Friday, July 27, 2012

அரிச்சந்திரன் - 13

                                    சோதனை முடிந்தது

தலைவன் அரிச்சந்திரன்
தன் கடமையைச் செய்ய
தயாரானான்;
தலைவியிடம்
தன்னை மன்னிக்கக் கோரினான்;
கணவன்
கையால் மடிவதில்
தனக்குக் கொஞ்சம் கூட
தயக்கமில்லை,
கவலையில்லை,
கடமை செய்,
காரியம் நிறைவேற்று என்று
உற்சாகப்படுத்தினாள்;

வாள் ஓங்கினான் அரிச்சந்திரன்;
கண் மூடித் தயாரானாள் சந்திரமதி;
'நில் அரிச்சந்திரா நில்'
சொல்லிக்கொண்டே,விஸ்வாமித்திரர் அங்கு வந்தார் ;
கண்களில் கண்ணீர் மல்க நின்றார்;
தன்னை மன்னிக்க வேண்டினார்;
வசிஷ்டரிடம் தான் செய்த சபதம் சொன்னார்;
இத்தனைக் கஷ்டம் தந்தது தானே என்று
ஒப்புக்கொண்டார்;
பிள்ளை பொன் பொருள் அரசாங்கம் எல்லாம் திருப்பித் தந்தார்;
காசி அரசனின் பிள்ளையை உயிரோடு எழுப்பி
சந்திரமதி குற்றமற்றவள் என்று நிரூபித்தார்;

அரிச்சந்திரன் வணங்கி நின்றான்;
அவன் சந்ததி அவன் பின்னே நின்றது;

'என்ன வரம் வேண்டுமோ கேள் ?'
என்றார் விஸ்வாமித்திரர்;
'எந்நாளும் எப்பிறவியிலும்
சத்தியம் தவறாது வாழ விளைகிறேன்'

கேட்டான் மன்னன்;
கேட்டதைக் கொடுத்தார் முனிவர்;

கவலை எல்லாம் தீர்ந்தது,
காசி விட்டு அயோத்தி செல் என்று அறிவுறுத்தினார்;
அப்படியே செய்தான் அரிச்சந்திரன்;

அதன்பிறகு அவன் வாழ்க்கை
அணுவளவும் துயரமில்லாது,
அன்போடு சத்திய தர்மத்தோடு
ஆட்சி செய்து வந்தான்;


                                                                        ( முற்றும் )

Thursday, July 26, 2012

அரிச்சந்திரன் - 12

அடிமையாய்க் கொண்டவர் தான்
அந்திமக் காரியங்கள் செய்ய
ஆகும் பொருளைத் தர வேண்டும்,
அவரிடம் சென்றுக் கேள்,
அவர் தருவதை வாங்கி வா, என்று
அறிவுறுத்தினான்
அரிச்சந்திரன் தன் மனைவிக்கு,
துணை யாரும் இல்லாதத் துணைவிக்கு;

இதமாய்ப் பேசவேத் தெரியாதவன்,
இம்மியளவும் அன்புடன் நடத்தாதவன்,
இறுதிச் சடங்குக்கா காசு தருவான் ?
இருந்தும் தன் இல்லான் சொல்வதாலும்,
வேறு வழி இல்லாததாலும் சந்திரமதி
தன் பொறுப்பாளனிடம் பொருள் கேட்கப் புறப்பட்டாள்;

அவ்வமயம் விஸ்வாமித்திரர்
அடுத்து ஓர் விஷமம் செய்தார்;
அரிச்சந்திரனுக்கு இன்னொரு சோதனை
தந்தார்;
அவன் மனைவியை இன்னும்
அழ வைத்தார்;

காசி நகரத்து மன்னனின் மைந்தனை
அரண்மனை விட்டு மறையச் செய்தார்;
அரிச்சந்திரனின் இல்லாள் வரும் பாதையில்
அக்குழந்தையை இறந்து கிடக்கச் செய்தார்;
சந்திரமதி தன் பிள்ளையை எண்ணி அழுதுகொண்டே,
நடந்து வருகையில்,
ஒரு மின்னல் பிரகாசிக்க,
அவ்வொளியில் இறந்து கிடக்கும் பிள்ளை
தன் பிள்ளை போல் அவளுக்குத் தோன்ற,
அவள் அருகே சென்று
அப் பிள்ளையைத் தன் மடியில் வைத்து
அரற்ற,
அந்நேரம் அங்கே காவலர்கள் வர,
அரசனின் பிள்ளை இறந்து கிடப்பதைப் பார்த்து,
அவளைக் கைதுசெய்து
அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர்;
அவளே கொலை செய்தாள் என்று
அவள் மேல் குற்றம் சுமத்தினர்.

