328. எத்தனை உதவிகள்... எதைச் சொல்ல, எதை மறக்க, மறைக்க.
அழைக்க நினைக்கும் போதே அருகில் வந்து நிற்பாயே;
என்ன வேணுமென்று கேட்டு செய்வாயே;
இன்றாவது என் நன்றியைத் தெரிவிக்க அனுமதி தருவாயா?
*
உனக்காக எல்லாம் உனக்காக.
மாவு பிசைந்து என் கையால் தட்டி, பொரித்து தேன்குழல், உனக்காக,
தேங்காய் போளி, முதல் முறையாக, என் கைபட, இதுவும் உனக்காக,
பாசமாய் பாசந்தி, என் கையால், கடையில் வாங்கியது, உனக்காக.
இனிப்பு எப்படி இருந்தாலும் பிடிக்கும் தானே, லட்டு செய்ய ஆரம்பித்து பூந்தியாகி .. உனக்காக.
மறந்திருக்கமாட்டாய், என் மடியில் படுத்துக் கொண்டு நிலவை ரசித்து,
கவிதை படித்து கனவு கண்டு ...
இன்று இந்தப் பௌர்ணமியில்,
சீக்கிரம் வா, காத்திருக்கிறேன்,
நிறுத்தி வைத்திருக்கிறேன், பிடித்து வைத்திருக்கிறேன்
உனக்காக *அந்த நிலாவத் தான்*
327. யோசித்துப் பார்க்கிறேன்,
நாம் எதைப்பற்றி இதுவரை விவாதித்ததே இல்லை என்று.
எனக்கென்னவோ நாம் பேசாத விடயங்களே இல்லை என்றுத் தோன்றுகிறது.
எந்த விஷயமெனினும் சரி எது தவறு எது என்று உன்னால் சொல்ல முடிகிறது.
படர்ந்த உன் அறிவைக் கண்டு நான் பலமுறை ப்ரமித்துப் போவதுண்டு.
உன்னோடுப் பழகிப் பழகி உன் அறிவின் முதிர்ச்சி என்னுள்ளும் தட்டுப்படுகிறது.
இன்று எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீ என்ன செய்வாய் என்றெண்ணுகிறேன்.
இதோ இப்போது கூட நீ அருகில் அமர்ந்து அல்லாடும் என் நெஞ்சை ஆற்றுவதாய் உணர்கிறேன்.
கண் மூடிக் கிடக்க, இங்கே தான் நீ அருகில் எங்கோ இருந்து கொண்டு *ஆனந்த யாழை மீட்டுகிறாய்*.
326. தாள லயத்தோடு இணையும் ஒசைகள் எல்லாம் சங்கீதம்.
ஜதியோடு இணைந்த அசைவுகள் எல்லாம் நர்த்தனம்.
விவரம் தெரியாதவர்களுக்கு மட்டும் இது விநோதம்.
உண்மையில் இந்த ஆட்டம் பாட்டு எல்லாம் ஆண்டவன் அனுக்ரகம்.
நல்ல சரீரம் தரும் சாரீரம், நாட்டியம் தினம் பார்க்க கேட்க சுகம்.
இது முன் ஜென்மப் பலன், வரம், வெகுமானம்.
வாழ்வை தூய்மையாக்கி ஆனந்தமாய் மாற்றும் ரகசியம்.
மறந்து போகும் தேவையற்ற விசனம்.
புரிந்தால் புண்ணியம், புரியாது போனால் பாக்கியம்
கற்றுத் தந்தது *வேதம்,*
*அனுவிலும் ஒரு நாதம்*
325. திருப்பாவை தந்தருளிய ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம்.
ஐய்யப்ப சாமியின் சபரிமலைக்கு மாலை அணிய ஐப்பசி மாதம்.
மது மாமிசம் சேர்க்காது விரதம் இருக்க மார்கழி புரட்டாசி மாதம்.
உழைத்து விளைந்த வயலில் அறுவடை ஆவது தை மாதம்.
