Tuesday, July 9, 2019

பொன்மாலைப் பொழுதில் 58

437. பார்த்து ப்ரமித்தது போதும். பிறவிப் பயன் தேடி பயணப்படுவோமா?
பேசி சிரித்துப் பழகியது போதும்,
அடுத்த கட்டம் நோக்கி நகர்வோமா?
கனவில் வந்தென் உறக்கம் களவாண்டது போதும். நிழலாய் எனை நீ நெருங்கி நில் வா.
கற்பனைகளில் காலம் கடத்தியது போதும், கை கோர்த்து சில பல கவிதை சொல்லிடு வா.
பார்க்கையில் பார்க்காது, பார்க்காத போது பார்த்து ரசித்தது போதும்.
பக்கம் வந்து வெட்கம் நீக்கி பாடம் கொஞ்சம் கற்றுத் தந்திடு வா
எட்டி நின்றே நாசி தொட்டது போதும்
*பூ மாலையே ... தோள் சேரவா*


436. தீயில் இறங்கச் சொன்னாலும் புனிதமானவள் என்று தெரியவர ராமன் மனைவியை ஏற்றுக் கொண்டானே.
எனை இனி தொடாதிரும் என்று சொன்ன பின்னும் இறை இறங்கி பரிந்துரைக்க திருநீலகண்டத்தை ஏற்றுக் கொண்டாரே அவர் திருமதி. 
கோபத்தில் திரு ஆவினன்குடி வந்தமர்ந்த பின், அன்னை சொல்லக் கேட்டு மனம் மாறி இறங்கி வரவில்லையா முருகன்.
இரண்டாய்க் கிழித்து, நரம்புகளை உருவி, இரத்தம் குடித்து ... பாலகன் ப்ரகலாதன் அருகில் வர கோபம் தனிந்ததே நரசிம்மம்.
நீ மட்டும் ஏனடா, இன்னும் ஏறுமுகத்தில்.
கொஞ்சம் விட்டுக் கொடு,
உனக்குப் பிடித்த பருப்புப் பாயசம், மிதக்கும் திராட்சை முந்திரியோடு
உண்டு கோபம் தனி, சரியா,
*கண்ணா ... வருவாயா ?*

435. கனவு கலையும், பொழுது விடியும்.
கைப்பேசி வழி உன் காலை வணக்கம் வரும்.
பறவைகள் படபடவென்று சிறகடித்துப் பறந்துத் திரியும்.
இன்று என்ன கேட்கப் போகிறாயோ என்ற எண்ணம் தோன்றும்.
எசகு பிசகாய் ஏதாவது கேட்பாய், எனக்குக் கோபம் வரும்.
எருமை பன்னி என்றுனை பாராட்டி மகிழ்விக்க நேரிடும்.
கொஞ்ச நேரம் தான், என் மனம் குழையும், பேசத் தூண்டும்.
எதைச்சொன்னால் நீ சிரிப்பாய் என்று யோசிக்கத் தோன்றும்.
உன் பழைய வரிகளைப் படிக்க மனதுளுன் திருதிரு முகம் விரியும்
அதற்குள் மாலை மணி ஏழு ஆக அவ்வமயம்
*ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்*


434. என்ன சோகம் என்று கேட்ட தோழி, சொல்கிறேனடி கேளு நீ.
நீலச் சட்டை, நெற்றியில் பட்டை, நேற்று கோவிலில் பார்த்தோமே, நினைவிருக்கா? அத் திருவுருவம் என் நினைவை விட்டு நீங்கா.
என் நிறத்தை ஒத்தவன், நெஞ்சில் காதல் தீயை வைத்தவன்.
தேவாரம் பாடினான், தேனை என் காதில் ஊற்றினான்;
ஒரு சிறு பார்வை தான், மெல்லச் சிரித்தான், என்னை தன் பக்கம் சரித்துக் கொண்டான்.
என் கரம் பிடித்து கொஞ்சம் அதிகம் சுண்டல் தந்ததாய் நினைவு.
உறக்கத்திலெல்லாம் இனி அவன் வரவு, தினம் கனவு.
நேற்று யாருடைய மண்டகப்படி பாரடி, *என் நெஞ்சைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி?*

433. பொய்யானப் பொன் மானை பிடிக்கப்போய் மெய்யான தன் பெண் மானை ராமன் தொலைத்தான்.
கர்வம் மோகம் வழி நடத்த அதர்மப் பாதையில் பயணித்து ராவணன் தன்னையே தொலைத்தான்.
ஏனென்று கேட்க முடியாது காமம் கண் மறைக்க சாந்தனு கங்கையில் தன் சந்ததியைத்  தொலைத்தான்.
பழி சொல்லுக்கு பயந்து, குந்தி தான் பெற்ற பிள்ளை கர்ணனை ஆற்றில் தொலைத்தாள்.
தன் விதி பற்றித் தெரிந்திருந்தும் தேவகியின் எட்டாவது பிள்ளையை கம்சன் தொலைத்தான்.
ஆலவாயனுக்கு ஆலயம் கட்டும் பணியில் அரசன் தந்த பணத்தை திருவாதவூரார் தொலைத்தார்.
உன் புன்சிரிப்பும் மென்பேச்சும் *என்னவளே என் இதயத்தை தொலைத்து விட்டேன்*



432. கார்த்திகை பௌர்ணமி இன்று.
சிவபிரான் திரிபுரனை எரித்து தேவர்களைக் காத்த நாள் இன்று.
மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் தோன்றிய தினம் இன்று.
நெற்றிக் கனலிலிருந்து கந்தன் அவதரித்தத் திருநாள் இன்று.
ராதையும் கண்ணனும் ராசலீலை புரிந்த தினம் இன்று.
முன்னோர்கட்கு முக்கியத்துவம் நல்கும் நன்னாள் இன்று.
குருஷேத்திர யுத்தம் தொடங்கியது பௌர்ணமி.
அட நீ பிறந்ததே பௌர்ணமி, என் நெஞ்சிலிருந்து என்றும் நீங்காத *நீ ... பௌர்ணமி*


431. மறந்தததேயில்லை எனினும் ஏதாவதோர் வழியில் உன் ஞாபகம்.
நாளை கார்த்திகை, ஒரு பொரி உருண்டையை இருவரும் கொஞ்ச- ம் கொஞ்சமாய்த் தின்ற ஞாபகம்.
இன்று ஐஸ்கிரீம் விளம்பரம் எங்கு பார்த்தாலும் அன்று பேரடைஸில் நாம் அடித்தக் கூத்து ஞாபகம்.
பிறந்த நாள் யாருக்கு வந்தாலும், உனைக் கேட்காது பரிசு தந்து ஸ்கேலில் அடி வாங்கிய ஞாபகம்.
இன்று எந்தப் பந்தியில் சாப்பிட அமர்ந்தாலும் எக்ஸ்ட்ரா பாயசம் கேட்கும் உந்தன் ஞாபகம்.
'96 படத்தில் ராமின் வாயிலிருந்து ரொட்டி கவ்வுமே மான், பார்த்ததும் எனக்கு ... ஞாபகம்.
ஒருநாள் மதியம் மீன் குழம்பு கொண்ர்ந்து உண்ண வற்புறுத்தி, அன்றிலிருந்து கடிகாரம்
*ஒரு மணி அடித்தால், கண்ணே உன் ஞாபகம்*

No comments:

Post a Comment