Thursday, January 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 12

தயாராய் இருக்கிறேன்
சேர்த்ததையெல்லாம் தந்து விட்டேன்
மன்னிப்பு கேட்டவரையெல்லாம் மறந்துவிட்டேன்
என் தவறை மன்னித்தவரை எண்ணி மகிழ்கிறேன்
வாசல் திறக்கப்போகிறது
வழி தெரியப்போகிறது
விழி பிதுங்கி வலியில் துடித்ததெல்லாம் இனி விலகி ஓடப்போகிறது
போட்டி இல்லை பொறாமை இல்லை
வஞ்சி எண்ணி ஏங்க வேண்டாம்
கொஞ்சிப் பேசிக் காத்திருக்கவேண்டாம்
சரி சரி உன் நிலை என்ன?
*நாளை உலகம் இல்லையென்றால்
அழகே நீ என்ன செய்வாய் ?*

***

உனை தினம் எண்ணி ஏங்கிக்கிடக்கிறாள்
உன் பல சில்மிசங்களை விரும்பி ரசித்ததை
மறக்க முடியாதுத் தவிக்கிறாள்
உன்னிடம் தனை இன்னும் இழக்கத்
தயாராயிருக்கிறாள்
உயிரென்று சொல்ல வேறாருமில்லை என்பதை
உனக்குணர்த்த விரும்புகிறாள்
உருகி உருகி நீ பழகியதெல்லாம் உண்மைதானா
என்றும் யோசிக்கிறாள்
உதறிச் செல்லவும் முடியாது ஒட்டி உறவாடவும் வழியில்லாது
வாடி நிற்கிறாள்
உன்னுள்ளும் இந்த உபத்திரவம் இருக்குமோ
என்றும் எண்ணுகிறாள்
உரிமை நிறைய உனக்குத்தந்தவள் ஞாபகம் இன்றாவது வராதா
என்றுத் தவிக்கிறாள்
வஞ்சி கெஞ்சிக் கேட்கும் வரம் கிட்டுமா
என்றுக் காத்திருக்கிறாள்
'கண்ணா வருவாயா ?' மீரா கேட்கிறாள்

***

பார்த்தாலே ஒரு பரவசம் பிறக்கும்
பார்த்துக்கொண்டேயிருக்கத் தூண்டும்

பொய்யும் புரட்டும் புரியாப் பருவம்
பொக்கவாய்ச் சிரிப்பே பதிலாய்த் தெறிக்கும்.

கெஞ்ச கொஞ்ச வேலை நடக்கும்
அதிகாரம் ஆடம்பரம் அர்த்தமற்றுப் போகும்

கைநீட்டி அழைத்தால் ஓடி வரும்
கன்னம் காட்டினால் முத்தம் தரும் 

பேசப்பேச ஆசை பிறக்கும்
பேசுவதேதும் புரியாதெனினும்
இன்னும் இன்னும் என்று கேட்கத் தூண்டும்

கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்கும்
எப்பொழுதும் ஏதாவதொரு கேள்வியிருக்கும்

குழந்தைகள் கடவுளின் பிம்பங்கள்
கூட அமர்ந்துக் கொண்டாடுங்கள்.

***

No comments:

Post a Comment