குதிரையில் கள்ளழகர் மதுரை வருவது சித்திரை மாதம்.
காரணமறியாது கணவன் மனைவி பிரிந்து இருப்பது ஆடி மாதம்.
நீ எனைக் காண எந்த மாதம் வந்தாலும் அது எனக்கு
*மன்மத மாதம்*.
324. வண்டு தேடி வருவது, மலர்ந்து
மலர் மணம் வீசும் போது தான்.
இடியும் மின்னலும் இணைவது மழை வெளுத்து வாங்கும் போது தான்.
உணவு தேடி உயிர்கள் அலைவது
பசி எடுக்கும் வேளையில் தான்.
பிரார்த்தனை பக்தி என்பதெல்லாம்
வேதனை ஏதும் வந்த பின்பு தான்.
ஆடை அவசியமாவது வெட்கம் நெஞ்சினுள் நுழைந்த பின்பு தான்.
ஏமாற்றம் என்பதெல்லாம் எதிர்பார்ப்பு ஏற்பட்ட பின்பு தான்.
எனை நான் கண்டு தெளிந்தது
*உன்னைக் கண்ட பின்பு தான்.*
323.. இதுவரை ஒரு சில இடங்களுக்கு உங்களையும் அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிட்டியது, நன்றி.
இன்று ஒரு இடம் போகிறோம்.
கொஞ்சம் தைரியத்தைக் கூட எடுத்துக் கொள்ளவும்.
பயமில்லாத மாதிரி நடித்தால் போதும், அதுவே தைரியம் ஆகும்.
அமைதியாக வரவும், காது கண் திறந்தபடி, ~வாய் மூடியிருக்கட்டும்~.
இதோ இதுதான் அந்த குகை, இருட்டு தான்; ப..பயப்படக்கூடாது.
நொம்ப பயத்தால் கீழே ஓடுவது புழுவா பூச்சியா பூரானா என்று தெரியாது, பார்..ர்த்து வரவும்.
என்ன? என்னவோ கடிச்சதா ? சேசே ... பாம் ... ல்லாம் இருக்காது; பேடிக்கண்டா.
மலேஷியா ஐ மீன் மலேரியாக் கொசுவாயிருக்கும்.
உஷ்...அபா, மலேரியா என்று தானே சொன்னேன்;ஹெச்ஐவி அளவிற்கு உணர்ச்சி வசப்படுவது எதற்கு.
அதிகமாய் ஆர்ப்பாட்டம் செய்து உள்ளே தூங்கிட்டிருக்கும் சிங் ...
சீ ... சிங்கம்லா இல்லை வா;
இதோ இங்கு தான்; ஷ்ஷ் அமைதி; ஓரமாய் ... மெல்ல ... கேட்கிறதா ? எனக்குக் கேட்குதே; காதைத் தீட்டி வைத்துக் கொள்ள, கவனம்.
கேட்குதா ? கேட்குதா ? அடர்ந்த அடவியில், மாலை வேளையில்,
*என்ன சத்தம் இந்த நேரம் ?*
322. மாலை முடியும் வேளை
இருள் சூழத்தொடங்கும் சமயம்
மனதில் கவிதை கற்பனை சுறக்க
சுற்றி அமைதியான சாலை
ஆள் ஆரவாரமற்றப் பாதை
சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சி
தோகை விரித்தாடும் அழகு மயில்
ஆளை மயக்கும் பூ வாசம்
எங்கோ தூரத்தில் மெல்லிசை
அருகில் அருவியில் தண்ணீர் ஒலி
வானில் நிலவொளி
பக்கத்தில் ஒரு பைங்கிளி
கொஞ்சல் கிள்ளல் துள்ளலோடு
என் தோளில் சாய்ந்தபடி
அவ்வப்பொழுது முத்தம்
என் ஒரு கை அவள் இடை சுற்றி
இன்னொரு கை குடை பற்றி
இது *மழை பொழிந்திடும் நேரம்*
No comments:
Post a Comment