Wednesday, May 30, 2018

பொன்மாலைப் பொழுதில் 24

186. படைப்பவன் நானே
பசிக்க, அழ வைப்பவன் நானே
பால் நானே, பால் தருபவள் நானே
பாவங்கள் நானே, பாவம் செய்யப்
பாதை வகுத்துத் தருபவன் நானே
பாவத்திற்குத் தண்டனை தந்துப் பாடம் புகட்டுபவன் நானே
பாதம் பணிந்தார்க்குப் பரிகாரம், பாபவிமோசனம் எல்லாம் நானே
பாரபட்சம் பாராது பாருலகைப் பாதுகாப்பவன் நானே
பந்தம் நானே, பகையும் நானே
பரந்து விரிந்த வானம் நானே
பருக வானம் தரும் பானம் நானே
பரவசம் தரும் பண்ணிசை நானே
பாடவைப்பவன் நானே
பாடப்படும் அந்தப் *பாட்டும் நானே, bபாவமும் நானே*

^பாவம் - bavam - expression

185. பூ சூடி, பொட்டிட்டு, புன்னகை புரிந்தபடியே வலம் வருவேன்.
தவறாய் யாரும் பார்க்க முடியாது நடந்து கொள்வேன்.
அப்படி நடக்க ஆரும் நினைத்தால் தடையிடத் தயங்கேன்.
ஆசையெதுவும் நெஞ்சில் நுழையாது வளர்ந்து வந்தேன்.
ஒருமுறை தானே பார்த்தோம்,
ஓரிரு வார்த்தை பேசினோம்.
இதுதான் ஜென்ம பந்தம் என்பதா ? தொடருதோ ?
இதுவரை இப்படி நடந்ததில்லையே.
ஏன் என்றெனக்குப் புரிந்தும் நம்ப முடியாது தவிக்கிறேனே.
உங்கள் ஒரு்சிறுப் பார்வையில், புன்சிரிப்பில் மெல்ல கரைகிறேனே
*துளி துளியாய், பனித்துளியாய்*.

184. சொன்னால் செய்கிறாய் நீ
சொன்னபடியே செய்கிறாய் நீ
என் எண்ணப்படி இசைகிறாய் நீ
கனவின் உருவாய்,கதைக் கருவாய் கவிதைப் பொருளாய் எல்லாம் நீ
நீயில்லாதிடமேயில்லை என்பதாய் எல்லாவிடத்திலும் என்னோடு நீ  தேவலோகத்து மங்கையர் போல் நர்த்தனமாடுவதிலும் நிபுணி நீ
இன்று இத்தினம் என்னோடு இணைந்துப் பாட வா நீ
இரவிலும் கனவிலும் பாட வா நீ
எல்லா ராகமும் நீயறிந்த போதிடினும் என்னோடு பாடு நீ *கீரவாணி*


183. பிள்ளையாரப்பா
கயிலைமலையானே
தினமொருக் கவிதை புனையக் கருணை புரியும் கனல்விழியானே
மாதொருபாகனாய் நின்றென் மனங்கவர்ந்த மகாதேவா,
பாதம் பற்றினார்ப் பாவம் போக்கும் பரமேஷ்வரா,
நினை நினையாத நாளில்லை நீலகண்டா,
திருவிளையாடல் பலபுரிந்த தியாகேசா,
தில்லை நடராஜா,
பிள்ளையின் பிழையெதுவாயினும் பொருத்தருளும் தாயுமானவா,
தயை புரிந்திடு வா.
சங்கரா, சாம்ப சதாசிவா,
சம்போ சிவசம்போ
இக்கணமே வந்து சக்தி தந்து விட்டுப்போ
*சக்தி கொடு*


182. பஞ்சகச்சத்தில் நான்
மடிசாரில் நீ
ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறேன்
மடியினில் படர்ந்திருக்கிறாய்
வெற்றிலை நான் போட
உன் வாய் சிவப்பேற
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

