Tuesday, October 22, 2019

பொன்மாலைப் பொழுதில் 64

492. வாரணம் ஆயிரம் சூழ வந்து நாரணன் தன் கைத்தளம் பற்றியக் கனவு கண்டாள் ஆண்டாள்.
நாலைந்து நரிகள் சூழ இடையில் மான் ஒன்று நின்று தவிக்க, கருங் காளையொன்று தனைக் காத்த கனவைச் சொன்னாள் ராதை.
காத்திருந்தேன்,எதிர்பார்த்தேன், வருவான் என்று நம்பியிருந்தேன், வந்தான் ... தாடி மீசையோடு, சிங்கம் போல் ... எனக்காக, இந்த ஜானுவிற்காக ராம் வந்த கனவு சொன்னாள்.
ம்ம்ம் ... இதெல்லாம் சரி தான்,
ஆனால் நான் ஆரம்பத்திலிருந்து  இப்படியில்லையே இப்போது என்ன ஆயிற்று என்று யோசித்தபடியே,
என்ன இது என்ன இது என்று குழம்பியபடியே உறங்கிப்போக
அப்போது ... அட இது கனவா? இதுதான் அதுவா ?.
கா வில் ஆரம்பிக்க ல் லில் முடிய ...
*காற்றில் ஓர் வார்த்தை மிதந்து வரக் கண்டேன்*


491. ஐயனே பிறவாமை வேண்டும், பிறந்தால் உமை மறவாமை வேண்டியது ஔவையார்.
நா தங்கள் நாமம் செப்ப வேண்டும், கை தங்களைக் கும்பிட வேண்டும், கால் தங்கள் சேவையில் ஈடுபட வேண்டியது அனுமன்.
ஹே பண்டரிநாதா தாங்கள் இங்கேயே தங்கி  பக்தர்கட்கு அருள வேண்டியது துகாராம்.
மழை பொழிய, வயல் விழைய, கொட்டில் நிறைய நல்லோர் வாழ வேண்டியது ஆண்டாள்.
அவரவர்க்கு வேண்ட ஆயிரம் இருக்க, எனக்கு ... ம்ம்ம் ...
கொடுத்துப் பழக வேண்டும்,
இரவில் உறக்கம்  வேண்டும், செயல் முடிக்கும் துணிவு வேண்டும்
கம்பனின் கவிநயம் கசடறக் கற்க வேண்டும், காளிதாசனின்
*மேக தூதம் பாட வேண்டும்*.


490. சந்தோஷமாயிருக்கிறது. மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது.
பாவையினுள் பரவசம் படர்கிறது.
நன்றாய்த் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்ட போதினும், என்றும் இருக்கும் சோர்வு இன்று இல்லை.
எல்லாம் உன்னால்தானென சொல்லவும் வேணுமா ?
சொல்லாவிட்டால் உனக்குத் தான் புரியாது போகுமா ?
கள்வா, புயலாய் இப் பூவையின் நெஞ்சினுள் நுழைந்தக் காத.....
காலையில் ... வந்திடுவாய் தானே?
என் காத்திருப்புக்கெல்லாம் பலன் கிட்டும் தானே.
நீ வந்ததும் உன்னோடு கதை பல பேச வேண்டும். கை கோர்த்த படி பனியில்  நடக்க வேண்டும்.
உனக்குப் பால் போளி செய்துத் தர வேண்டும். எனக்கு அதை நீ ஊட் ~டினால்~ டும் போது உன் விரலைக் கடித்து விட வேண்டும்.
வரைந்த ஓவியங்களை உனக்குக் காட்டித் தகுந்த பரிசு கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னும் ... இன்னும் ... ஐயோ மணி எட்டு தானா ? இந்த இரவு 'மட்டும்' விரைந்து  முடியாதா? நிலவு மறையாதா ? கிழக்கு விடியாதா ?
*செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதா?*


