Wednesday, January 3, 2018

பொன்மாலைப் பொழுதில் 10

இப்பொழுதெல்லாம் எண்ணம் எதுவாயினும்
அது பறந்து வந்துப் படுத்துக் கொள்கிறது அவளிடம்.

எப்படியோ என் உறக்கத்தினுள் புகுந்து
கனவுகளுக்கும் வர்ணமடித்து விடுகிறாள்.

இப்பொழுதெல்லாம் அவள் பெயரைச் சொன்னாலும் கேட்டாலும்
ஒரு பரவசம் பிறக்கிறது என்னுள்.

காத்திருக்கையில்
கருமேகத்தைக் காண்கையில்
மழையில் நனைகையில்
எல்லா சமயத்திலும் கவிதை சுரக்கிறது.
மென்மையான பாடல்களையே மனம் விரும்புகிறது.

இயற்பியல் கற்பிக்காததை அவள் இதழியல் கற்பிக்கிறது.
உயிரியல் உணர்த்தாததை அவள் உடலியல் உணர்த்துகிறது.
புவியீர்ப்பு விசையில் புரியாதது அவள் விழியீர்ப்பு விசையில் புரிகிறது.

காளையென் கர்வத்தை ஆற்றினாளே தன் வாஞ்சையில்
காதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்


***

கண்ணா உனைப் பார்த்துக்கொண்டே காலை விழித்தெழுகிறேன்
நீ கண் மூடியதுபோல் நடிக்கையில் உடை சரிசெய்துக் கொள்கிறேன்.
தண்ணீர் வீணாக்கக்கூடாதென்று உன்னோடே குளிக்கிறேன்.
என் இடையில் எதையோத் தேடும் உன் விரல்களை மிரட்டி அனுமதிக்கிறேன்.
கவிதை என்று கண்டதையும் நீ சொல்வதை நாணத்தோடு கேட்டு ரசிக்கிறேன்.
சிரித்து சிரிக்கவைத்துப் பேசும் உன்னைப் பெருமையோடு சிநேகிக்கிறேன்.
பல அல்லல்களுக்கு மத்தியிலும் என் விருப்பத்தைக் கேட்ட உனை விரும்புகிறேன்.
இதுவரை மிரட்டி வந்த மார்கழிக் குளிரை  நக்கலாய்ப் பார்க்கிறேன்.
அமைதியாய் உன்னருகில் உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன்

***

அதாகப்பட்பது என்னவென்றால்
அழகியை ஒருநாள் கண்டு
அருகிலமர்ந்து பேசிச் சிரித்து
அகந்தை அற்ற அற்புதம் என்றுணர்ந்து
அக்கணமே அக்கினி முன்னமர்ந்து
அகமுடையாள் ஆக்க ஆசையிருந்தும்
அழகியின் சம்மதம் தெரியாது
அவசரப்படக்கூடாதென்று
ஆசைக்கு அணையிட்டு
அவளிடமிருந்து ஒப்புதல் வரும் வரை
ஆடை அணிகலன்
ஆடு ஆநிரை
அத்தனையும் வைத்துக் கொண்டு
அனுதினமும் காத்திருக்கிறேன்
அடியேன்,
அத்தமனம் ஆவதற்குள்
அவள் வருவாளா?

No comments:

Post a Comment