கால் கொலுசை நீ சப்திக்க
அர்த்தம் புரிந்து நான் முத்தமிட
கண்ணால் நீ கெஞ்ச
நான் காலமுக்கிவிட
ஆரிராரிரோரோ என நீ இழுக்க
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

அருகில் வந்து முறைக்கும் நீ
அலட்டாது அமர்ந்திருக்கும் நான்
'அறிவில்லை' என்கிறாய் நீ
காதில் கொள்ளாது நான்
குளிக்கப்போகிறாய் நீ
சரி போ என்றபடி நான்
'துண்டு ப்ளீஸ்' கேட்கிறாய் நீ
துண்டோடு கதவு தள்ளும் நான்
என் துண்டை உருவும் நீ
பிறந்த மேனியாய் நாம்
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

*சம்போ சம்போ சம்போ சம்போ*




181. ஏன் இத்தனை சந்தோஷம் என்றா கேட்கிறாய், என்னுயிர்த் தோழா,
எதைச் சொல்ல எதை மறைக்க என்ற குழப்பமிருந்திடினும் எல்லாம் சொல்கிறேன் கேளடா.
*
நேற்றவள் நேரில் வந்தாள்,
தென்றலாய், மழைச்சாரலாய், இளவெயிலாய், புதுப் புனலாய்,
மாலையில் நீல நிறச் சேலையில்,
கண்ணில் மையோடு,
வாயில் புன்னகையோடு
நெஞ்சில் காதலோடு.
அவள் கூந்தல் மணத்தை நுகர்ந்து மல்லிகைப்பூ மணம் வீச;
*
நிறையப் பேசினாள்.
காத்திருக்கக் கேட்டுக்கொண்டாள்.
தமக்கையின் திருமணம் தந்தையின் சில கடமை முடிய வேண்டுமென்றாள்.
என்னைச் சிநேகிக்க ஏழெட்டுக் காரணங்கள் எடுத்துரைத்தாள்.
அதையும் தொடர்ந்து, முத்தமழை பொழிந்து காதினுள் மெல்லச் சொன்னாள்
*கொஞ்ச நாள் பொறு தலைவா*

180. மெல்லப் பேசி புன்னகைத்து நலம் கேட்டதன் பொருள் அறிவேன்.
உபத்திரவமில்லாது ஓடியோடி உதவி செய்ததன் உள்ளர்த்தம் அறிவேன்.
கலங்கி நின்ற கணத்தில் கைதூக்கி விட்டதன் காரணம் அறிவேன்.
மாணிக்கவாசகம் பாடி மனபாரம் குறைய  மார்க்கம் காட்டியதன் மாண்பு அறிவேன்.
ஒருகுறிப்பும் உணர்த்தாது கன்னி நெஞ்சைக் களவாடியது மட்டும் அறியேன்.
காரணம் சொல்வீரா ...
*கள்வரே ... கள்வரே*


179. உழைத்து உழைத்து மனம் உடல் களைத்துவிட்டேன்.
பணம் தேடிப் பல பயணம் செய்து ஓய்ந்துவிட்டேன்.
பணமே வாழ்க்கை என்றெண்ணி இருந்துவிட்டேன்.
பலதும் பெற்றும் போதுமென்று எண்ணாது நெஞ்சமின்னும் அல்லாடுது.
வாழ மறந்த வாழ்க்கை விழி முன் வந்து நின்று பழித்துக்காட்டுது.
பெற்றதையும் இழந்ததையும் நிறுத்திப் பார்த்தால் என்ன கிழித்தோமென்று கோபம் வருகிறது.
எந்த திசையிலும் நகர முடியாது வாழ்க்கை கட்டுண்டுக் கிடக்கிறது.
அலையினிடையில் அகப்பட்ட படகு, கரைசேர  துடுப்பைத் தேடுகிறது.
தாமரை இலைமேல் தண்ணீராய் பற்றற்று வாழ மனம் விரும்புகிறது.
இதோ உன் வாசல் வந்துவிட்டேன்
துணை நீயம்மா, வழிகாட்டம்மா.
*நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா*

