Thursday, June 23, 2022

தமிழமுது 2

 திருக்குறள்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் (10)

 

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர்களால் கடக்க இயலாது.

----------------------------------------------------------------------------

நாலடியார்

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு. (13)


பேச முடியாது சொல் தடுமாறி, கோல் ஊன்றித் தள்ளாடும் நடையினராய்ப் பற்களும் வீழ்ந்துபட, தமது உடலைப் பிறர் பார்த்து எள்ளி நகையாடுமாறு இல்வாழ்க்கையில் பெரிதும் ஈடுபாடு கொண்டு, சிற்றின்ப ஆசையிலே மூழ்கிக் கிடக்கும் அற்ப அறிவீனர்க்குப் பேரின்பமாகிய வீட்டு நெறியிலே செல்லும் வகை இல்லை.


----------------------------------------------------------------------------

தேவாரம்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே
. (1.1.1)

 

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!


( தொடரும் )

copy right to the respective web sites.


1 comment: