Monday, January 20, 2014

பவானியஷ்டகம்


தங்கை, தாய்
உறவினர், நண்பர்,
பிள்ளை, பெண்,
வேலையாள், கணவன் / மனைவி,
ஞானம் அறிவு
இவையேதும் எனைக் காக்காது;

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (1)

பிறப்பு இறப்பு என்ற இக்கடலில்
சிக்கிக் கிடக்கிறேன்;
பயம் நிறைய உண்டு;
சிக்கலை எதிர்த்து நிற்க தைரியம் இல்லை;
ஆசை மோகம் அத்தனையும் உள,
அதனால் செய்த குற்றங்கள் பல;
கட்டுண்டு கிடக்கிறேன்,
கரையேற இயலாது;

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (2)

தானங்கள் ஏதும் அறியேன்;
தவம் செய்யத் தெரியேன்;
மாயம் தந்திரம் அறியேன்;
பாடல்கள் புனைந்து பக்தியில் திளைக்கத் தெரியேன்;
பூஜை செய்யத் தெரியாது;
யோகம் செய்யத் தெரியாது;

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (3)

எது சரியென்று தெரியாது;
புண்ணியத் தீர்த்தங்கள் அறியேன்;
முக்தி பெரும் சக்தி இல்லான்;
ஆண்டவனிடம் அடைக்கலமாகும் உபாயம் அறியேன்;
பக்தியில் பரவசம் அடையும் வழி அறிந்திலேன்;
விரதம் அனுஷ்டிக்கும் வழிமுறை அறியேன்;

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (4)

கெட்ட செயல் செய்தவன்,
கெட்டவர்களோடு இணைந்துக் கிடந்தவன்,
கெட்ட பாவ விசயங்களையே எண்ணிக் கிடந்தவன்,
கெட்டவர்களுக்கு தொண்டு செய்திருக்கிறேன்,
கெட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்,
கெட்ட எண்ணத்திலேயே எல்லாவற்றையும் சிந்தித்தவன்,
எல்லாசமயத்திலும் எதிலும் கெட்டதிலே மூழ்கிக்கிடந்தவன்;

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (5)

படைத்தவனை அறிந்திலேன்;
ஐஸ்வர்யம் அள்ளித் தரும் அன்னையை அறியேன்;
எல்லாவற்றுக்கும் தலைவன் யாரெனத் தெரியாது;
தேவர்களுக்குத் தலைவன் யாரெனத் தெரியாது;
காலை விடிவதற்குக் காரணம் கண்டேனில்லை
இரவு இருண்டு இருப்பதற்கு விவரம் அறிந்தேனில்லை;
எப்பொழுதும் போல்

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (6)

விவாதங்களில் வீற்றிருக்கும் போதிலும்,
எதிரிகள் சூழ்ந்திருக்கும் போதிலும்,
கவலை எனை கவ்வியிருக்கும் போதிலும்,
துன்பத்தால் துயரத்திலிருக்கும் போதிலும்,
எவ்வளவு தூரம் சென்ற போதிலும்,
நீரிலும், நெருப்பிலும்,
மலைகளின் உச்சியிலும்,
அடவிகளின் இருளின் இடையிலும்,

எப்பொழுதும் போல்
பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (7)

அனாதையான போதிலும்,
ஏதுமில்லாது நின்ற போதிலும்,
பிணிகளால் பின்னப்பட்ட போதிலும்,
பாவமான நிலையில் பரிதவித்தப் போதிலும்,
பலதரப்பிலிருந்தும் பிரச்சனைகள் எனைச் சூழ்ந்த போதிலும்,

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (8)

No comments:

Post a Comment