Tuesday, May 15, 2018

பொன்மாலைப் பொழுதில் 23

178. மயிற்பீலி சூடிய மாதவா
மங்கையென் மடியில் மயங்கிடவா
   ஆராரோ ஆராரோ

கார்மேகவண்ணா கமலநயனா
கன்னியருகில் கண்ணுறங்கிட வா
   ஆராரோ ஆராரோ

புல்லாங்குழலூதும் புருஷோத்தமா
பூமெத்தையில் பள்ளி கொள்ள வா
   ஆராரோ ஆராரோ

நர்த்தனமாடிய நந்தகுமாரா
நல்லுறக்கம் கொள்ள நீ மெல்ல வா
   ஆராரோ ஆராரோ

சங்கடம் தீர்க்கும் சியாமள வர்ணா
சயனம் கொள்ள சடுதியில் வா
   ஆராரோ ஆராரோ

பண்டரிநாதா பாண்டுரங்கா
பிரபஞ்சம் மறந்து உறங்கிட வா
    ஆராரோ ஆராரோ

*ஆராரோ ஆராரோ*
*நீ வேறோ நான் வேறோ*

*****

177. உணவு பசியின் புன்னகை
கனவு ஆசையின் புன்னகை
வெற்றி உழைப்பின் புன்னகை
தோல்வி சோம்பலின் புன்னகை
கவிதை காதலின் புன்னகை
குழந்தை காமத்தின் புன்னகை
ஆத்திரம் அதிகாரத்தின் புன்னகை
அழிவு ஆணவத்தின் புன்னகை
 *பூ கொடியின் புன்னகை*
*அலை நதியின் புன்னகை*

*****

176. நல்லோர் நலமாய் இருக்கணும்
நலிந்தோர் வாழ்வு மேம்படணும்
காலத்தில் மழை பொழியணும்
வயல் செழித்து நிறையணும்
தினம் வயிறு பசிக்கணும்
பசிக்கையில் உணவு கிட்டணும்
படுத்தவுடன் உறக்கம் வரணும்
நற்சிந்தனை நெஞ்சில் நிறையணும்
கடவுளெம் கூடயிருந்துக் காக்கணும்
கற்ற கல்வி கைகொடுத்திடணும்
அருள் புரி தாயே, எம் துணை நீயே
*கலைவாணியே*

*****

175. நீல நிலா என்றனர்.
நின்றவிடத்திலிருந்தே நிமிர்ந்து நோக்கினர்.
பால்கனியிலிருந்தும் பாலத்தின் மேலிருந்தும் பார்த்து ரசித்தனர்.
*
பலரும் பார்க்கப் பால்நிலா சிவந்து போனது.
வெட்கத்திலா, கோபத்திலா என்று புரியாமல் போனது.
*
கொஞ்சமாய்த் தெரியக் கூச்சலிட்டனர் சிலர்.
தானிருக்குமிடத்தில் தெரியவில்லை எனக் கவலை கொண்டனர் சிலர்.
நல்லாத் தெரியுதென்று ~நானே நிலாவென்றும்~ நடனமாடினர் சிலர்.
பார்க்காதார் பார்த்து மகிழப் படமெடுத்தனர் பலர்.
*
ஓட்டு போட்டு நாட்டை மறப்பது போல்
க்ரகத்திலிருந்து க்ரகணத்தை பார்த்து ரசித்து மறந்திட்டோம்.
ஆனால் .... இன்றும் ... வானில்
*நிலா காய்கிறது*
*நேரம் தேய்கிறது*
*யாரும் ரசிக்கவில்லையே ...*

