Sunday, August 31, 2014

அடுத்த ஜென்மத்துக் காதலி



அடுத்த ஜென்மத்துக் காதலி 
---------------------------------------
கண்டாங்கிச் சேலையில்
காலை வேளையில்,
நயனங்களால்
நலம் விசாரிக்கும்
நங்கை ஒருத்தி
நானிருக்கும் அறைக்கு வந்தாள்
நறுமணம் வீசும்
நாலு முழப் பூவோடு;

மை தடவினாள் கண்ணில்;
குறுகுறுப் பார்வை கருவிழியில்;
கண்டோர் தன்னை மறப்பர் அவள் எழிலில்;
தங்க நிற ஆடையில், தத்தையின் ஜொலிப்பில்;

ஒரு பூவே பூ விற்கும் பொழுதது;
அப்பூவின் புன்னகை முன்
போட்டியிட முடியாது
பொன்நகை தவித்தது;

கதவைப் பிடித்துக் கொண்டு
கன்னி வெட்கத்தில் தள்ளி நின்றாள்;
காதலென்று சொல்ல முடியாதெனினும்
காளை என்னைக் கவர்ந்திழுத்தாள்;
அடுத்த ஜென்மத்தில் அழகி நீயென்
அகமுடையாளாய் வர நான் ஆசிர்வதிக்க
அசட்டுச் சிரிப்பு ஒன்று அளித்துவிட்டு
அங்கிருந்து நகர்ந்தாள், என்னெஞ்சை விட்டு நீங்காள்;

Wednesday, August 27, 2014

காத்திருந்தேன்

மாலை வேளையில்
மலர்ச் சோலை மூலையில்
மன்னவனே உனக்காக
மங்கை நான் காத்திருந்தேன்;

கண்கவர் ஆடையிலே
கவிதையொன்று சொல்லிக்கொண்டு
காளை நீ வருவாயென்று
கன்னி நான் காத்திருந்தேன்;

பூவினுள் நுழைந்து வண்டு
புதுத்தேனை நிறையப் பருகி
போதையில் பாதை புரியாது
பறந்து திரிந்ததைப் 
பார்த்துச் சிரித்தேன்;

ஆண் மயிலும் பெண் மயிலும்
ஒன்றையொன்று உரசிக்கொண்டும்
ஒன்றோடொன்று மோதிக்கொண்டும் 
களித்துக் கிடந்ததைக்
காணமுடியாது கண்டுகிடந்தேன்;

நேரம் ஆக ஆக
நீ அங்கு வராது போக
எங்கோ ஒரு சோகப்பாடல் யாரோ பாட
என் கண்ணிலிருந்து கண்ணீர் ஓட
ஏனோ நான் உயிரில்லா உடல்போலே
எழுந்து போனேன்;

Thursday, August 7, 2014

நீ



கண் விழித்தால் அருகில் நீ;
'கண்ணா இங்கெப்படிடா வந்தாய் நீ'
என்றுகேட்டால்
அறைத்தோழி முறைக்கிறாள்;
'அட ராமா' என்று சொல்லிக்கொண்டே
குளியலறைக்குள் சென்றால்
அரையில் ஆடையோடு அங்கே நீ;
ஆடை அணிகையில்
இடையிலிருந்து கை எடுக்காது
இம்சிக்கிறாய் நீ;
உணவருந்த உட்கார்ந்தால்
ஒரு கவளம் கேட்கிறாய் நீ;
ஆண்டவனே துணை என்று
ஆலயம் தொழ சென்றால்
ஆடவன் நீ
அருகில் தொடுதூரத்தில்;
ம் ... வேறென்ன செய்ய
‘மாரியாத்தா காளியாத்தா
என்னையும் சீக்கிரம்
ஆத்தா ஆக்கு‘
என்று வேண்டிக் கொண்டு
வெளியே வந்தால்,
நாலு சக்கர வண்டியில்
எதிரில் நீ.