உன்மத்தம்
நீ இசைக்கும் கீதம், காதல் வேதம்
*நீயொரு காதல் சங்கீதம்*
---
இருமினால் இங்குப் பார் என்று பொருள்
முறைத்தால் பேச்சை நிறுத்து என்று பொருள்
உள்ளங்கையைச் சொரிந்தால் பசிக்கிறது
என்று பொருள்
கால் விரலால் கால் விரலைத் தடவினால் ..... என்று பொருள்
இதைப்பற்றி நீ ஏதும் இதுவரை சொன்னதில்லையே
*ரகசியமாய் ரகசியமாய்ப் புன்னகைத்தால் பொருளென்னவோ ?*
---
தத்தை இவள் அழகைத்
தலைசாய்த்துப் பார்த்து ரசிக்கும் மயில்

பூவை இவள் மேனிவாசங்கண்டு
மெய்சிலிர்த்துப் போகும் பூக்கள் 

நங்கை இவள் நாட்டிய நடையழகை
நாணிக் கண்டு ரசிக்கும் அன்னம்
வஞ்சி இவள் கொஞ்சுபார்வை காண, நீயும்
வானம் விட்டு வாராயோ
*வண்ணம் கொண்ட வெண்ணிலவே*
---
மழையைத் தூதனுப்பி
மண்ணின் நலம் அறிந்துகொள்கிறது மேகம்
வேரைத்  தூதனுப்பி
நீரின் நலம் அறிந்துகொள்கிறது மரம்
துயரத்தைத் தூதனுப்பி
இறைநம்பிக்கையை நலம் விசாரிப்பான் இறைவன்.
இந்தப் பாடலை நான்  உனக்கனுப்பி ...
*நலம், நலமறிய ஆவல்*
---
சிரிக்கிறாய் சில நேரம்
சீறுகிறாய் சில நேரம்
அணைத்துக் கொள்கிறாய் சில நேரம்
ஆத்திரத்தில் விலகி நிற்கிறாய்
சில நேரம்
பனியாய் .... புயலாய்
நிலவாய் .... நெருப்பாய்
இன்னும்....இன்னும்
*மழையும் நீயே, வெயிலும் நீயே*

---

No comments:

Post a Comment