விஸ்வாமித்திரர்
அவளைத் தன்னிலை மறக்கச் செய்தார்;
ஏதும் உணராது
பேசாது நிற்கும் படி செய்தார்;
பேதையும் அப்படியே நின்றாள்;
பெயர் யாது என்ற கேள்விக்கும்
பதில் சொல்லாது நின்றாள்;
அரசன் கேள்விக்கு
அசையாது வாய் திறவாது
அழுதபடியே நின்றாள்;

தன் பிள்ளையைக் கொலை செய்த இவள்
தலையை அறுக்க உத்தரவிட்டான் அரசன்;
தண்டனையை அன்றிரவே நிறைவேற்ற
ஆணை பிறப்பித்தான்;

காவலாட்கள் சந்திரமதியை
இழுத்து வந்தனர்;
அரசாணை அறிவித்து
சிரச்சேதம் செய்ய
அரிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்;
தன் மகனின் உடலை எரிக்க,
பொருள் பெறச் சென்ற மனைவியை எதிர்பார்த்துக்
காத்திருந்தவன்
கைதியாய் மனைவியை அழைத்துவந்ததைக்
கண்டு அதிர்ந்தான்;
இவள் குற்றமற்றவள் என்று சொன்னான்;
இருந்தும் அவன் சொல்லைக் கேட்பார் இல்லை;

அரசாணையை நிறைவேற்ற
அவசரப்படுத்தினர்;
அதுவே அவன் கடமை என்று
அறிவுறுத்தினர்;

                                                                        ( தொடரும் )

Thursday, July 12, 2012

அரிச்சந்திரன் - 11

இரவு நேரம்;
மயானம்;
காவலில் அரிச்சந்திரன்;
அழுதழுது வீங்கியக் கண்களோடு,
உடைந்த நெஞ்சத்தோடு,
வருகிறாள் சந்திரமதி;
காவலுக்கிருப்பவன் தன் கணவன்
என்பதை அறியாள்;
பிணமாய்க்கிடப்பவன் தன் பிள்ளை
என்பதை அறியான்;

பிணத்தை எரிக்க
வரி கேட்டான்,
தன்னிடம் தர ஏதுமில்லை என்று சொன்னாள்;
அடிமையாய் வாழ்வதை
அவனுக்குச் சொன்னாள்;
என் பங்கான
வாய்க்கரிசி, இடைத்துண்டு
இரண்டையும் நான் தள்ளுபடி செய்கிறேன்;
ஆனால் என்னை வேலைக்கு வைத்தவனுக்கு
வர வேண்டிய வரியை தான்
தள்ளுபடி செய்ய இயலாது; அதைத்
தராது பிணத்தை எரிக்க முடியாது;
கண்டிப்பாய்ச் சொன்னான் அரிச்சந்திரன்;
கண்ணீர் தவிர தன்னிடம் தர வேறொன்றுமில்லை
கதறினாள் சந்திரமதி;

பணமாய் இல்லை என்றால் ஏதேனும்
பொருளாய் வரி தா என்றான்;
என்ன இருக்கு என்னிடம் என்றாள்;
இருக்கு உன் கழுத்தில் தாலி,
அதை எடுத்துத் தா என்றான்;

என் கணவரைத் தவிர வேறெவர்க்கும்
என் கழுத்துத் தாலி தெரியாது,
உமக்கெப்படி தெரிந்தது அது
வினவினாள் சந்திரமதி;