489. 'காடோ கடலோ நீயிருக்கும் இடந்தான் னெனக்கு அயோத்தி, இது நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்' என்றாள் சீதை.
'போரா? நரகாசுரனா? இரு, நானும் வரேன், இது நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்' என்றாள் சத்யபாமா.
'கனிகண்ணன் போகிறான், நானும்; நீரும் உம் பைநாகப்பாயை சுருட்டிக் கொள்ளும்,  சேர்ந்தே போவோம்' சொன்னது திருமழிசை ஆழ்வார்.
'என்னது குற்றமா, என் பாட்டிலா, வா, நீயும் நானும் சேர்ந்தே போய் அந்த பாண்டியனை ஒரு கை பார்ப்போம்' என்று கோபத்தோடு கிளம்பியது சிவம்.
ஆடி, செல்வம் தொலைத்து வந்தவனை, 'கவலை விடு, பாண்டிய நாடு போவோம், இனி நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்' என்றாள் கண்ணகி.
நாம் மட்டும் ஏன் பிரிந்திருக்கணும்? வேறுபாடுகளை ரசிப்போம். ஒன்றாய் இருப்போம்.
*இனி நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரம்*


488. கடலைக் கடக்கணும் என்றதும் வருண பகவான் பூஜையோடு தொடங்கினானே ராமன்.
வள்ளியை வளைக்க அண்ணனிடம் உதவி  வேண்டினான் வடிவேலன்.
பாரதப் போரில் வெற்றி பெற களபழியோடு ஆரம்பித்தான் துரியோதனன்.
சபரிமலை போவதற்கு முன் ஒரு மண்டலம் விரதம் தினம் பூஜை உண்டே.
இன்றும் கிராமங்களில் திருவிழா தொடங்குமுன் காப்பு கட்டுவதுண்டு.
அட எந்த கடிதமெனினும் மேலே புள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோமே.
ஒரு காரியம் செய்வதற்கு முன் ...
நானும் ... உன் கன்னத்தில் முத்தமிட *நேந்துக்கிட்டேன் நெய் விளக்கு ஏத்தி வச்சி*


486. கருவறையில் சந்திர காந்தக் கல் இருப்பதால் வெயில் காலம் குளிராகவும் குளிர் காலம் வெப்பமாகவும் இருக்கும்  பெரிய கோவில் - அதிசய கோவில்.
கேரளபுரத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன் கருப்பு வெள்ளை நிறத்தை மாற்றிக் கொள்கிறார் - அதிசய விநாயகர்.
விஜயவாடா அருகே, தரும் பானகத்தில் சரி பாதியைக் குடித்து மீதியை உமிழ்ந்து விடுகிறார் - அதிசய நரசிம்மர்.
ஒப்பிலியப்பன் கோவிலில், உப்பு இல்லை என்பதே தெரியாது அங்கு தரப்படும் - அதிசய ப்ரசாதம்.
தாராசுரம் கோவிலில் கல் ஒன்றை உருட்டி விட சரிகமபதநி ஓசை ஒலிக்கும் - அதிசய படிகட்டு.
அதிசயங்களோடு அதிசயம் நேற்று கற்றுக் கொண்டது, புதிய ஒரு ஆலாபனை, உன்னைக் கவர்வதற்கென்று அபூர்வமான, அழகான, ஆனந்தமான - *அதிசய ராகம்*

Sunday, October 13, 2019

பொன்மாலைப் பொழுதில் 63


484. கடல் கடந்து மாட மாளிகை பல ஏறி இறங்கி தேடி, கடைசியில் அனுமன் ராமனிடம் வந்து  சொன்னது ... கண்டேன் சீதையை.
எப்படி எங்கு என்றேதும் தெரியாது தவித்த குந்தி, கண்ணன் உண்மை சொன்னதும் அழுது கதறியது ... கண்டேன் பிள்ளையை.
செல்வத்தால் மயங்காது, ராஜ போஜனத்தில் மனம் லயிக்காது குசேலன் மனைவியிடம் கூறியது ... கண்டேன் கண்ணனை.
புது சூழல், புரியா மொழி, ராணுவம், தீவிரவாதம், அழுது போராடி மீட்டு ரோஜா கண்ணீர் மல்க  கதறியது ... கண்டேன் கணவனை.
அடங்காத கூந்தல், அடக்க முற்படும் விரல்கள், மருதாணி, வளையல், சிற்றிடை, கொலுசு ... வாவ் வாவ்;
எனக்கு ... நான்...
*கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை*


