Tuesday, June 21, 2022

தமிழமுது 1

திருக்குறள்


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (4)

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாது, கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை

----------------------------------------------------------------------------

நாலடியார்


துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும். (2)


குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறிவரும்.

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி


உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத் துணையே: (1)

 

உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.

( தொடரும் )

copy right to the respective web sites.


No comments:

Post a Comment