*****

174. மின்னஞ்சலில் நலம் விசாரித்தாய், நவின்றேன்.
குறுஞ்செய்தியில் வணக்கம் சொல்ல வாழ்த்தினேன்
அலைபேசியில் அழைத்தப்பொழுது ஆர்வமாய் அலவாடினேன்.
கனவினில் கவிதை கேட்க வர்ணித்து உளறினேன்.
இத்தனையும் தொடர்ந்து
நேரில் வந்து நின்று இன்பத்திலாழ்த்துவாய் என்று எந்நாளும் எண்ணியதில்லை.
*ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ ?*

*****

173. எது பிடித்திருக்கு என்றால் ...
கன்னக்குழி விழ நீ சிரிக்கும்போது
பேசிவிட்டு நா கடித்துக் கொள்ளும்போது
குறுகுறுவென்று நான் பார்ப்பதையுணர்ந்து இழுத்து மறைத்து எனை முறைக்கும்போது
பார்க்காதிருந்தால் இருமி கவனம் கவரும்போது
பார்வை மோதையில் நாக்கை நீட்டி லலலல வெனும்போது
கொலுசோசை கேட்டு அருகில் செல்ல காதினுள் முத்தமிட்டு கண்ணடிக்கும்போது
புத்தாடையில் எதிரில் நின்று 'எப்படி' என்கையில்  'அ...பாரம்' என்றவுடன் சட்டென்று கை கட்டிக்கொள்ளும்போது,
கவிதை நல்லாருக்கு, அர்த்தமென்ன என மெல்லக் கேட்கும்போது.
யாருமில்லாப் பொழுதில் மடியில் படுத்துக் கொண்டு மருதாணியிடக் கெஞ்சியபோது
*சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது*

*****

172. இப்பத்தான் கண்டுகிட மாட்டேங்கறீங்க
ஒதுங்கி ஒதுங்கிப் போறீங்க
அதெல்லா ஒரு காலம்ங்க, அப்போ...
மொதமுறை பார்த்தப்ப மொறச்சீங்க
அடுத்தமுறை பாக்காதமாதிரி நடிச்சீங்க
பின்னால ஒருநா மொல்ல சிரிச்சீங்க
பேரு என்ன ன்னு கேட்டீங்க
பழகப் பழக மனசுக்குப் பிடிச்சிப் போனிங்க
நெறைய எனக்கு சொல்லித்தந்திங்க
தெரிந்தத நாசொன்னா கேட்டுக்குவீங்க
நல்லப் பாடலை மொல்லப் பாடுவீங்க
சிரிச்சி சிரிக்கவச்சி சிந்திக்கவைப்பீங்க
வேஷம் போடாத வெளிப்படையா பேசி நேசத்த நெஞ்சில விதைச்சீங்க
ஆன்மீக அரசியல் மாதிரி கண்ணியமான காதலை கண்ணுல காட்டுணீங்க
இன்னும் சொல்லனும்னா ... அப்போல்லா எனையே *சுத்தி சுத்தி வந்தீக*

*****

171. உன்னிடமிருந்தோர் குறுஞ்செய்தி வந்ததும்
உள்ளம் உவகை கொள்வது ஏனோ ?
நீ அருகிலிருக்கையில்
அகத்திலோர் ஆனந்தம் பிறப்பது எங்ஙனம் ?
பார்த்ததும் புன்சிரிப்பும்
பார்க்கும் வரை பரிதவிப்பும் ஏற்படுவது எதனால்?
உன் குறுகுறுப்பார்வை
விறுவிறுவென்று ஓர் உணர்ச்சி உண்டாக்குவதேன் ?
உன் ஒவ்வொரு வாசகமும்
திருவாசகமாய்த் தித்திப்பதன் காரணம் சொல்லேன் ?
என் *மனசுக்குள் ஒரு புயல்  மையம் கொண்டதே, அதன் பெயர் தான் என்ன ?*