அதிர்ச்சி அடைந்தான் அரிச்சந்திரன்;
யார் நீ என்று வினவினான்;
சந்திரமதி தன் விவரம் விளக்கினாள்;
இறந்து கிடப்பது
இளவரசன், தன் பிள்ளை என்று அறிந்தான்;
கதறி அழுதான், தன்
கண்ணீரால் பிணத்தைக் கழுவினான்;

ஆருயிர்ப் பிள்ளை இறந்து கிடப்பதைக் கண்ட பின்னும்
மண்ணில் வாழ வேண்டியிருக்கே என்று மருவினான்;
ஆனாலும் தன் கடமையை மீறாது இருந்தான்;
மகனே ஆயினும், மரணம் உற்ற போதிலும்,
வரி தராது
பிணமெறிக்க முடியாது என்றான்;

                                                                        ( தொடரும் )

Wednesday, July 4, 2012

அரிச்சந்திரன் - 10

                                    அரிச்சந்திரன் பிள்ளையின் மரணம்

அங்கே இன்னொரு இடத்தில்,
அன்னையும் பிள்ளையும்
அவதியடைகிறார்கள்;
அவர்களை ஏலத்திற்கு எடுத்தவன்
அதிக வேலை வாங்குகிறான்;
அடிக்கிறான், திட்டுகிறான்;

பிள்ளையை வேலை வாங்க
அன்னையைத் திட்டுகிறான்;
அன்னையை வேலை வாங்க
பிள்ளையை அடிக்கிறான்;

தளிர் போன்ற பிள்ளையை
தர்பை பறித்து வரச்சொல்கிறான்;
பிள்ளை வரத் தாமதமானால்
அன்னையைத் திட்டுகிறான்;

அன்னை மேல் கொண்ட பாசத்தால்
அதிக நேர எடுத்துக்கொள்ளாது
அந்தணன் சொன்ன தர்பையை
அள்ளி எடுத்து வர எண்ணுகிறான் பையன்;

அந்தோ, அந்த நேரம் ஒரு பாம்பு
பிள்ளையை கடிக்கிறது;
பாம்பின் விடம் தலைக்கேற
பரிதாபமாய் இறக்கிறான்
பிள்ளை;

பிள்ளை வர நேரமெடுப்பது
பார்த்து அன்னை அவனை தேடிவரத்
துடிக்கிறாள்; ஒரு வேலையும் செய்யத் தெரியாத
பாலகன் என்று அழுகிறாள்;
அவதியுறுகிறாள்;
ஆனால் அவளைப் பொருள் தந்து பெற்றவன்
போகத் தடை விதிக்கிறான்;
போனால் வேலை தடையாகும் என்று
காரணம் சொல்கிறான்;

காலம் மாறுகிறது;
பகல் நகர்கிறது;
இரவு வருகிறது;

இனி செய்ய ஒன்றுமில்லை என்ற பின்
சேயைத் தேட தாயை அனுப்புகிறான்;
தாய் தேடி வருகிறாள்,
தன் பிள்ளையைப் பார்க்க ஓடி வருகிறாள்;
பெயர் சொல்லி அழைக்கிறாள்;
கண்ணே மணியே நீ எங்கே என்று கதறுகிறாள்;
பசி மயக்கத்தில் எங்கோ கிடக்கிறானோ ?
பாவிகள் யாரேனும் பிள்ளையை பயமுருத்தினறோ ?
பாதை தெரியாது பாவல் எங்கோ அலைகிறானோ ?

இன்னும் என்னென்னவோ எண்ணி
இங்கு அங்கு என அலைந்தவள்,
முடிவில் கண்டு கொள்கிறான் தன்
மொட்டு மரணமடைந்துக் கிடப்பதை;
எழிலாய் இருப்பவன்
எழாது இருப்பதை;
அன்பான பிள்ளை
ஆருயிர் நீத்துக் கிடப்பதை;
கதறுகிறாள்;
பிதற்றுகிறாள்;
மண்ணில் விழுந்து புரள்கிறாள்;
என்ன செய்வதென்று
ஏதும் தெரியாது விழிக்கிறாள்;
தன் மனதைத் தேற்றிக்கொண்டு
தன் பிள்ளையை சுமந்து கொண்டு
மயானம் நோக்கி நடக்கிறாள்;

