Saturday, August 10, 2019

பொன்மாலைப் பொழுதில் 59

447. சபரிக்குத் தெரியும், ராமன் தன்னை தேடி  வருவான் என்று.
கம்சனுக்குத் தெரியும் கண்ணன் தன்னைக் கொல்வதற்காகவே பிறந்தவனென்று.
முருகனுக்குத் தெரியும், குற வள்ளி தனக்காக காத்திருக்கிறாளென்று.
படிக்கும் பழக்கம் குறையுமென்று வள்ளுவருக்கு தெரியும், அதனாலே 2 அடிகளில் கருத்து சொன்னார்.
சரி, உனக்குத் தெரியுமா?
*மாயா மாயா மனமோகனா, நான் உனக்காகப் பிறந்தேனடா*
446. என்... அதே கல்லூரியில் மாணவன்
பார்வையாலேயே மேய்பவன்
படிப்பில் வல்லவன்
பழக்க வழக்கங்களில் நல்லவன், போல் தான் தெரிபவன்
விழியசைவை உணர்ந்து கொண்டு நடப்பவன்
இசைக் கலைஞன், நிபுணன்
சாதனைகள் பல புரியக்கூடிய தகுதி உள்ளவன்
கொஞ்சம் கொஞ்சமாய் எனை பாதித்தவன்
என் சிந்தனைகளைக் கெடுத்தவன்
எனைத் தன் பக்கம் இழுத்து கொண்டக் கள்வன்
ஆனால் இனியவன், இதுவரை பேசியதில்லை
*யாரோ இவன் ... யாரோ இவன்*


444. மறைந்திருந்து வாலி மீது அம்பு தொடுப்பது தவறென லக்ஷ்மணன் சொல்லத்தான் நினைத்தான்.
ராவணன் செய்வது தவறு என்று மண்டோதரி சொல்லத் தான் நினைத்தாள்.
'துரியோதனா தவறு செய்கிறாய்' என்று  திருதிராஷ்ட்ரன் சொல்லத்தான் நினைத்தான்.
பெரிய பழுவேட்டையர் நந்தினியை மணந்தது தவறென்று சோழ நாடு சொல்லத்தான் நினைத்தது.
அகலிகையை அடைய இந்திரன்
மாறு வேடமணிவது தவறென சொல்லத்தான் நினைத்தனர்.
நானும் .... சத்தியமாய் ... உன்...
உன் அன்பு அறிவு ... ஈர்க்கப்பட்டு... பலமுறை ... சரி முடிவாக, உனை உனை நான் ... காதலிக்கிறேன் ....
..... ..... ..... ..... ..... .....
..... ..... ..... ..... ..... .....
என்ற உண்மையை *சொல்லத்தான் நினைக்கிறேன்*


442. வயதுக்கு வந்தாகிவிட்டாது.
அனவரதமும கனவில் மனம் மிதக்க ஆரம்பித்துவிட்டது.
நோக்கும் எல்லாவற்றின் மீதும்
நேசம் நெஞ்சில் நிறைகின்றது
காதலென்று இதைப்பெயரிட்டுக் கொள்ள ஆசையாயிருக்கிறது
கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் சுண்டிவிட்டால் போதும்,
கவிதை அருவியாய்க் கொட்டுகிறது.
எல்லாம் தயார்,
கூடக் கொஞ்சி விளையாட ஜோடி மட்டும் வேண்டும்
மண்ணிலிருக்கும் எவரும் எனை மதிப்பதில்லை, எனவே
*வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா?*


441. முருகனின் கோபம் தணிய
பார்வதி சிவனின் சில திருவிளையாடற் சேதிகளை எடுத்துரைத்தாள்.
வியாசரின் சிஸ்யர் வைசம்பாயர்
ஜனமேஜயனுக்கு மகாபாரத சேதிகள் பலவற்றை சொன்னார்.
இலங்கை சென்று அருள்மொழி வர்மனை சந்தித்து
வந்தியத் தேவன் சேதி பல தெரிவித்தான்.
ஜானுவும் ராமும் ஒரே இரவில்
22 வருட சேதிகளைப் பரிமாறிக்கொண்டனர்.
என்னிடமும் இருக்கே சேதி சில, யாரிடம் சொல்ல? ம்ம்ம் ...
ஆம், அது தான் சரி, வேகமாய்ப் பரவும்,
*தென்றல் காத்தே ... சேதி ஒன்னு கேட்டியா?*


440. வருவேன் எனறாயே,
மழை வரும் முன் வந்திடுவேன் என்றாயே,
வாக்குறுதி வேறு தந்தாயே,
மழை நீர் மண் தீண்டு முன் தீண்டு தூரத்திலிருப்பேன் என்றாயே,
பச்சைப் புற்களின் மேல் பாவை வந்தமர்ந்திருப்பேன் என்றாயே,
நான் மழைக் கவிதை தர நீ மடி தருவேன் என்றாயே,
தாவணியைக் குடையாக்கி, நான் நனையாது காப்பேன் என்றாயே,
இதோ மழை ... நனைகிறேன் நான்
மறைந்து நின்று நான் தவிப்பதைக் கண்டு ரசிக்கிறாயோ ? இல்லை வர முடியாதுத் தவிக்கிறாயோ?
என் மனங்கவர்ந்தவளே, மயிலே,
*அடி நீ ... எங்கே?*

439. பரதன் நாடாளட்டும் ராமன் கானகம் புகவேண்டாமென்று கெஞ்சினான் தசரதன், கேட்கவில்லை கைகேயி.
இது பொய் மான், ஏதோ அசுரனின் சூழ்ச்சி, இது வேண்டாம் என்றான் லக்ஷ்மணன், கேட்கவில்லை சீதை.
ஏதோ பின்பலத்தோடு சண்டைக்கு நிற்கிறான், போகதே என்றாள் தாரை. கேட்கவில்லை வாலி.
சூது அதர்மம் கூடாதென்று பல அற உரை கூறினர் பீஷ்மரும் விதுரரும், கேட்கவில்லையே துரியோதனன்.
யாகத்திற்கு அழைக்கவில்லை தக்ஷன், நீ போக வேணாமென்றான் சிவன், கேட்கவில்லையே சக்தி.
இந்த வழியில் வந்தவள் தானே நானும், வழிதல் கூடாது, ஆவென்று பார்க்கக்கூடாது  என்று கட்டளை இட்டும் ... ம்ம்ம் ... *சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது*

438. விலகி விலகி நின்றேன்.
பழக பயந்தேன். கூச்சப்பட்டேன்,
மெல்ல நீ அன்பாய்ப் பேச சகஜமானேன்.
உண்மை உணர்ந்தேன், பால் தேன் போல் உன் நட்பு, சுவைத்தேன், ரசித்தேன், சிரித்தேன், விரும்பினேன், காத்திருந்தேன்,
நிறைய  எதிர்பார்த்தேன், பாராதிருந்தால் கோபம் கொண்டேன்.
அழுதேன், பிதற்றினேன், தொழுதேன், தவம் செய்தேன்,
வேறேதும் வேண்டேன், உண்மையைச் சொல்கிறேன்,
நான் *மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன்*

No comments:

Post a Comment