321. கொஞ்ச நாள் முன்பு வரை அவன் என் பின்னால் தான் அலைந்தான்.
காலையில் என் கோலம் காண வருவான்.
பார்வையாலேயே பாவை நெஞ்சை பறித்தான்.
அகநானூறு புறநானூறெல்லாம் அறிந்தவன் போல் அளப்பான்.
சிரிக்கச் சிரிக்கப் பேசுவான்;
ஏதாவது காரணம் சொல்லி இங்கு
அங்கு தொட்டு நோண்டுவான்.
ஒரே விசயத்தை எல்லோரிடமும் உளறிவிட்டு என்னிடம் மட்டும் இது பரம ரகசியம் என்பான்.
வைரமுத்து கவிதைகளை வரி மாறாது ஒப்பிப்பான்; வாலியின் வார்த்தை ஜாலத்தை ரசித்து சிலாகிப்பான்.
இன்று என் அருகில் இல்லாது எங்கோ இருக்கான், தெரியும்.
தன் எண்ணத்தில் எனை மறக்க முடியாதுத் தவிப்பான், பாவம்.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள்
எனைத் தேடி அவன் வரு *வான் வருவான் வருவான்*
320. அடேய் என் இனியக் காதலா,
அறிவேனடா உன்னைப் பற்றி சில பல விஷயங்கள்.
இத்தனை நாள் பழகியிருக்க, பிடிபடாதா உன் சிந்தனைகள்?
நீ எப்போது எப்படி பேசுவாய் என்று சொல்ல முடியும் என்னால்.
நீ யோசிக்கும் விதத்திலிருந்தே
எதைப்பற்றி என்று யூகிக்க முடியும் என்னால்.
உன் கள்ளப் பார்வை சொல்லிடும்
உன் அடுத்த கட்ட நடவடிக்கை எதை நோக்கி இருக்குமென்று.
உன்னைப் பற்றி இத்தனையும் நான் உணர்ந்திருக்கையில்,
இன்று இங்கு நான் அருகிலேயே இருக்கையில்,
அந்தப் பெண்ணை இப்படி மேய்கிறாயே, அழகா, புரிந்து கொள்.
*கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா ... கண்களுக்குச் சொந்தமில்லை*
319. என்னருமைக் காதலா,
என் பல முதல் களின் மூலவா,
எங்கு சென்றாய் ?
எப்படி இருக்கிறாய் ?
*
உன்னை முழுவதுமாய் நம்பினேன்
நீயே என் உயிராய் உறவாய் எண்ணி வந்தேன்.
நீயும் அப்படிதானேடா பழகினாய்,
திடீரென்று என்னாயிற்று உனக்கு?
விலகியிருப்பது எதற்கு விளக்கு.
*
நிழலாய் நீ தொடர்ந்ததால் தானே நிம்மதியாய் நான் இருந்தேன்.
கனவில் நீ வந்ததால் தானே கண்மூடி நான் உறங்கினேன்.
*
இப்போதெல்லாம் உனைக் காணாது கலங்குகிறேன்.
அலையினிடையில் அகப்பட்டக் கலமாய் அல்லாடுகிறேன்.
தண்ணீரில் தத்தளிக்கும் மானாய்
தரையில் மீனாய்த் துடிக்கிறேன்.
அருகில் நீ இல்லாது, *காதலா ... காதலா காதலால் தவிக்கிறேன்.*
318. ஒரு தொடர்வண்டிக்கு இரண்டு தண்டவாளங்கள், தேவை தானே.
ஏக் மார் தோ துக்கடா, நல்ல நகைச்சுவை.
ஒரே பூவில் காய்க்கும் இரண்டு கனிகள், அதிசயம்.
ஒரு பிள்ளைக்கு இரண்டு தாய், சாத்தியமே.
ஒரு பாடலில் இரண்டு ராகம், இசை வல்லுனர்கட்கு எளிமையானது.
ஒரு பதில், இரண்டு அர்த்தம் சர்வ சாதாரணம்.
ஆனால் ... ஆனால்
*ஓ வெண்ணிலா, இரு வானிலா?*
317. சிறு தோட்டம், பச்சை பச்சையாய் இலை தழைகள்
காற்றைச் சுத்தப்படுத்த துளசிசெடி, நாற்புரமும்.
ப்ராணவாயுவிற்காக வேப்பமரம்
கூடவே தென்னை வாழை;
செடி கொடிகள், தக்காளி அவரை
பாகற்கா பெல்லாரி கருவேப்பிலை
மல்லிப்பூ, கனகாம்பரம்
நாய் ... ஆமாம் என்னை விடுத்து இன்னொன்று; நீ சிரிப்பை அடக்கு.
நாலைந்து கோழி, உண்பதில்லை வளர்க்கக் கூடாதா என்ன? கூடவே பசு மாடு;
ஓரத்தில் கிணறு, புல் மண் தரை.
நடுவில் சின்னதாய் ஒரு ஓட்டு வீடு.
வீட்டில் இரு உடல், ஒரு உயிர், அதில்
*நீ பாதி, நான் பாதி கண்ணே*
316. தொடங்கியதெல்லாம் முடிய வேண்டும் என்பது உலக நியதி.
ஆடியதெல்லாம் அடங்க வேண்டும் என்பது அடிப்படை விதி.
தூங்கிக்கொண்டு திரிந்தது எல்லாம் இறங்கியாகணும் இனி.
யாருக்கும் தெரியாது செய்த பாவங்கள்
கண் முன் நின்று கணக்கு தீர்க்கும் நேரம்.
தெரிந்தேப் புரிந்த துரோகங்கள், கூடவேப் பெற்ற சாபங்கள்
பழி வாங்கும் படலம்.
ஓடி ஒளியவும் முடியாது, தப்பித்துச் செல்லவும் வழி கிடையாது.
ஆணவமும் ஆடம்பரமும் செல்லாது
எல்லாம் முடிந்தது, போதும் இனி ~போய்வரு~ போகிறேன், இதோ பாடிவிட்டேன் *ஜன கன மன*
314. அருமையான கிராமம்
எளிமையான மனிதர்கள்
பாசத்திற்கு பஞ்சமில்லை
இருப்பதை ஈந்து இல்லையென்று சொல்லாது வாழ்பவர்கள்
மழையில் ஆடி பாடி நெல்லிக்காய் கிழங்கு சோளம் நுங்கு தின்று,
இளநீர் மோர் குடித்து ஆரோக்யமாய் வாழ்ந்தோம்.
ஆடு மாடு கோழிகளுக்கு பெயரிட்டு தோழியராக்கி விளையாடினோம்.
அண்ணே அக்கா அத்தே என்றே பாசத்தோடு அழைத்துப் பழகி ...
எல்லாம் பழைய கதை ஆனது.
பணம் தேடி பயணப்பட்டு பாரம்பரியம் மறந்து ...
போதும் என்று முடிவெடுத்து விட்டேன்.
பெற்றதை விட இழந்தது அதிகம் என்பதை உணர்ந்து விட்டேன்.
பணம் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது என்பது புரிந்தது.
இழந்த என் பழைய வாழ்க்கையை தேடி எடுக்கப் போகிறேன்.
மாறாத என் மண் மணத்தை நோக்கிப் பயணப்படப்போகிறேன்.
இன்முகத்தோடு எனை வரவேற்கும்,
இருப்பதைக் கொண்டு இனி சந்தோஷமாய் வாழப்போகிறேன்
என் *தென்கிழக்குச் சீமையிலே*
No comments:
Post a Comment