307. பிடித்தது, இணைந்திருந்தோம்
பின் என்னென்னவோ காரணம், பிரிந்து விட்டோம்.
பிரிந்ததும் விலகிச் செல்லாமல் ... புரியவில்லை, இதுதான் விதியா ?
ஒரேயிடத்தில் இருந்துகொண்டு, விலகி விலகி நின்று கொண்டு,
பாதை குறுக்கிடும் போதெல்லாம் சில சமயம் விலகி, பல சமயம் மனதுள் அலறி, முறைத்து, அனல் வார்த்தை வீசி, நெஞ்சைப் பொசுக்கி, ஐயகோ ...
நாலு பேர் சூழ இருக்கையில், உனை வெறுப்பேற்றி, உனக்கெது பிடிக்காதோ அதையே செய்து ...
மனதுக்குப் பிடித்தவரிடத்தில்தான் கோபம் கொள்ள முடியுமாமே;
ஊடலும் ஒருவிதத் தேடல் தானாமே
மெல்ல மெல்ல உணர்கிறேன், என்னை மாற்றிக் கொள்கிறேன்.
ஒன்றாயிருந்தக் காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் சீண்டி சிரித்து விளையாடியதை எல்லாம் எண்ணி மகிழ்கிறேன்.
சிறுபிள்ளைத்தனமான என் செயல்களைக் குறையாகக் கருதாது ... எனை *மன்னிப்பாயா?*
306. பச்சை பசேல் புல்வெளி
நடுவில் வளைந்து வளர்ந்த ஒற்றை தென்னை மரம்
கீழே ஆறு இல்லை இல்லை நதி
என்ன வித்தியாசம் என்று கேட்க நினைத்து எப்போதும் போல் மௌனமாகவே இருக்கிறார்கள்.
சரி சுருக்கமாய் நீர், மிதக்கும் படகு.
துடுப்பு தவிர படகில் யாருமில்லை
நமக்குத் தனிமை வேண்டுமே.
லேசான தூரல், கொஞ்சம் குளிர்
பகல் முடிந்துப் பதுங்கும் பகலவன்
பின் மாலையில் உலா வந்தபடி நமை நோட்டம் விடும் பிறைநிலா
சரி என்ன தான் சொல்ல வருகிறான் பார்ப்போம் என்றுத் தொடர்ந்து படிக்கும் அவர்கள்.
இன்றாவது ஏதாவது சொல்வாயா என்றுன்னைப் பார்க்கும் நான்.
கைப்பேசியில் வந்த இந்த 'பச்சை பசேல் புல்வெளி' கவிதையைப் படிக்கும் நீ.
கூடவே ஒலிக்கும் பாடல்
*நீ......ல வானம்*
305. ஆரம்பத்திலிருந்தே என்னுளுண்டு இறுக்கம்.
அருகில் யார் வந்தாலுமொரு கலக்கம்.
நெஞ்சம் நிறையக் குழப்பம்.
எதைக் கேட்கவும் தயக்கம்.
என் அதிர்ஷ்டம், கிட்டியதுன் அறிமுகம்
உன்னாலென் உள்ளத்தில் உத்வேகம்.
அசரவைத்தது உன் விவேகம்.
எதைக் கேட்டாலும் விளங்குமாறு நீ வழங்கும் விளக்கம்.
கொஞ்சம் கொஞ்சமாய்க் கூடும் நம் நெருக்கம்.
என் நெஞ்சமுழுதும் உன் ஆதிக்கம்.
இனி நீ சொல்வதே என் மார்க்கம்.
உன்னாலென் வசந்தகாலத் தொடக்கம்
இப்போதெல்லாம் நீ ஏது செய்தாலும் பிடிக்கும்.
ஏனெனில் என் நெஞ்சில் ...
*காதல் மயக்கம்*
304. பார்த்து, சிரித்துப் பேசி, பிடித்துப் போக நெருங்கிப் பழகி;
தெரிந்தும் தெரியாமலும் இடித்து முட்டி முறைத்து விளையாடி;
ஆளிருந்தால் விழியால் பேசி ஆளில்லாப்பொழுது விரலால் பேசி;
முத்தத்திற்கு கணக்கு வைத்து
சத்தமின்றி இருட்டில் பரிமாறி;
புதுப்புது ஆடை பரிசாய்த் தந்து, அணியப் பார்த்து வியந்து வியர்த்து
ஆடை பாரம் என்பதை உணர்ந்து, நீரை வீணாக்காது சேர்ந்து நனைந்து;
இன்னும் தாமதிக்க தாத்தா பாட்டி ஆக நேரிடுமென்று பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்து;
கோவில் தேவஸ்தானமாம் என்றிழுக்க
முதலிரவு தானே கூடாது, இது எங்கட்கு முதலிரவில்லை என்று சொல்லிவிட்டேன்.
சரி சரி உன்னிடம் யாராவது இதுபற்றிக் கேட்டால் ... நீ
*என்ன சொல்லப் போகிறாய் ?*
303. அடி என்னருமைக் காதலி,
நேற்றென் உறக்கத்தில் ...
வாரணங்கள் வரவில்லை,
தோரணங்கள் நாட்டப்படவில்லை,
நாளையா மணநாள் ? தெரியலை.
காளை போன்றுதான் இருக்கேன் ஆனால் பந்தல் புகவில்லை,
மந்திரங்கள் சொல்லப்படவில்லை.
மத்தள ஓசை இல்லை
சங்கொலி முழங்கவில்லை
நானுன் கைத்தலம் பற்றியது நினைவிருக்க, தீ வலம் இல்லை,
அம்மி மிதிக்கவில்லை
அருந்ததி பார்க்கவில்லை,
எனினும் ஏழேழ் பிறவிக்கும் நீயே என் காதலியாய், ஆருயிராய், என் எல்லாமுமாய் இருப்பதாய்க்
*கனா கண்டேனடி ... தோழி*
(நன்றி: ஆண்டாள்)
302. எந்தெந்த வேதிப்பொருட்களை எப்படி இணைத்தால் என்ன கிட்டும் என்று உனக்குத் தெரியும்.
கணிதத்தில் எதைக் கேட்டாலும் விடை சொல்லி நிரூபிக்க உனக்குத் தெரியும்.
வார்த்தைகளை வளைத்து வர்ணங்களை வாரியிரைத்து வசீகரமாய்க் கவிதை ஓவியம் படைக்க உனக்குத் தெரியும்.
மழை பெய்யப்போகும் நேரம், அளவு; பறவைகள் சிறகுகடித்துப் பறக்கக் காரணம் இவையெல்லாம் கூட உனக்குத் தெரியும்.
நாம் பேசுகையில் சிரிக்கையில் நடக்கையில் உடலினில் எத்தனை தசைகள் இயங்குகிறது என்று உனக்குத் தெரியும்.
சரி, முத்தமிடுகையில்? தெரியாதா?
நீ உணராத இன்னொரு விஷயத்தை உரைக்கவா ?
*சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு*
No comments:
Post a Comment