                                                                        ( தொடரும் )

Monday, July 2, 2012

அரிச்சந்திரன் - 9

அப்பொழுது சந்திரமதி
ஒரு யோசனை சொன்னாள்;
தன்னையும் பிள்ளையையும்
அடிமையாய் யாரிடமாவுது
விற்றுவிடச் சொன்னாள்;
விற்று பெற்ற பொருள் கொண்டு
விஸ்வாமித்திரர்க்குத் தந்த சொல் காத்திட
யோசனை சொன்னாள்;

அந்த யோசனை கேட்டு
அரிச்சந்திரன் அதிர்ச்சி அடைகிறான்;
அரற்றுகிறான்;
கண்ணீர் விட்டுக் கதறுகிறான்;

மனைவியும் பிள்ளையும் அவனைத் தேற்றுகின்றனர்;
தங்களுக்கு உதவுவதே எங்கள் கடமை
என்று சொல்லுகின்றனர்;

'நாள் முடிகிறது,
இன்றோடு முனிவர் தந்த தவணை
முடிகிறது;
சீக்கிரம் கடன் முடிக்கவும்,
முடியவில்லை என்றால் அதைச்
சொல்லித் தொலைக்கவும்'
அவரசப்படுத்துகிறான்
முனிவன் அனுப்பிய சேவகன்;

தன் குடும்பத்தை
விற்க முடிவுசெய்கிறான்
முன்னாள் மன்னன்;

'அன்பான காசி நகரத்து மக்களே,
அயோத்தி நகரத்தை
ஆண்ட அரசன் நான்;
அன்று நான் விஸ்வாமித்திரர்க்குத்
தருவதாய்ச் சொன்ன பொருளுக்கு,
இன்று என் மனைவி மகனை
அடிமையாய் விற்க
ஆட்பட்டேன்; என் தேவைக்கேற்ப
பொருள் தருவோர் இவர்களை
அடிமையைக் கொள்ளலாம்'

அறிவித்தான் அரிச்சந்திரன்;

அவ்ஊரிலே பணக்காரர் வந்தார்;
அரிச்சந்திரன் கேட்கும் பொருள் தந்தார்;
அடிமைகளாய் வாங்கியவர்களைத் தன்னோடு
அழைத்துச் சென்றார்; விஸ்வாமித்ரர்
அனுப்பிய சீடன்
அரிச்சந்திரன் கடன் தீர்ந்தது என்று சொன்னான்;
இருந்தும் தன் அன்பு மனைவி மகனைப் பிரிவதை எண்ணிக்
கண்ணீர் வடித்தான் அரிச்சந்திரன்;
அம்மட்டும் தான் சொன்ன சொல்லைச் காக்க உதவியதற்கு
அந்த காசி நாதனை வணங்கி நன்றி சொன்னார்;


தான் இனி போகலாமா என உத்தரவு கேட்டார், அந்தணணிடம்;
தனக்குத் தர வேண்டிய தரகு பாக்கி, அதைத்
தந்து விட்டு செல், அந்தணன் சொன்னான் அரசனிடம்;

தரகு தருவதாய்ச் சொல்லவில்லை என்றான் அரிச்சந்திரன்;
தரகு தராது கணக்கு முடிவதில்லை என்றான் அந்தணன்;
தராது போனால் விஸ்வாமித்ரரின் பொருளில்
தன் தரகை எடுத்துக் கொள்கிறேன் என்றான்;
தன் மனைவி மக்களை விற்றவன்
தன்னை விற்க தயங்குவானா என்ன ? அரிச்சந்திரன்
தன்னை அடிமையாக விற்றான்; அதில் கிட்டியதை
அந்தனனுக்குத் தந்தான்;
அரிச்சந்திரனை அடிமையைக் கொண்டவன்
அவ்வூரில் சுடுகாட்டைக் காப்பவன்;
அவ்வேளை முதல் அரிச்சந்திரனை
அச்சுடுகாடு காக்கும் வேலை செய்யப் பணிந்தான்;
அந்தணன் தன் பொருள் பெற்றுக் கொண்டு
அவ்விடம் விட்டகன்றான் ;

                                                                        ( தொடரும் )