*****

Wednesday, May 9, 2018

பொன்மாலைப் பொழுதில் 22

170. உனை எண்ணாத நாளெல்லாம்
நான் எனை மறந்து வாழ்ந்த நாட்களே.
உன் விழியீர்ப்பு விசையிலிருந்து விலகியிருந்த நாட்களெல்லாம்
வீணாய்ப்  பொழுது போக்கிய நாட்களே.
உன் புகழ் பேசா நிமிடங்களெல்லாம்
என் நா அசையா நிமிடங்களே.
கனவில் நீ காட்சி தரா
இரவெல்லாம் நான் உறங்காதிருந்த இரவுகளே.
கருப்பொருளாய் நீ இல்லாவிடில்
என் கவிதைகள் வெறும் வார்த்தைகளே.
*உன்னைக்காணாது நான் இன்று நானில்லையே*

*****

169. அழகின் உருவம் அன்பின் வடிவம்
சிந்தை கவரும் செம்பொன் சிலை
நினைவலைகளில் நின்றாடும் நுரை
லயம் தவறாது நர்த்தனமாடும் மயில்
சுரம் பிசகாது கூவித்திரியும் குயில்
விடிகாலை வெயில்
மெல்ல வீசும் தென்றல்
~அமுத~கவிதைசுரபி சாந்தஸ்வரூபி
சிற்றிடை மோகினி
செவ்விதழ்க் காமினி
இரவில் கனவில், பகலில் எதிரில்  காட்சிதரும் கன்னி நீ,
என்னுயிரே, நிழலே, எழிலே
*மணியே, மணிக்குயிலே, மாலையிளங் கதிரழகே*

*****

168. கோவில்ல வச்சிப் பார்த்தானாம் ஒருநாள்
பார்த்ததும் பிடிச்சிப் போயிடிச்சாம்.
குளத்தாங்கரையில் பார்த்தானாம்,
குளிக்கரச்ச பார்த்திருப்பானோ ? களவானிப்பய.
பரவால்ல, பார்க்க சுமாராயிருக்காப்ல,
அமைதியாய் இருக்கா அலட்டாது பேசுறா
வாலி வைரமுத்து கணக்கா கவிதை சொல்றா
கண்களை இங்க அங்க மேயவுடாது கண்ணியமாப் பாக்குறா.
பயபுள்ள, என் நெஞ்சைக் களவாடிட்டானே,
மனசு இப்டி இறக்கை கட்டுன மாறிப் பறக்குதே
*அடி ஆத்தாடி ...*

*****

167. புடவையில் பவனி வரும் தெய்வீகம்
பார்வையில் தெரியும் சாத்வீகம்
பார்க்கப் பார்க்க நெஞ்சில் பரவசம்
பழகினால் புரியும் கம்பீரம்
பேசும் பாஷையில் வீசும் பரிமளம்
கருணை பிரதானம்
பகட்டில்லா யவ்வனம்
புரவியின் வேகம்
புவியின் நிதானம்
நடக்கும் போதி மரம்
நமக்குக் கிடைத்த வரம்
பட்டுப்போன்ற பாதம்
பாவை சொல்வதெல்லாம் வேதம்
*
மண்ணிலுன்னைப் போலே
இன்னொருத்தி இல்லையே,
*ஏய் மாண்புமிகு மங்கையே ....*

*****

166. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஒரு மதிப்பு மரியாதை
உன்னைப் பார்க்கையில் மட்டும் தான் ஈர்ப்பு ஆசை  எல்லாம்

இரக்கம் நெஞ்சில் ஏராளம் தாராளம்
நீ அருகிலிருந்தாலோ கிறக்கம் நெருக்கம் இறுக்கம் எல்லாம் இருக்கும்

எந்த உடையின் நிறத்தையும் பகுத்துரைக்கும் திறமையிருக்கு.
நீ எதிரில் நின்று கேட்கையில் மேனி நிறம் மட்டுமே தெரிய முழிக்கவேண்டியிருக்கு.

நெஞ்சமெல்லாம் காதல்,
தேகமெல்லாம் காமம்
*உண்மை சொன்னால் ... நேசிப்பாயா ?*

*****

165. உன் ஒருசிறுப்பார்வையில்
காதல் செடி முளைக்கத் தொடங்கிய நேரம்
கவலைகள் எனைவிட்டுக் காதாதூரம்
விலகி நின்ற நேரம்
நெஞ்சிலிருந்த பாரம் இலவம்பஞ்சாய் மாறிப்
பறந்து மறைந்த நேரம்
கண்ணனும் ராதையும் கண்முன் வந்து நின்றுக்
காதல் பாடம் கற்பிக்கும் நேரம்
வானின்தேவதைகள் பக்கம் வந்து நலம் விசாரித்து
வரம் தரும் நேரம்
முகிலாய் மாறி நான் வானில்
மிதக்க ஆரம்பித்த நேரம்
*தொடுதொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்*

*****

164. ஏறெடுத்துப் பாக்கலேன்னா ...
எப்படி இருக்கியன்னு தெரியாமயாப்போவும் ?
போறச்சே வாரச்சே சிரிக்கலையின்னா ...
கவனிக்கலேன்னு சொல்வியலா ?
பதில் தரலேன்னா ... பிடிக்கலையோன்னு ஏன் சந்தேகப்படணு ?
ஏடி வாடி போடின்னு சொல்லும்யா,
இங்கனகுள்ள அங்கனகுள்ள சுத்தும்யா
தவிக்கவுட்டு சோலிபாக்க தூரப் போறேன்னு
சொல்லுதியளே நாயமா?
செத்த நேரம் இங்க கிட்ட வாரும்
இந்தக் கிறுக்குப் ~பொட்டச்~ மொல்லச் சொல்றத
செவில்ல போடும்
மக்கா ஒமக்காவ இம்பட காத்து நிப்பே
ஏமாத்திப்போட்டு போயிடாதிய, சரியா
என் சுவாசமா நெனச்சிருக்கே
நேசமானவரே
*நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கே*

*****

163. வானவில் உன் புருவம்
போலிருக்காவெனச் சோதிப்பேன்.
வண்ணத்துப்பூச்சியில்
உன் தாவணி வர்ணத்தைத் தேடிப்பார்ப்பேன்.
கூட்டத்தில் உன் பார்வை தென்படுதா
என்று தேடித்தோற்பேன்.
பாராட்டுக்களில் உன் பெயர் இல்லாதது கண்டு ஏமாறுவேன்.
*பூக்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாக தேடிப்பார்த்தேன்.*

*****

162. வாய் விரிக்காது விரல் வருடி நகத்தால் கீறி
விடயமறிந்துக்கொள்வது அடுத்து நிகழும்.
இடை இழுத்து இதழ் இணைத்து
இறுக்கிக்கொள்வது இன்னொரு தினம்.
உடை பாரம் என்றுணர்ந்து, தவிர்த்து
உயிர் மாற்றிக்கொள்வது பின் நிகழும் சம்பவம்.
இன்று இங்கு இப்பொழுது இவ்வமயம்
ஆரம்பநிலையின் அடுத்தக்கட்டம்.
என்னுள் பாதி நீயாகும் விதம்
உன்னுள் நான் ஒன்றாகும் விதம் ஒரு வார்த்தை சொல்லு நீ,
*சுந்தரி, கண்ணால் ஒரு சேதி*

*****

161. வஞ்சி உறங்குகிறாள்
சாய்ந்தபடியே சகி சயனிக்கிறாள்
கனவுகள் கண்டபடி கண்மூடியிருக்கிறாள்
துயரங்களை மறந்துத் தோகை துயில்கிறாள்
நயனங்களை இழுத்து மூடி நங்கை நல்லுறக்கத்தில் இருக்கிறாள்.
வெண்ணிலவே நீ வேறு திசை விரைந்து உன் ஒளி பொழி
இடியோ மழையோ இரண்டும் இந்தப் பக்கம் வராதிரு.
பொன்மாலைப்பொழுதே மெல்லிசைப் பாடலையே எப்பொழுதும்போல் ஒலி.
*தென்றலே ... தென்றலே மெல்ல நீ வீசு*