482. தினம் விடிகிறது, நாள் முடிகிறது.
யாருக்காகவும் காத்திருக்காது இது தினம் நடைபெறுகிறது.
சந்தோஷத் தருணங்கள் சட்டென்று மறைந்து விடுகிறது.
சங்கடமான விஷயங்களை மறக்க மனது மறந்து விடுகிறது.
இன்றும் நீ எனை நினைத்தபடி எங்கேயோ இருப்பது தெரிகிறது.
எதற்கிப்படி விலகியிருகோம் எனத் தெரியாது மனது தடுமாறுகிறது.
காலம் கனியக் காத்திருப்போம் வேறென்ன செய்வது.
நாட்களை நகர்துவதற்காக ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது.
இதோ இன்று உனக்காகப் பாடுகிறேன்
*காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுது*


481. கண்களாலே பேசி காளை என் நெஞ்சைக் கவர்தவள் நீயடி.
அன்பு பாசம் கொட்டி காதலைத் தழைக்கச் செய்தவள் நீயடி.
என் வெறும் வார்த்தைகளை கவிதையாய் மாற்றியவள் நீயடி.
எண்ணங்களில் வண்ணங்கலந்து ஓவியம் எனக் கற்பித்தவள் நீயடி.
உறக்கத்தின் உட்புகுந்து கனவில் வந்துக் கதைப்பவள் நீயடி.
இடை தெரிய உடை அணிந்து எனை தினம் இம்சை செய்பவள் நீயடி.
அன்பே அழகே *என் சுவாசக் காற்றே, சுவாசக் காற்றே ... நீயடி*


479. சிநேகம் சரியாய் அமைய வேணும்.
அதற்கும் இறை வரம் தர வேணும்.
விட்டுக் கொடுத்துப் பழக வேணும்.
எள் எனில் எண்ணையாக வேணும்.
இராமனுக்கு லக்குமண் போல, அனுமன் போல
துரியோதனனுக்கு கர்ணன் போல
பார்த்தனுக்கு பரந்தாமன் போல
ஜானுவுக்கு ராம் போல ...
எனக்கும் உண்டு, ஒரு தோழி, அன்று முதலே ... என்னுள் பாதி.
ஒற்றை வார்த்தையில் மட்டும், என்ன கேட்பினும்;
கொஞ்சம் சிடுசிடு, நிறைய கடுகடு.
கொஞ்சலாய் பேச எண்ணினாலோ ... ஐயகோ சனீஸ்வரனை சாப்பாட்டுக்கு அழைத்தது போலாகிவிடும்.
ஆனாலும் யார் கேட்டாலும் நான் சொல்வதென்னவோ
*எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி ... தென்றல் மாதிரி*


478. ஹூம் இதெல்லாம்...என்னென்பது.
வரவர உன்னை அதிகம் அழகுபடுத்திக் கொ(ல்)ள்கிறாய்.
கண்ணாடி முன்னாடி நொம்ப நேரம் நிற்கிறாய்.
பின்னாடி நான் நிற்பதைக் கண்டும் காணாதுப் போகிறாய்.
புரியாத வார்த்தைகளில், புலம்பலோ என்றெண்ண 'கவிதை எப்படி' எனக்கேட்டு எங்களைக் கலவரப்படுத்துகிறாய்.
உறக்கத்திலிருந்து விருட்டென்று விழிக்கிறாய். விவரம் கேட்டாலோ முழிக்கிறாய்.
பல சமயங்களில் எதையோ சொல்ல எண்ணி ஏதும் சொல்லாது மெல்ல நழுவுகிறாய்.
ஒருவேளை காதல் வலையில் கன்னி நீ  விழுந்திருக்காயோ ?
உன் நெஞ்சைக் கவர்ந்தவனோடு
தனிமையில் கட்டுண்டு கிடக்காயோ.
கனவிலும் நினைவிலும் காதலனே கதியென்று...
நங்காய்... அவ்வளவு சீக்கிரம் எமை விட்டு நழுவ ஏழுமா?
*மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ?*

475. அசோக வனத்தில் சீதை எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ^,
வாலி மாயாவி யுத்தம் முடிய குகை வாசலில் சூக்ரீவன் எத்தனை நாட்கள் காத்திருந்தானோ^,
பெருவுடையாரை தரிசிக்க தஞ்சை மக்கள் எத்தனை நாட்கள் காத்திருந்தனரோ^,
படையப்பனை பழி வாங்க நீலாம்பரி எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ,
சேனாபதியைக் காண அமிர்தவள்ளி எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ
~ஜானு ராமை சந்திக்க~
இதோ பார் ... உனக்கென்னைப் பிடித்திருக்கு என்றெனக்குத் தெரியும், அதையுன் செவ்வாய் திறந்து .... ம்ம்ம்
*ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தே*


