Sunday, February 3, 2019

பொன்மாலைப் பொழுதில் 47


358. நம் காதல் வரலாற்றுக்கு அங்கங்கு நினைவுச் சின்னங்கள் உண்டே.
முதலில் பார்த்துக்கொண்டது தேர் ரத வீதி முக்கில்.
பேசிவிட்டு ஓடினாயே, பாட்டு வாத்தியார் வீட்டின் அருகில் சந்தில்
சிரித்து சிரித்துப் பழகியதெல்லாம் தெப்பக்குளம் மறைவில்.
முதல் சண்டை ரெட்டியார் கடை வாசலில்.
பின் சமாதானமாகி சாக்லேட் வாங்கித் தந்ததும் அங்கேயே தான்.
விரல் கோர்த்து நின்றது மீனாட்சி கல்யாண மண்டபத்தில்.
மேலே எச்சரிக்கை என்று எழுத மறந்து போனதால் என்ன நடந்தததென்று சொல்ல முடியாது போனது,
காமராஜ் பூங்காவில் *ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்*


357. உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து போகிறோம்.
சேர்த்து வைத்ததை எண்ணக்கூட முடியாது போய்ச் சேருகிறோம்.
நாளைய தேவைக்கு என்று இன்று வாழ மறக்கிறோம்.
எதுவும் நிரந்தரமில்லை என்பதை எண்ண மறுக்கிறோம்.
கூடி வாழ்வோம், கொடுத்து மகிழ்வோம்.
எதையும் கொண்டு வரவில்லை, எதுவும் கூட வரப்போவதுமில்லை.
இருக்கும் வரை சுயநலமின்றி முடிந்த வரை பொதுநலக் கொள்கையோடு;
இன்று சுகமாய்த் தெரிவது நாளையே சுமையாய் மாறும்.
ஆசைப்பட்டு, கிட்டியதும் மறந்து, அடுத்தெது என்று மனம் அலையும்.
வாழ்க்கையே இவ்வளவுதான்
எல்லாம் முடிந்து போகையில் ஆறடி
இருக்கையில் *நடந்தால் இரண்டடி*


356. சித்திரையைச் சேர்ந்து வரும் பௌர்ணமி சிறந்த நாளாகும்.
வைகாசியின் விசாக நட்சத்திரம் வடிவேலனுக்கு விசேஷ தினம்.
ஆடியின் வெள்ளி, அமாவாசை இரண்டும் அமர்க்களமாகும்.
அவிட்ட நக்ஷ்த்திரம் ஆவணியில் சேர்ந்து வர அனைத்திற்கும் சுபம்.
புரட்டாசியில் வரும் சனி விஷ்ணு பகவானுக்குப் ப்ரியமான தினம்.
கார்த்திகை பௌர்ணமி சிவன், முருகன் இருவருக்கும் விசேஷம்.
மார்கழி திருவாதிரையில் களி படைத்து சிவனை வழிபட உசிதம்.
தை பூசம் அன்று முருகனை எண்ண, வணங்க முக்தி கிட்டும்.
இவ்வாறு இன்று இது இதற்கு என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பக்ஷே எதெங்கிலும் திவசம் என்டே மனோகரமாய பெங்குட்டி, புஷ்பம்,
*சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம்*


355. துஷ்யந்தன் சகுந்தலையை மறந்தது
துர்வாசரின் கோபத்தால்.
ப்ரம்மாஸ்திர மந்திரத்தை கர்ணன் மறந்தது
பரசுராமரின் சாபத்தால்.
இராவணன் வீழ்த்தப்பட்டது
வாழ்வின் ஒழுக்கத்தை மறந்ததால்.
கூடஇருப்போர் தன்னிலை மறந்து ஆடியது
கண்ணன் குழலிசையால்.
ஆக மொத்தம், மறதியால் நன்மை தீமை இரண்டும் இருக்கு.
என்னைப் பொறுத்தவரை நான் என் கவலை மறந்து ஈர்க்கப்படுவது
*உன் சிரிப்பினில் ...*


