Sunday, November 25, 2018

பொன்மாலைப் பொழுதில் 41

313. நான் உன்னை விரும்புகிறேன்.
உனக்குப் பிடித்திருக்கு இல்லை எனச் சொல்வதிலென்ன தயக்கம் ?
இது தான் வெட்கமா ? நாணமா ? இதை நான் நம்பணுமா ?
சரி சில கேள்விகள், ஆம் இல்லை என்று சொல், புரிந்து கொள்கிறேன்
உண்ண உறங்கவிடாதென் உருவம் உன்னை உபத்ரவம் செய்கிறதா ?
அதையும் மீறிக் கண்ணயர கனவில் கொஞ்சி கதைக்கிறேனா?
என் அழகும் அறிவும் ஆற்றலும் அபலையுன் நெஞ்சை அபகரித்ததா
பார்க்குமெல்லாவற்றிலும் என்
பிம்பம் தெரிய பாவை உன்னுள் ஒரு பதற்றம் பற்றியதா?
யாருக்காகவும் என்னை விட்டுத்தரக் கூடாதென்றும், இனி நாமிருவரும் இணைந்தே செயல்படவேண்டுமென்றும், உன்
*மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா?*

312. அரண்மனையில் நீ பிறக்கவில்லை ஆனால் அரசகுமாரனாய்த் தான் எனை வளர்த்தாய்.
அதிகம் நீ கற்கவில்லை எனினும் எல்லாக் கலைகளும் நான் கற்க வேணுமென்று ஊக்குவித்தாய்.
பசியென்ற ஒன்று நான் அறியா வண்ணம் எனைப் பார்த்துப் பார்த்து உணவளித்தாய்.
குளிர் என்னை அணுகா வண்ணம் போர்த்திப் போர்த்தி வளர்த்தாய்.
நீ என்ன உண்டாய் எப்போது உறங்கினாய், நானறியேன்.
எந்தக் குறையும் இல்லாது எனை வளர்த்ததை மட்டுமறிவேன்.
இன்று இன்பக்கடலில் நான் நீந்தி விளையாட அன்று நீ எதிர்கொண்ட இன்னல்களை எண்ணித் தவிக்கிறேன்.
இன்று நான் விருட்சமாய் வளர்ந்து நிற்க அன்று என் விதைக்கு நீ
நீரூற்றியதை நன்றியோடு நினைவில் கொள்கிறேன்.
இன்று என்னிடம் எல்லாம் இருக்கையில் நீ மட்டும் ... நீ இல்லையேல் நானேது ? என் ...
*உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே, தாயே ....*

311. இப்பொழுதெல்லாம் மிகவும் சுறுசுறுப்பாய் இருக்கிறேன்.
தேவையில்லாத விஷயமெதிலும் தலையிடுவதில்லை.
கோபம் குறைத்துக் கொண்டேன்
யாராவது என்னை அடித்தால் கூட சிரிக்கப் பழகிக் கொண்டேன்.
குடிப்பதில்லை புகை போதை எல்லாம் மறந்தாகிவிட்டது.
இன்னும் என்ன செய்ய ? சொல்.
ஊருக்கு வெளியே ... தெரியும்ல, பழைய சிவன் கோவில், தினம் தொண்டு, திருப்பணி.
எல்லாரும் என்னோடு பாசத்தோடு பழகுகிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் நீ தான் .
அடி திருத்தாததை உன் அன்பு ...
என் சினம் கட்டுண்டது உன் சின்னப் பார்வையில், சிரிப்பினில்.
இன்னும் எப்படி என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் ?
இப்போதாவது ... உன் செவ்வாய் திறந்து, ஏதாவது ஒரு வார்த்தை ...
*சொல்லாயோ சோலைக்கிளி*

310. கனவு காண்பதாய்க்  கனவு உமக்கு வந்ததில்லையா என்ன ?
ஒரு கதையின் ஊடே இன்னொரு கதை கேட்டதில்லையா நீர் ?
மகிழ்ச்சியான ஒரு செய்தியில் மனம் லயித்திருக்கையில்,
இன்னொரு நற்செய்தி வரலாமே.
ஒரு திரைப்படத்தில் இன்னொரு படம் தெரிந்தால் தப்பில்லை.
அட தொலைக்காட்சி பார்ப்பவரை
தொலைக்காட்சியில் பார்க்கிறோம் தானே.
சரி இப்போது மாலை ஏழு,
இந்தப் பொன்மாலைப் பொழுதில்
இன்றையப் பொன்மாலைப் பொழுதில்
*பொன்..மா..லைப்..பொழுது*


309. நினைப்பதெல்லாம் நடக்கிறது
இன்றில்லையேல் நாளை என்ற நம்பிக்கை இருக்கிறது.
தொட்டதெல்லாம் துலங்குகிறது.
சின்னச் சின்ன இன்னல்கள்,
இறை துணை வேண்ட இருந்த இடம் தெரியாது விலகுகிறது.
அகநானூறு தொடங்கி அனைத்து இலக்கிய நூல்களையும் கற்க
ஆர்வம் பிறக்குது.
ஆண்டவன் அருள் பரிபூரணமாக
எனக்கு அமைந்திருக்குது.
எல்லாவற்றுக்கும் சேர்த்து நன்றி நவில ஆலயம் சென்றால்
கையில் வந்து விழுகிறது.
பத்திரப்படுத்திக் கொண்டேன், இது *ஒரு தெய்வம் தந்தப் பூ*


308. அடி பெண்ணே,
இங்கே பார், உன் கண்ணைப் பார்த்துப் பேசும் என்னைப் பார்.
ஆண்களை நம்பாதே
அவர்கள் சொல்வதில் ஐம்பது சதவீதம் கூட உண்மை இருக்காது.
அந்த மீதி ஐம்பதில் உண்மையின் அளவு நொம்ப சொல்பம்.
அழகுப் பெண்ணைக், உன்போல், கண்டால் போதும், சும்மா அப்படியே அளந்து விடுவார்கள்.
வானவில் என்றும் தேனிதழ் என்றும் நயனங்களால் நடனமாடும் நங்கை என்றும் ... நம்பாதே;
எங்காவது ஏதாவது மேய்ந்து விட்டு உன்னிடம் வந்து புருடா விடுவார்கள்,
காளிதாசன் நான், கண்ணதாசன் தான் என்றுக் கதை அளப்பார்கள்.
இங்கே பார் பெண்ணே, நான் அப்படிப்பட்டவனில்லை, நிஜம்.
நான் ... ராஜா ரவிவர்மா உனக்குத் தெரியுமா? கேள்விப்பட்டிருக்காயா?
இல்லையா ... நல்லது.
அவரோவியங்களும் என்னுடையது போலவே தத்ருபமாய் ...
சந்தேகப் பார்வை  சிந்தக்கூடாது
சொன்னால் நம்பு, உண்மை இது
*பூ வாசம் புறப்படும் பெண்ணே ... நான் பூ வரைந்தால்*

No comments:

Post a Comment