Tuesday, June 28, 2022

தமிழமுது 3

திருக்குறள்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி (13)


உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

----------------------------------------------------------------------------

நாலடியார்

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு. (19)


நல்லறங்களைப் பின்னர் ஆராய்ந்து செய்வோம். இப்போது இளைஞராக இருக்கிறோம் என்று நினையாமல், பொருள் இருக்கும்போதே மறைக்காமல் அறத்தைச் செய்யுங்கள். ஏனெனில், கடுங்காற்றால் நன்கு பழுத்த பழங்கள் விழாமலிருக்க, நல்ல காய்கள் உதிர்தலும் உண்டு.

----------------------------------------------------------------------------

அபிராமி அந்தாதி

துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. (2)

 

அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.

--------------------------------------------------------------------------------

தேவாரம்

பண்ணி னல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்
எண்ணி னல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார்
வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுகந் தானுமை யாறுடை யையனே. (2.6.4)

 

பண்ணிசையினும் இனிய மொழி பேசுபவரும், பவளம் போன்று சிவந்த வாயினை உடையவரும், எண்ணற்ற நல்ல குணங்களை உடையவரும், வேல் இணை போன்ற விழியினரும் ஆகிய இளமகளிர், தம் தன்மைகளையும், வலிய வீரச் செயல்களையும் தம் வாய் மொழியால் பாடி வணங்க அவற்றைக் கேட்டு உகந்தருளுபவர், ஐயாறுடைய ஐயன்.

--------------------------------------------------------------------------------

திருவாசகம்

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை
   
யார்கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
   
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
   
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
   
கண்டுகொள்ளே (8.5.1)

 

எல்லாவற்றையும் உடையவனே! உனது, மணம் நிறைந்த திருவடியைப் பெறுதற்கு என் உடல் புளகித்து, நடுநடுங்கி கைகளைத் தலைமேல் வைத்து, கண்களில் நீர் வடிந்து, மனம் புழுங்கி, பொய்நீங்கி, உன்னைக் குறித்து வணங்கித் துதிக்கின்ற ஒழுக்கத்தை நான் தளர விட மாட்டேன். ஆதலால் எனது நிலைமையை, நீ நோக்கி உன் அடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்வாயாக!



( தொடரும் )

copy right to the respective web sites.


No comments:

Post a Comment