*****

Thursday, May 3, 2018

பொன்மாலைப் பொழுதில் 21

160. கண்டதும் காதல் பிறந்திட
யாரென்ற ஆர்வம் எழுந்திட
பேசிப்பழகப் பிடித்துப் போகிட
கன்னி மனது கனிந்திட
வாழ்வில் வசந்தம் வீசிட
நாட்கள் நிமிடங்களாய் நகர்ந்திட
நாளும் கனவுகள் மலர்ந்திட
நெஞ்சில் கவிதைகள் சுறந்திட
உறக்கம் வர மறுத்திட
உண்ணாதே பசி பறந்திட
ஊடல் இடையில் புகுந்திட ... டாட்

ஓடியொழிந்தது போதும் நிறுத்திவிடு
சஞ்சலம் வேண்டாம் மறந்துவிடு
என்விழி பார்த்துப் பேசிவிடு
ஒரேயொரு வார்த்தை சொல்லிவிடு
*மந்திரம் சொன்னேன் வந்துவிடு*

*****

159. தினம் உன்னைக் காண ஆசைப்பட்டேன்
நீ என்னோடு பேசிச் சிரித்துப் பழக
ஆசைப்பட்டேன்
நீ ரசிப்பதையெல்லாம்
உன்னோடு சேர்ந்து ரசித்திட ஆசைப்பட்டேன்
காதுக்குள் முத்தமிட
உன் கண்ணுக்குள் வெடிவெடிப்பதைப் பார்க்க ஆசைப்பட்டேன்
உன்னைப்போலொரு குரங்கையும்
என்னைப்போலொரு எழிலையும் ஈன்றெடுக்க ஆசைப்பட்டேன்
என் கட்டழகை உன் கவிதை வரிகள் வர்ணிக்க ஆசைப்பட்டேன்
கட்டுக்கதை பல சொல்லி
என்னோடு நீ காமுற ஆசைப்பட்டேன்
*ஆத்தோரம் தோப்புக்குள்ளே ... ஆசை வச்சேன்*

*****

157. உன் குறுகுறுப் பார்வை
என்னுலொரு கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறது.
தள்ளி நின்று நீ பார்க்கையில்
அருகில் அழைக்க ஆசையாயிருக்குது.
கிட்டநின்று நீ கண்ணடித்துப் பார்த்தால்
தொட்டுத் தழுவ தேகம் துடிக்குது.
பார்த்துக் கொண்டேயிருக்க பிரியமாய் இருக்குது,
பரவசம் பிறக்குது
பார்க்காது போனால் பாவை நெஞ்சம் பதறுது,
படபடக்குது, பரிதவிக்குது.
இருந்தும் ...  இருந்தும்
*பார்க்காதே  பார்க்காதே ... ஐயையோ பார்க்காதே*

*****

156. இப்பொழுதெல்லாம் படங்களின் காதல் காட்சிகளை
கவனமாய் ரசிக்கிறேன்.
சித்திரம் வரைவதிலும் நடனமாடுவதிலும்
ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
வெட்கம் புரிகிறது, சிரிப்பும் என் உதட்டைக் கவ்விக்  கொள்கிறது.
அந்த ம் இல் உனக்குக் கோபம் வருமோ என்றெண்ண,
இன்னும் சிரிப்பு வருகிறது.
எங்கும் எதிலும் உன் முகம் தெரிய,
'அப்போ இது அதானே ?' என்ற கேள்வி எழுகிறது.
இன்னும் என்ன சொல்ல ?
என்னைக் கேட்காமலேயே,  என்
*இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது மெல்ல*.

*****

155. ஆசை கோபம் விட்டுத்தள்ள
வாழ்வில் வலிகள் இருப்பதில்லை

ஆற்றல் அமைதி அகத்திலிருக்க
வெற்றி விலகிப் போவதில்லை

சிந்தையில் கருணை நிரம்பியிருக்க
செய்கையில் தவறு நேர்வதில்லை

நெஞ்சில் உன்னை எண்ணிக்கொள்ள
கற்பனை வற்றிப் போவதில்லை

*காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை*

*****

154. பேசிச் சிரித்ததுண்டு
ஊடல் கொண்டு ஒதுங்கியிருந்ததுண்டு
இடையணைத்துக்கொண்டு  இணைந்திருந்ததுண்டு
*
இதுவரை செய்யாத ஒன்று இன்று.
உனக்காக ஒரு தாலாட்டு.
தாய் மட்டுந்தான் தாலாட்டு பாடவேணுமென்று சட்டமில்லையே.
தலைவன் தாலாட்டு பாடக் கூடாதென்று எந்த இலக்கியமும் சொன்னதில்லையே.
*
வா ... அருகில் வா
என் மடியில் தலை சாய்த்துப்படு
கால் நீட்டிக்கொள்
தலைப்பிடித்து விடுகிறேன்,
மெல்ல கண் வளர்,
காதினுள் கேட்கிறதா ?
*லாலி ... லாலி ... லாலி ... லாலி*


*****

153. தோகை விரித்திடும் மயிலைப் பார்த்தப் பரவசம்
கண்விழிக்கையில் குயிலின் கானம் கேட்ட பரவசம்
பறந்துத் திரியும் பஞ்சவர்ணக்கிளியைக் கொஞ்சி ரசித்தப் பரவசம்
அழைத்ததும் ஓடி வந்து கட்டிக்கொள்ளும் குழந்தை தரும் பரவசம்
கடலலை தெறித்து ஒரு துளி கன்னத்தில் பட்டுப் பிறக்கும் பரவசம்
படைப்பைப் படித்து யாரேனும் பாராட்டும் போது வரும் பரவசம்
இவையெல்லாம் சேர்ந்தும்கூட ஈடாகா,
அன்று என்னுளெழுந்த பரவசம், உனைப்
*பார்த்த முதல் நாளில்*

*****

152. எந்த விதை விருட்சமாகுமோ
எந்த மொட்டு முதலில் பூக்குமோ
எந்தப் பாடல் மனதை ஈர்க்குமோ
எந்த மரம் எந்தப் பறவைக்கு இடம்தருமோ
எந்த நினைவு கவிதையாகுமோ
என்று நீயெனை ஏற்றுக்கொள்வாயோ
காத்திருப்பேன், அதுவரை என்நிலை
*அனல் மேலே பனித்துளி*

*****

151. விளக்கணைத்து விழிமூடி உறங்கும் வேளையில்
கண்ணடித்துக் கனவினில் காட்சி தந்தக் காதலன்
கண்ணே கற்கண்டே என்றெல்லாம் கொஞ்சி எனையெழுப்பி
வளைகரம் பற்றி விரல் வருடி கவிதை சொல்லக் கெஞ்ச
என்ன சொல்ல எப்படித் தொடங்கவெனத் தெரியாது
முத்தைத்தரு என்று முதலடி தந்த முருகனைத் துதிக்க
அவ்வமயம் *காற்றில் ஓர்வார்த்தை மிதந்து வரக் கண்டேன்*

*****

150. நீ ...
நான் காதல் விதைத்த நிலம்
எனக்கு நிழல் தந்த ஆலம்
கவிதைகள் அறுவடை செய்யும் வயல்வெளி
கல் எனைச் சிலையாக்கிய உளி
என் சிற்றறிவு வளர்த்த வாசகசாலை
கனவுகளின் தொழிற்சாலை
கண்மூட மனக்கண்ணில் விரியும் காட்சி
உறக்கத்தின் பின் பிறக்கும் புத்துணர்ச்சி
தியானத்தின் அமைதி
பொறுமையின் வெகுமதி
தேடாது கிடைத்தப் புதையல் 
ஓடாதுப் பெற்றப் பதக்கம்
மண்ணில் மலர்ந்தத் தாமரை
*நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை*

*****