Wednesday, July 4, 2012

அரிச்சந்திரன் - 10

                                    அரிச்சந்திரன் பிள்ளையின் மரணம்

அங்கே இன்னொரு இடத்தில்,
அன்னையும் பிள்ளையும்
அவதியடைகிறார்கள்;
அவர்களை ஏலத்திற்கு எடுத்தவன்
அதிக வேலை வாங்குகிறான்;
அடிக்கிறான், திட்டுகிறான்;

பிள்ளையை வேலை வாங்க
அன்னையைத் திட்டுகிறான்;
அன்னையை வேலை வாங்க
பிள்ளையை அடிக்கிறான்;

தளிர் போன்ற பிள்ளையை
தர்பை பறித்து வரச்சொல்கிறான்;
பிள்ளை வரத் தாமதமானால்
அன்னையைத் திட்டுகிறான்;

அன்னை மேல் கொண்ட பாசத்தால்
அதிக நேர எடுத்துக்கொள்ளாது
அந்தணன் சொன்ன தர்பையை
அள்ளி எடுத்து வர எண்ணுகிறான் பையன்;

அந்தோ, அந்த நேரம் ஒரு பாம்பு
பிள்ளையை கடிக்கிறது;
பாம்பின் விடம் தலைக்கேற
பரிதாபமாய் இறக்கிறான்
பிள்ளை;

பிள்ளை வர நேரமெடுப்பது
பார்த்து அன்னை அவனை தேடிவரத்
துடிக்கிறாள்; ஒரு வேலையும் செய்யத் தெரியாத
பாலகன் என்று அழுகிறாள்;
அவதியுறுகிறாள்;
ஆனால் அவளைப் பொருள் தந்து பெற்றவன்
போகத் தடை விதிக்கிறான்;
போனால் வேலை தடையாகும் என்று
காரணம் சொல்கிறான்;

காலம் மாறுகிறது;
பகல் நகர்கிறது;
இரவு வருகிறது;

இனி செய்ய ஒன்றுமில்லை என்ற பின்
சேயைத் தேட தாயை அனுப்புகிறான்;
தாய் தேடி வருகிறாள்,
தன் பிள்ளையைப் பார்க்க ஓடி வருகிறாள்;
பெயர் சொல்லி அழைக்கிறாள்;
கண்ணே மணியே நீ எங்கே என்று கதறுகிறாள்;
பசி மயக்கத்தில் எங்கோ கிடக்கிறானோ ?
பாவிகள் யாரேனும் பிள்ளையை பயமுருத்தினறோ ?
பாதை தெரியாது பாவல் எங்கோ அலைகிறானோ ?

இன்னும் என்னென்னவோ எண்ணி
இங்கு அங்கு என அலைந்தவள்,
முடிவில் கண்டு கொள்கிறான் தன்
மொட்டு மரணமடைந்துக் கிடப்பதை;
எழிலாய் இருப்பவன்
எழாது இருப்பதை;
அன்பான பிள்ளை
ஆருயிர் நீத்துக் கிடப்பதை;
கதறுகிறாள்;
பிதற்றுகிறாள்;
மண்ணில் விழுந்து புரள்கிறாள்;
என்ன செய்வதென்று
ஏதும் தெரியாது விழிக்கிறாள்;
தன் மனதைத் தேற்றிக்கொண்டு
தன் பிள்ளையை சுமந்து கொண்டு
மயானம் நோக்கி நடக்கிறாள்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment