Tuesday, December 25, 2018

பொன்மாலைப் பொழுதில் 44


337. மண்ணில் பயிர் உயிர் வாழ முடிவதெல்லாம்
மழை பெய்யும் வரைதான்.
கதை கவிதை எல்லாம்
கற்பனை காட்டாற்று வெள்ளமாய் கரை புரண்டு ஓடும் வரையில் தான்.
நல்ல சாப்பாடு தூய அன்பு இதெல்லாம்
தாய் என்பவள் தரணியில் வாழும் வரை தான்.
பேச்சில் பணிவு கண்ணில் கனிவு எல்லாம்
காரியம் ஆகும் வரை மட்டும் தான்.
என் ஆட்டம் அலட்டல் எல்லாம்
சிநேகமே நீ என்னோடு இருக்கும் வரைதான்,
எனை விட்டுப்
*போகாதே ... போகாதே*

336. பிரச்சனைகள் ஏராளம்,
சிக்கல்கள் தாராளம்;
யாருக்குத்தான் துன்பமில்லை என்று அறிவு கேட்கிறது; மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
எந்த பிறப்பில் என்ன பாவம் செய்தேனோ, அனுபவிக்கிறேன்.
யாரீந்த சாபமோ, சிரமப்படுகிறேன்.
மனம் இசையாது எது நடந்தாலும் உடனே வருந்தி, அழுகிறேன், ஆத்திரப்படுகிறேன்.
அவசரமாய் என்னவோ எதையோ ஏனோதானோவென்று செய்து என் வெறுப்பை வெளிகாட்டுகிறேன்.
சில நேரம் கழித்து என்னசெய்தேன் என்றே புரியாது தடுமாறுகிறேன். மறந்து முழிக்கிறேன்;
காரணமில்லாமல் காரியம் இல்லை என்று கற்றறிந்த போதும் ...
இப்போது கூட ... என் நெஞ்சின் ஏக்கத்தை ஒரு சில வார்த்தைகளில் கவிதையாய் ...
இங்குதானே வைத்தேன்,
*எங்கே எனது கவிதை ?*

335. முடிந்தவரை கொடை, தானம் செய்வதுண்டு,
எனினும் கர்ணன் இல்லை நான்;
இலக்கு பார்த்து அடிப்பதுண்டு;
ஆனாலும் அர்ச்சுனன் அளவிற்கு இல்லை நான்;
கவாஸ்கர்  டெண்டுல்கர் ல்லாம் தெரியுமென்ற போதும்
கால்பந்து விளையாடியதில்லை நான்.
வாலி வைரமுத்து அளவிற்கில்லை எனினும்
கவிதை என்ற பெயரில் ஏதேனும் கிறுக்குபவன் நான்.
அட, சின்னதாய்க் கூட கோவில் எதுவும் கட்டியதில்லை
எனினும்  *ராஜ ராஜ சோழன் நான்*

334. சிரித்தால், கூட சேர்ந்து சிரிப்பேன், சிரிக்க வைத்து மகிழ்வேன்.
கெஞ்சினால் விட்டுத் தருவேன்.
கோபப்படுத்தினால் எரித்திடுவேன்.
எதிரில் நின்று மோத, ஒரு கை பார்க்காது விடமாட்டேன்;
யாராயிருந்தாலும் சரி;
பொய் பிடிக்காது, புகை போதை பழக்கமிருந்தால் விரட்டி விடுவேன்.
காலில் விழச் சொல்லவில்லை; ஆனால் விழவைக்க எண்ணினால் என்னிடமிருந்து தப்ப வழியில்லை.
மதியாரை மிதித்திடுவேன், பிடித்தாரோடு மட்டும் பழகுவேன்.
உனக்குப் பிடித்திருக்கா? சமாளிக்க முடியும் என்ற தெகிரியம் இருக்கா?
பார்க்கையில் மட்டும் சாந்தம்; பேசிப் பழக புரியும் நான் சரியான *சண்டை கோழி*


333. சொல்வதைக் கேட்க மறுக்கிறாய்
அதிகம் பேசினால் முறைக்கிறாய்
நவில்வது நாட்டு நன்மைக்குத்தான் என்றால் ஏற்க மறுக்கிறாய்.

ஸ்வர ஆலாபனை பூஞ்சோலையில் செய்வதால், இப்போது பார், குயில்கள் கூவ மறந்து உன் குரல் கேட்கக் காத்திருக்கின்றன.

பரத நாட்டியம் மாடியில் ஆடினால் பாதகமா ?
தோட்டத்தில் நீ ஆட அதைக் கண்டு ரசித்து மனம் லயித்து மயில்கள் மயங்கிக் கிடக்கின்றன.

ஏரிக்கரையிலெதற்கு நடைபயிற்சி?
அன்னம் உண்ணாது அன்னப் பட்சிகள் உன் அழகு நடை காண ஆவலோடு அமர்ந்திருக்கின்றன.

அடுத்து இந்த...வீணை வாசிப்பு... நாளையே உன் விரல்கள் மீட்டினால் மட்டுமே இசைப்போம் என்று வீணைகள் போராடினால்?