354. இவளா, இது சரியா? என்றென்னுள் மீண்டும் மீண்டும் ஒரு விவாதம்.
இதுபோல் இதுவரை இருந்ததில்லை தடுமாற்றம்.
மனதில் குழப்பம் தயக்கம் எனில்
இரவில் ஏது உறக்கம்,
காலை கண் விழிக்கையில் நல்ல சகுனம்.
கனவில் கண்டேனே ராதை கண்ணன் திருவுருவம்.
எங்கோ ஒலிக்க, காதில் விழும் ருத்ரம்.
புரிந்தது, நழுவ விடக்கூடாத நல்ல ஒரு  சந்தர்ப்பம்
இன்று பேசி விடவேணுமென்ற உத்வேகம்.
அவள் ஒரு கவிதையில் 'குடையாய் வருவேன்' என்று சொன்ன ஞாபகம்
தைரியமாய்க் கிளம்ப, துணையாய் மின்னல் இடி முழக்கம்.
தலை உயர்த்தி வான் நோக்க
*அதோ மேக ஊர்வலம்*


353. உலகிலேயே இரண்டாவது பழமையான நகராட்சி (1687).
தடை சொல்ல கழகம்லா அப்போ இல்லாததால இது உருவாச்சி.

ஆசியாலேயே பெர்சு சிருசேரி ஐடி பார்க்கு.
ஒருதபா எட்டி நின்னு பாத்தாலே சோக்கா இருக்கு.

ஜன நடமாட்டம் அதிகமிருக்கும் ஊரு, ரங்கநாதன் தெரு போய் பாரு, ஆய்டுவே நீ பேஜாரு.

சதா சாதா கட்ல போட மெரினா கீது.
தள்ளிகினு போணுமா மாபலிபுரம்;

நாமிணைந்து நாசமாக்கிய கூவம்.
என் செய்யினும் தீராது பாவம்.

மால்னா ஃபோனிக்ஸ்.
க்ரிகெட்னா சேப்பாக் (1916).
பஸ்ஸுக்கு கோயம்பேடு.
ட்ராஃபிக் ல வர்றது பெரும்பாடு.

கய்த கஸ்மாலம் சோமாரி ன்னு கத்துவா,  கண்டுகாத போ நீ.

இன்னு இருக்கு ஏராளம்,
கூட வர்றியா சவுண்டு குடு இல்லியா கம்முனு கெட, நான்
*மெட்ராஸ சுத்திப் பாக்க போறேன்*


352. எப்பொழுதும் போல் நாராயணன் நாமத்தை நா நவில்ந்தபடியிருக்க,
அருகில் சப்தம் கூர்ந்து கவனிக்க, கொஞ்ச தூரத்தில் வெள்ளைப் பரியில் இளைஞன் ஒருவன்;

பாற்கடலில் குளிப்பானோ, நல்ல நிறம். நிறைய தலைமுடி, தின் தோள்கள், ஆயிரம் ஆனைகளை அடக்கியாளும் வல்லமை உள்ளவனாய்த் தென்பட்டான்.

சிகப்புப் பட்டு, நீல அங்கவஸ்திரம்.
ஆரென்று அறிந்து கொள்ள ஆர்வம் எழ, வேகமாய் விரைந்தான், விடாது விரட்டினேன்.
மலையேற்றம் நீரோடை எல்லாம் கடக்க, கூடவே தொடர்ந்தேன்.

கண்ணிமைக்கும் நேரம் தான் காளை அவன் பறந்தான்.
இடது வலது நாற்புரம் தேடியும் கண்ணில் சிக்காது மறைந்தான்.
மந்திரவாதியோ? மாயவனோ? புரியாது தவித்தேன்.

சோர்ந்து நான் நிற்க, ஒரு கை பின்னாலிருந்து என் இடை பற்ற,
திடிக்கிட்டு நான் திமிர
அவ்வமயம் மின்னல் வெட்ட,
அழகு வதனம் கண்டு விட எண்ண
பூட்டிய கண்கள் திறந்து கொள்ள
இதுவரை தெரிந்தவை மறைய
*ஒரு நாள் ஒரு கனவு* 

No comments:

Post a Comment