474. குடிலோடு சீதை மாயமாக ராமனுக்கு ஒன்றும் புரியவில்லை
என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
சூதாடி செல்வம் சுற்றம் இழந்து ஒன்றும் புரியாது
அடுத்தென்ன எனத் தெரியாது  தவித்தார் தருமர்.
தேவகியின் எட்டாம் பிள்ளை சிறை தப்பிய சேதி கேட்ட கம்சன்
ஒன்றும் புரியாது ஏதும் சொல்லாது பயந்து போனான்.
திடீரென்று ஜானு யமுனை ஆற்றிலே பாட
ராம் ஒன்றும் புரியாது என்ன சொல்வதென்று தெரியாது பதட்டமடைந்தான்.
எனக்கும் தான் .. சிரிக்கிறாய், பேசுகிறாய்,
என் காஃபி எடுத்துக் குடிக்கிறாய் ... வாவ், எனக்கு ... எனக்கு....
*ஒன்னும் புரியல ... சொல்லத் தெரியல*

Tuesday, October 8, 2019

பொன்மாலைப் பொழுதில் 62

473. ஒரு சின்னச்சிறு விதை மரமாய் வளர்ந்து நிற்பது விந்தை
ரசிக்கத்தான் நேரம் இருப்பதில்லை பரவாயில்லை
போகும் வரும் பாதையில் புல் தரை
பார்த்ததுண்டா பூத்துக் குலுங்கும் பல வண்ணப் பூக்களை ?
நுகர்ந்ததுண்டா அதன் வாசத்தை?
இல்லை?சரி இங்குமங்கும் பறந்துத் திரியும் வண்ணத்துப் பூச்சிகளை?
அதன் சிறகோவியங்களை?
கொஞ்சிப் பேசும் பறவைகளின் குரல்களை? இல்லையா ...
மழையில் நனைந்தபடி ..
சரி விடுங்கள், இவற்றை ரசிக்காது வாழ்வது நம் உரிமை / கடமை.
பரவாயில்லை இதையாவது ...
காது திறந்து, மெய் மறந்துக் கேட்போமா ... இதோ தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை


472. பொன் மாலை நேரம்,
இனிய தட்பவெட்பம் நிலவும் நேரம்
ஆடிய ஆட்டங்கள் அடங்கும் நேரம்
பொருள் தேடியோடும் பொருளற்ற வேலையை புறம் தள்ளி விட்டு புனர் ஜென்மம் பெறும் நேரம்.
கவலை மறந்து கண்ணயரும் நேரம்
கனவுகள் பல முளைக்கும் நேரம்
செய்தவைகள் சரியா தவறா என்று எண்ணிப் பார்க்கும் நேரம்.
செய்ய வேண்டியவைகளை பட்டியலிட்டுக் கொள்ளும் நேரம்.
நான் கவிதை மழையில் உனை நனைத்திடும் நேரம்.
நீ முத்த மழையில் எனை நனைத்திடும் நேரம்.
அப்படியே சில பல கதைகள் பேசியபடியே மான் புலியை வேட்டையாடும் நேரம்.
இங்கீதம் கொண்டு மேகத்தின் இடையில் மறைந்து நிலவு தூங்கும் நேரம்


470. கிடைக்குமென்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்திடும்.
கண்ணால் கண்ட பொன் மான் சீதை கைக்குக் கிட்டவில்லை.
உலகை சுற்றி வந்தும் முருகனுக்கு பழம் கிடைக்கவில்லை.
சபரி ப்ரார்த்தித்துக் கேட்டது போலவே ராம தரிசனம் கிட்டியதே.
கர்ணன் கேட்கவில்லையே, விஸ்வரூப தரிசனம் வியாபித்ததே.
அள்ளித் தந்தானே கண்ணன், குசேலன் கேட்டானா என்ன?
ஆண்டாள், 'கண்ணனன்றி வேறு யாரும் எனைத் தீண்டல் தகா மன்மதா' எனக் கேட்டுப் பெற்றாள்.
ராம் பலமுறை கேட்டும் ஜானு யமுனை ஆற்றிலே பாடலையே.
அடேய் என் இனிய ஸ்நேகமே, நான் … மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை


469. வனம் புக கைகேயி கட்டளை இட ராமன் மறுவார்த்தை பேசலையே
கணவனுக்கு கண் தெரியாததால் தன் கண்ணை கட்டிக் கொண்டா காந்தாரி மறுவார்த்தை பேசலையே
யாதவ குலம் அழிய சாபம் கிடைத்த போது அதை ஏற்றுக் கொண்டான் மாதவன் மறுவார்த்தை பேசலையே
இனி எமை தொடாதீர் என மனைவி சொல்ல கேட்டுக் கொண்டார் நீலகண்டர், மறுவார்த்தை பேசலை
சோழ நாடு போதும் பாண்டிய நாடு போவோமென கோவலன் சொல்ல
சம்மதித்தாலே கண்ணகி, அவளும் மறுவார்த்தை பேசலையே.
நீ மட்டும் ஏனடி, எதற்கெடுத்தாலும் ஒரு காரணம், சாக்கு போக்கு ...
முடிவாய்ச் சொல்லி விட்டேன், நாளை நாம் போறோம், கொண்டாடுறோம், அனுபவிக்கிறோம், நோ ... நோ
மறுவார்த்தை பேசாதே


468. மகளதிகாரத்தை இப்படி எழுதவா ?
நீ உணவுண்ணும் அழகைக் காண நிலவிங்கு காத்திருக்கே, காண வா.
இன்றுனக்கு எந்த நிறத்தில் ஆடை வேணுமென்று கேட்க வானவில் வாசல் வந்திருக்கே, விரைந்து வா.
உன் சிறு விரல்களில் இருந்து வெளிப்படும் தானியங்களை உண்ண பறவைகள் கால்கடுக்க காத்திருக்கே, இரை தூவிட வா.
கை சேர்த்து, ஒற்றைக் கண் மூடி நீ
வழிபடும் அழகை ரசிக்க தெய்வங்- கள் இங்கே திரண்டிருக்கு;
உன் பொக்கை வாயில் தன் பெயர் வராதா என்று ஏங்கிக் காத்திருக்கு;
இவை மட்டுமா, கொம்போடு பூனை ஒல்லி யானையும் ... நீ வரைவது போல் தனை வடிவமைத்துக் கொள்ள சகல ஜீவராசிகளும் காத்திருக்கு ...
*கண்ணனா கண்ணே ... கண்ணனா கண்ணே என் நெஞ்சில் சாயவா*


464. மலர்கள் மணக்கும் ஆனால் இங்கு மலர்ந்திருப்பவையோ மலர்ந்த உன் முகத்தை ஞாபகப்படுத்துகின்றன.
இந்த இருக்கையில் அமர்ந்து நீ பிசைந்து கையில் உருட்டி உருட்டித் தருவாய்,  நினைவிருக்கிறது.
இந்தப் புற்களின் மேலமர்ந்து எத்-
தனை கதைகள் பேசியிருக்கிறோம்
இப்போது தரை காய்ந்து கிடக்குது, நெஞ்சில் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் இருக்குது.
இதோ இதோ இந்த மரக் கிளையில் தான், ஈரமான தாவணி நீ காயப் போட்டு விட்டு மறைந்து நிற்க ... 'நாணமோ இன்னும் நாணமோ' பாட்டு நான் பாடி ...
ம்ம்ம் ... நீர் வரத்து மட்டும் குறைவு,
மற்றபடி வேறெதுவும் மாறவில்லை, நாம் ஓடி ஆடிக் காதலித்த இந்த
*வராக நதிக்கரையோரம் ...*


463. ராமன் வந்து மீட்கும் காலம் வரை இலங்கையில் வாடினாள் சீதை.
கௌரவர் தோற்கும் காலம் வரை
கூந்தல் விரித்திருந்தாள் பாஞ்சாலி
ஜராசந்த் அழிய காலம் வரும் வரை கண்ணனே ஒதுங்கி வாழ்ந்தான்.
நாடு மனைவி மகனை இழந்தும் சத்தியம் ஜெயிக்கும் காலம் வர காத்திருந்தான் அரிச்சந்திரன்.
பெரிய மீன் கிட்டும் வரை ஒற்றைக் காலில் தவமிருக்குதே கொக்கு.
எனவே எல்லாவற்றுக்கும் ...
காத்திரு, நேரம் மாறும்; துவளாது துடிப்போடு விழித்திரு.
உனக்கென்றோர் வழி பிறக்கும்.
*எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே*