344. மலராய், செடியாய், நீ வந்தால்
மண்ணாய் மாறி உன் வேர் பற்றிக்கொள்கிறேன்.
அலையாய் ஆடி ஆடி வர
கரையாய் நின்று உனைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறேன்.
பறவையாகு, இறக்கை விரி,
காற்றாய் மாறி நீ பறக்க துணை நிற்கிறேன்.
வானவில்லாய் வானை அலங்கரி,
நீர்த்துளியாய் விழுந்து உனை தோற்றுவிக்கிறேன்.
நிலவாய்த் தோன்று, ஒளி தா,
தள்ளி நின்று ரசிக்க *மேகமாய் வந்து போகிறேன்*.
343. யோசித்துப் பார்க்கிறேன்
ஆச்சரியப்பட்டுப் போகிறேன்.
இதுவரை எத்தனை வேடங்கள் நீ ஏற்றுக் கொண்டிருக்கிறாய்.
ஆரம்பத்திலேயே கொஞ்சம் பயம் கலந்த கூச்சத்தோடுதான் பழகினாய் - பள்ளித் தோழனாய்,
காண்கையில் காணாது காணாப் பொழுது கண்டு - ஒரு கள்வனாய்.
எனக்குத் தெரியாததைக் கற்றுத் தருகையில் - ஆசிரியனாய்,
நான் ஏதும் உளரினால் வாய் மூடிக் கேட்டுக் கொள்ளும் - மாணவனாய்,
பல சமயங்களில் என் சுமைகளைச் சுமந்தபடி - கூலியாய்,
நான் சோர்ந்திருக்கையில் எனை சிரிக்க வைக்கும் - விகடகவியாய்,
மெல்ல மெல்ல என் நெஞ்சில் ஊடுருவி நிரந்தரமாய் ஓரிடம் பறித்துக் கொண்டு - காதலனாய்,
உனைப்போலொருவனில்லை, என் மடியிலுனைக் கிடத்திப் பாடுவேன்
*அன்பே அன்பே நீ என் பிள்ளை*
342. டேய் ... வெறும் பேச்சு மட்டும் தான், செயலில் ஒன்றுமில்லை நீ.
தஞ்சாவூரான், மாவு இல்லாமலேயே அல்வா கிண்டுவாய், தெரியாதா?
எப்போதும் என் ஞாபகம், எங்கு பார்த்தாலும் என் முகம் என்பாய்.
இதோ இங்கு இப்போது ... உன் முன்னால் தானே நிற்கின்றேன்.
என்ன செய்யப் போகிறாய்? சொல்.
தயாராய் வந்திருக்கிறேன், கேள். தரவேண்டியதைத் தந்துப் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்.
இன்னும் சந்தேகமெதற்கு?
பல ஆண்டுகளாய்க் காத்திருக்கு,
புதிதாய் இன்று தான் பூத்தது போல் புலர்ந்திருக்கு.
கரடி ஏதும் காலடி வைப்பதற்குள், சாகசம் காட்டிடு.
உன் சிவ *பூஜைக்கேத்தப் பூவிது*
341. இப்பொழுதெல்லாம் இப்படித்தான்
நித்தியப்படி உன் நினைவு தான்.
எதைச் செய்ய எண்ணினாலும் எதிரில் நீ நிற்கிறாய்.
காலையில் முத்தம் தந்து எழுப்பி, நான் குளிக்கையில் நனைகிறாய்.
உடை அணிய விடாது உருண்டு புரண்டு உசுப்பி விளையாடுகிறாய்.
பேசி சிரித்துக்கொண்டே கூட நடக்கிறாய்; என் கவிதைகளின் சில வரிகளை ஒப்பித்து கண்டபடி திட்டுகிறாய்.
சில சமயம் பழித்து, வாய் சுழித்து, முறைத்து, சோம்பல் முறித்து கண்ணடித்து, காதினுள் பேசி ...
பிரிந்திருக்கையில் தான் புரிகிறது
நீ அருகிலில்லாதது எத்தனை அவத்தை என்பது.
தனியே ஏதும் செய்ய முடியாது தவிக்கும் என்னுள்
*எப்போதும் உன் ஞாபகம்*
340. அன்பு அமைதி வேண்டும்
அடங்கும் வரை அடக்கம் வேண்டும்
பதவி அதிகாரத்தால் எதையும் தேவைக்கேற்ப வளைக்கக் கூடாது.
அளவுக்குஅதிகமான ஆட்டம் ஆபத்தை விளைவிக்கும்.
ஆள் அனுபவி வாழ் வாழவிடு
எத்தனை இருந்தாலும் எதுவும் கூட வராது.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
'நல்லது, அடுத்து?' என்று ஊர் எண்ணக் கூடாது.
எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பது முறையாகுமா?
*கண் போன போக்கிலே கால் போகலாமா ?*
339. சரி போதும்
இன்னும் எத்தனை நாள் தான்
ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருக்கப் போகிறோம்.
இன்னும் எத்தனை நாள் தான்
பார்க்கையில் பிடிக்காததைப் போலவே நடிக்கப் போகிறோம்.
இதுவரை நான் உன் மனம் இணங்கும்
செயல்களை மட்டுமே செய்து வருகிறேன்.
எனக்குப் பிடிக்காத எதையும் நீ செய்வதாய்த் தோன்றவில்லை.
மோதிக்கொண்டது போதும்.
வாரியணைத்துக் கொள்வோம்.
மறைத்து மறைத்து மனதுள் மலையாய் மாறியிருப்பதை
மடுவாக்கி மகிழ்வோம்.
வேறு வேறாய்ப் போன நம் பாதையை
ஒரு புள்ளியில் இணைத்திடுவோம்.
அருகில் வா, கவலை மற,
என் மடியில் உறங்கு,
என்னோடு நீ, உன்னோடு நான்
நம்மோடு ... நீலக் கடல்
தள்ளாடும் மேகம்
*தாலாட்டுதே ... வானம்*
338. கேட்காமல் கிடைத்ததை இளப்பாய் எண்ணலாம்.
கேட்டது கிட்டவில்லை என்று புலம்பலாம்.
அதாவது தேவை தகைக்காத போது
தேவையற்றது தகைக்கும் போதும்
யாரோ எங்கோ இருந்துகொண்டு மாற்றியமைப்பது புரிய வேண்டும்.
அந்த யாரோ தான் இறைவன் என்பதை உணர வேண்டும்.
அவன் ஆட்டிவிக்க ஆடி, நடித்து,
அனுமதித்தால் அனுபவிக்கிறோம்.
கருவி நாம், காரியம் அவனது;
உறக்குகிறோம் கனவு அவனுது.
எது எப்போது எதுவரை என்பது எல்லாம் அவன் திட்டமிடுகிறான்.
நாடகத்தை நடிக்கிறோம் என்பதை மறந்து ஆடித்திரிகிறோம்.
அறிந்து கொள்வோம், உலகில் எதுவும் நிலையில்லாதது.
புரிந்து கொள்வோம், கலைந்து போகும் மேகம் போன்றது
நாம் *கனவு காணும் வாழ்க்கை*.
No comments:
Post a Comment