Tuesday, October 8, 2019

பொன்மாலைப் பொழுதில் 62

473. ஒரு சின்னச்சிறு விதை மரமாய் வளர்ந்து நிற்பது விந்தை
ரசிக்கத்தான் நேரம் இருப்பதில்லை பரவாயில்லை
போகும் வரும் பாதையில் புல் தரை
பார்த்ததுண்டா பூத்துக் குலுங்கும் பல வண்ணப் பூக்களை ?
நுகர்ந்ததுண்டா அதன் வாசத்தை?
இல்லை?சரி இங்குமங்கும் பறந்துத் திரியும் வண்ணத்துப் பூச்சிகளை?
அதன் சிறகோவியங்களை?
கொஞ்சிப் பேசும் பறவைகளின் குரல்களை? இல்லையா ...
மழையில் நனைந்தபடி ..
சரி விடுங்கள், இவற்றை ரசிக்காது வாழ்வது நம் உரிமை / கடமை.
பரவாயில்லை இதையாவது ...
காது திறந்து, மெய் மறந்துக் கேட்போமா ... இதோ தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை


472. பொன் மாலை நேரம்,
இனிய தட்பவெட்பம் நிலவும் நேரம்
ஆடிய ஆட்டங்கள் அடங்கும் நேரம்
பொருள் தேடியோடும் பொருளற்ற வேலையை புறம் தள்ளி விட்டு புனர் ஜென்மம் பெறும் நேரம்.
கவலை மறந்து கண்ணயரும் நேரம்
கனவுகள் பல முளைக்கும் நேரம்
செய்தவைகள் சரியா தவறா என்று எண்ணிப் பார்க்கும் நேரம்.
செய்ய வேண்டியவைகளை பட்டியலிட்டுக் கொள்ளும் நேரம்.
நான் கவிதை மழையில் உனை நனைத்திடும் நேரம்.
நீ முத்த மழையில் எனை நனைத்திடும் நேரம்.
அப்படியே சில பல கதைகள் பேசியபடியே மான் புலியை வேட்டையாடும் நேரம்.
இங்கீதம் கொண்டு மேகத்தின் இடையில் மறைந்து நிலவு தூங்கும் நேரம்


470. கிடைக்குமென்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்திடும்.
கண்ணால் கண்ட பொன் மான் சீதை கைக்குக் கிட்டவில்லை.
உலகை சுற்றி வந்தும் முருகனுக்கு பழம் கிடைக்கவில்லை.
சபரி ப்ரார்த்தித்துக் கேட்டது போலவே ராம தரிசனம் கிட்டியதே.
கர்ணன் கேட்கவில்லையே, விஸ்வரூப தரிசனம் வியாபித்ததே.
அள்ளித் தந்தானே கண்ணன், குசேலன் கேட்டானா என்ன?
ஆண்டாள், 'கண்ணனன்றி வேறு யாரும் எனைத் தீண்டல் தகா மன்மதா' எனக் கேட்டுப் பெற்றாள்.
ராம் பலமுறை கேட்டும் ஜானு யமுனை ஆற்றிலே பாடலையே.
அடேய் என் இனிய ஸ்நேகமே, நான் … மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை


469. வனம் புக கைகேயி கட்டளை இட ராமன் மறுவார்த்தை பேசலையே
கணவனுக்கு கண் தெரியாததால் தன் கண்ணை கட்டிக் கொண்டா காந்தாரி மறுவார்த்தை பேசலையே
யாதவ குலம் அழிய சாபம் கிடைத்த போது அதை ஏற்றுக் கொண்டான் மாதவன் மறுவார்த்தை பேசலையே
இனி எமை தொடாதீர் என மனைவி சொல்ல கேட்டுக் கொண்டார் நீலகண்டர், மறுவார்த்தை பேசலை
சோழ நாடு போதும் பாண்டிய நாடு போவோமென கோவலன் சொல்ல
சம்மதித்தாலே கண்ணகி, அவளும் மறுவார்த்தை பேசலையே.
நீ மட்டும் ஏனடி, எதற்கெடுத்தாலும் ஒரு காரணம், சாக்கு போக்கு ...
முடிவாய்ச் சொல்லி விட்டேன், நாளை நாம் போறோம், கொண்டாடுறோம், அனுபவிக்கிறோம், நோ ... நோ
மறுவார்த்தை பேசாதே


468. மகளதிகாரத்தை இப்படி எழுதவா ?
நீ உணவுண்ணும் அழகைக் காண நிலவிங்கு காத்திருக்கே, காண வா.
இன்றுனக்கு எந்த நிறத்தில் ஆடை வேணுமென்று கேட்க வானவில் வாசல் வந்திருக்கே, விரைந்து வா.
உன் சிறு விரல்களில் இருந்து வெளிப்படும் தானியங்களை உண்ண பறவைகள் கால்கடுக்க காத்திருக்கே, இரை தூவிட வா.
கை சேர்த்து, ஒற்றைக் கண் மூடி நீ
வழிபடும் அழகை ரசிக்க தெய்வங்- கள் இங்கே திரண்டிருக்கு;
உன் பொக்கை வாயில் தன் பெயர் வராதா என்று ஏங்கிக் காத்திருக்கு;
இவை மட்டுமா, கொம்போடு பூனை ஒல்லி யானையும் ... நீ வரைவது போல் தனை வடிவமைத்துக் கொள்ள சகல ஜீவராசிகளும் காத்திருக்கு ...
*கண்ணனா கண்ணே ... கண்ணனா கண்ணே என் நெஞ்சில் சாயவா*


464. மலர்கள் மணக்கும் ஆனால் இங்கு மலர்ந்திருப்பவையோ மலர்ந்த உன் முகத்தை ஞாபகப்படுத்துகின்றன.
இந்த இருக்கையில் அமர்ந்து நீ பிசைந்து கையில் உருட்டி உருட்டித் தருவாய்,  நினைவிருக்கிறது.
இந்தப் புற்களின் மேலமர்ந்து எத்-
தனை கதைகள் பேசியிருக்கிறோம்
இப்போது தரை காய்ந்து கிடக்குது, நெஞ்சில் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் இருக்குது.
இதோ இதோ இந்த மரக் கிளையில் தான், ஈரமான தாவணி நீ காயப் போட்டு விட்டு மறைந்து நிற்க ... 'நாணமோ இன்னும் நாணமோ' பாட்டு நான் பாடி ...
ம்ம்ம் ... நீர் வரத்து மட்டும் குறைவு,
மற்றபடி வேறெதுவும் மாறவில்லை, நாம் ஓடி ஆடிக் காதலித்த இந்த
*வராக நதிக்கரையோரம் ...*


463. ராமன் வந்து மீட்கும் காலம் வரை இலங்கையில் வாடினாள் சீதை.
கௌரவர் தோற்கும் காலம் வரை
கூந்தல் விரித்திருந்தாள் பாஞ்சாலி
ஜராசந்த் அழிய காலம் வரும் வரை கண்ணனே ஒதுங்கி வாழ்ந்தான்.
நாடு மனைவி மகனை இழந்தும் சத்தியம் ஜெயிக்கும் காலம் வர காத்திருந்தான் அரிச்சந்திரன்.
பெரிய மீன் கிட்டும் வரை ஒற்றைக் காலில் தவமிருக்குதே கொக்கு.
எனவே எல்லாவற்றுக்கும் ...
காத்திரு, நேரம் மாறும்; துவளாது துடிப்போடு விழித்திரு.
உனக்கென்றோர் வழி பிறக்கும்.
*எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே*

No comments:

Post a Comment