சரி சரி இப்போது என்ன செய்வது?
புல்லாங்குழல் ஊதுவதால் வந்தது.
கடன் கேட்கிறதே, மருதாணி
*உன் உதட்டோரச் சிவப்பை*

332. கட்டுமஸ்தான் உடம்பெல்லாம் கனவில் மட்டும் தான்.
வம்பு தும்பு எதிலும் ஈடுபட தெம்பு லேது.
நான் உண்டு, என் வேலையுண்டு என்று இருந்துவிடுவேன்.
என்னவோ அவளைப் பார்த்தால் மட்டும் ஒரு ... ஒரு ... ஈர்ப்பு ?
தேவையா என்ற கேள்வி, இவள் இல்லாது வாழ்வே வீண் இல்லையா என்று பதில் - எனக்குள் விவாதம்;
வரும் போதும் போகும் போதும் மெல்ல ஒரு பூஞ்சிரிப்பு.
சின்னச் சின்ன பரிமாறல்கள், பெரியப் பெரிய மாற்றங்கள்.
திடீர்ப் பின்னடைவு ... முழு மூச்சில் முன்னால் பாய உதவுமோ?
திந்நவேலியில் ஒரு திருமணம், திரும்ப மூன்று நாளாகும் என்று சொல்லியிருந்தாள்.
எந்நிலையை என்னென்று சொல்வேன் ஏதென்று சொல்வேன்.
எனை எண்ணியே ஏந்திழையாள் ஏங்குவாளோ என்று தவித்தேன்.
வனவாசம் முடிந்து வஞ்சி அவள் வருகைக்காக காத்திருக்கையில்,
எந்த நேரமும் எதிர்படலாம் என்று எண்ணுயிருக்கையில்,
பின்னாலிருந்து என் கண்ணை யாரே மூட,
வளையலோசை கேட்க,
மருதாணி வாசம் எனை மயக்க,
பரிதவிப்பு நீங்கி பரவசம் பிறக்க,
என் உள்ளுணர்வு உணர்ந்துக் கூவியது *கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை*.

331. அடேய் தெரியுமடா உன்னை.
எப்போது எப்படி எப்படி நீ மாற்றிப் பேசுவாய் என்றறியேனா என்ன ?
'நல்லாருக்கு' என்றால் 'உனக்குப் பிடிக்குமென்று தான்' என்பாய்.
'எப்படி இப்படியெல்லாம்' என்று சொன்னால் 'எல்லாம் உன்னோடு பழகுவதாலே தான்' என்பாய்.
ஆளுக்கேற்றவாறு அரற்றுவாய்.
எது அணிந்திருந்தாலும் இத்தனை அழகு நீ அணிவதால் தானென்பாய்
நீ தொட்டுத் தந்ததால் இத் திரவம் அமிர்தமாய் இனிக்குதென்பாய்.
அறிவேனடா,  அழகா,
உன் தாய் யசோதை இல்லை
நீ யாதவ குலத்தில் பிறக்கவில்லை
உலகில் எங்கு வசித்தாலும் நீ உன் லீலையை விடுவதில்லை.
*கோகுலத்துக் கண்ணா*

329. மனிதனை மனிதனாக்கும்,
மனதளவிலும் முழுமையாக்கும்.
கல்லைக் கனியாக்கும்,
முள்ளை முல்லையாக்கும்.

கண்ணனோ காதரோ தப்பமுடியாது,
ஆணவத்தால் காரியம் எதுவும் செல்லுபடியாகாது.

மீராவும் ஸாராவும் மேரியும் மண்ணைப் பார்த்தே நடந்தாலும் மனதை எங்கோ தொலைக்கக்கூடும்.
கோவிலில் கண்கள் மோதும் காலம் வரும்.
சர்ச்சிலேயே கூட சம்மதம் சொல்ல நேரம் வரும்.

குருநானக் குருவாயூர் வரலாம், சேவை செய்யலாம்.
ஐயங்கார் ஊரெல்லையிலிருக்கும் ஐயனாரிடம் வரம் கேட்கலாம்.

பூணுல் அறுப்பதால் நீ இப் புவியை ஆள்ந்து விடப் போவதில்லை.
ஜாதி மறந்ததால் தலை வெடித்து செத்து விடப் போவதில்லை

தர்காவினுள் துர்கா வரலாம்.
மும்தாஜ் மண்டியிட்டு மேரி மாதாவைத் தொழலாம்.

ராபர்ட் ராமநவமி அனுஷ்டிக்கலாம்.
வெஜ்பிரியாணி சாப்பிட்டபடி வெங்கட் ஃபரிதாவைப் பார்த்துப் புன்னகைக்கலாம்.

மனிதனாய் வாழ்வதே முக்கியம்.
சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் தேவைக்கேற்ப மாறுபடும்.

காதலெனும் வேதம், மந்திரம்
*சாதி மதமெனும் வியாதியைப் போக்கிடும்*.

No comments:

Post a Comment