Sunday, October 13, 2019

பொன்மாலைப் பொழுதில் 63


484. கடல் கடந்து மாட மாளிகை பல ஏறி இறங்கி தேடி, கடைசியில் அனுமன் ராமனிடம் வந்து  சொன்னது ... கண்டேன் சீதையை.
எப்படி எங்கு என்றேதும் தெரியாது தவித்த குந்தி, கண்ணன் உண்மை சொன்னதும் அழுது கதறியது ... கண்டேன் பிள்ளையை.
செல்வத்தால் மயங்காது, ராஜ போஜனத்தில் மனம் லயிக்காது குசேலன் மனைவியிடம் கூறியது ... கண்டேன் கண்ணனை.
புது சூழல், புரியா மொழி, ராணுவம், தீவிரவாதம், அழுது போராடி மீட்டு ரோஜா கண்ணீர் மல்க  கதறியது ... கண்டேன் கணவனை.
அடங்காத கூந்தல், அடக்க முற்படும் விரல்கள், மருதாணி, வளையல், சிற்றிடை, கொலுசு ... வாவ் வாவ்;
எனக்கு ... நான்...
*கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை*


482. தினம் விடிகிறது, நாள் முடிகிறது.
யாருக்காகவும் காத்திருக்காது இது தினம் நடைபெறுகிறது.
சந்தோஷத் தருணங்கள் சட்டென்று மறைந்து விடுகிறது.
சங்கடமான விஷயங்களை மறக்க மனது மறந்து விடுகிறது.
இன்றும் நீ எனை நினைத்தபடி எங்கேயோ இருப்பது தெரிகிறது.
எதற்கிப்படி விலகியிருகோம் எனத் தெரியாது மனது தடுமாறுகிறது.
காலம் கனியக் காத்திருப்போம் வேறென்ன செய்வது.
நாட்களை நகர்துவதற்காக ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது.
இதோ இன்று உனக்காகப் பாடுகிறேன்
*காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுது*


481. கண்களாலே பேசி காளை என் நெஞ்சைக் கவர்தவள் நீயடி.
அன்பு பாசம் கொட்டி காதலைத் தழைக்கச் செய்தவள் நீயடி.
என் வெறும் வார்த்தைகளை கவிதையாய் மாற்றியவள் நீயடி.
எண்ணங்களில் வண்ணங்கலந்து ஓவியம் எனக் கற்பித்தவள் நீயடி.
உறக்கத்தின் உட்புகுந்து கனவில் வந்துக் கதைப்பவள் நீயடி.
இடை தெரிய உடை அணிந்து எனை தினம் இம்சை செய்பவள் நீயடி.
அன்பே அழகே *என் சுவாசக் காற்றே, சுவாசக் காற்றே ... நீயடி*


479. சிநேகம் சரியாய் அமைய வேணும்.
அதற்கும் இறை வரம் தர வேணும்.
விட்டுக் கொடுத்துப் பழக வேணும்.
எள் எனில் எண்ணையாக வேணும்.
இராமனுக்கு லக்குமண் போல, அனுமன் போல
துரியோதனனுக்கு கர்ணன் போல
பார்த்தனுக்கு பரந்தாமன் போல
ஜானுவுக்கு ராம் போல ...
எனக்கும் உண்டு, ஒரு தோழி, அன்று முதலே ... என்னுள் பாதி.
ஒற்றை வார்த்தையில் மட்டும், என்ன கேட்பினும்;
கொஞ்சம் சிடுசிடு, நிறைய கடுகடு.
கொஞ்சலாய் பேச எண்ணினாலோ ... ஐயகோ சனீஸ்வரனை சாப்பாட்டுக்கு அழைத்தது போலாகிவிடும்.
ஆனாலும் யார் கேட்டாலும் நான் சொல்வதென்னவோ
*எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி ... தென்றல் மாதிரி*


478. ஹூம் இதெல்லாம்...என்னென்பது.
வரவர உன்னை அதிகம் அழகுபடுத்திக் கொ(ல்)ள்கிறாய்.
கண்ணாடி முன்னாடி நொம்ப நேரம் நிற்கிறாய்.
பின்னாடி நான் நிற்பதைக் கண்டும் காணாதுப் போகிறாய்.
புரியாத வார்த்தைகளில், புலம்பலோ என்றெண்ண 'கவிதை எப்படி' எனக்கேட்டு எங்களைக் கலவரப்படுத்துகிறாய்.
உறக்கத்திலிருந்து விருட்டென்று விழிக்கிறாய். விவரம் கேட்டாலோ முழிக்கிறாய்.
பல சமயங்களில் எதையோ சொல்ல எண்ணி ஏதும் சொல்லாது மெல்ல நழுவுகிறாய்.
ஒருவேளை காதல் வலையில் கன்னி நீ  விழுந்திருக்காயோ ?
உன் நெஞ்சைக் கவர்ந்தவனோடு
தனிமையில் கட்டுண்டு கிடக்காயோ.
கனவிலும் நினைவிலும் காதலனே கதியென்று...
நங்காய்... அவ்வளவு சீக்கிரம் எமை விட்டு நழுவ ஏழுமா?
*மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ?*

475. அசோக வனத்தில் சீதை எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ^,
வாலி மாயாவி யுத்தம் முடிய குகை வாசலில் சூக்ரீவன் எத்தனை நாட்கள் காத்திருந்தானோ^,
பெருவுடையாரை தரிசிக்க தஞ்சை மக்கள் எத்தனை நாட்கள் காத்திருந்தனரோ^,
படையப்பனை பழி வாங்க நீலாம்பரி எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ,
சேனாபதியைக் காண அமிர்தவள்ளி எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ
~ஜானு ராமை சந்திக்க~
இதோ பார் ... உனக்கென்னைப் பிடித்திருக்கு என்றெனக்குத் தெரியும், அதையுன் செவ்வாய் திறந்து .... ம்ம்ம்
*ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தே*


474. குடிலோடு சீதை மாயமாக ராமனுக்கு ஒன்றும் புரியவில்லை
என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
சூதாடி செல்வம் சுற்றம் இழந்து ஒன்றும் புரியாது
அடுத்தென்ன எனத் தெரியாது  தவித்தார் தருமர்.
தேவகியின் எட்டாம் பிள்ளை சிறை தப்பிய சேதி கேட்ட கம்சன்
ஒன்றும் புரியாது ஏதும் சொல்லாது பயந்து போனான்.
திடீரென்று ஜானு யமுனை ஆற்றிலே பாட
ராம் ஒன்றும் புரியாது என்ன சொல்வதென்று தெரியாது பதட்டமடைந்தான்.
எனக்கும் தான் .. சிரிக்கிறாய், பேசுகிறாய்,
என் காஃபி எடுத்துக் குடிக்கிறாய் ... வாவ், எனக்கு ... எனக்கு....
*ஒன்னும் புரியல ... சொல்லத் தெரியல*

No comments:

Post a Comment