Tuesday, February 26, 2019

பொன்மாலைப் பொழுதில் 49

372. வேர் இல்லாது மரம் நில்லாது
விதை இல்லாது செடி முளைக்காது
மலரில் மணம் மறைந்திருக்கும்
கடல் எனில் அலை நுரை உண்டு
சுருக்கமாக எல்லாவற்றுக்கும் அடிப்படையில் ஏதோ ஒன்றுண்டு.
கவிதைகளும் கற்பனைகளும் கூட இதற்கு விதிவிலக்கன்று.
அட தினம் வரும் ஒரு கவிதை, இதன் பின்னும் ஒரு காதல் கதை.
காதல் என்று வந்த பின்பு காதலி என்று ஒருத்தி இல்லாதெப்படி ?
யாரென்று சொன்னதில்லை தான்,
ஆனால் இல்லையென்று இதுவரை இயம்பியதில்லை தானே.
ஆம், *எனக்கொரு காதலி இருக்கின்றாள்*

371. இப்போ எதுக்கிவ்ளோ குதிக்குறே?
காஃபி சூட இல்லே அவ்ளோதானே, சூடாக்கிக் குடி; சிம்புள்.
இன்னும் எவ்ளோ நாள் இந்தக் கெட்ட பழக்கம்,
பொண்டாட்டி காஃபி தரணும் சோறு பொங்கணும், ஆணாதிக்க புல்ஷிட்.
உன்னல்லா ... எவ்ளோ பாரதி வந்தாலும் திருத்த முடியாது,
பெண்ணடிமைக்கு விடுதலை கிடைக்காது.
தக்காளி மிதந்தா ரசம் இல்லியா சாம்பார், போவியா,
உப்பு இல்லே காரம் பத்தலே, நைநைநை ன்னு;
ஆபிஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு வரணுமா, சரி வழில எவ்ளோ கடை இருக்கு.
நீயும் கொட்டிக்கிட்டு எனக்கும் ஏதாவது வாங்கிட்டு ...
பொம்பளைன்னு ஒருத்தி வீட்ல இருந்தா நாலு எடத்துல தலை முடி விழத்தான் செய்யும்; வேலைக்காரி வர்லே, என்ன செய்ய;
இவ்ளோ சொல்றியே, ஒருநாள், ஜஸ்ட் ஒருநாள்,
சீரியல் நடுப்பற டிஸ்டர்ப் செய்யாத
*கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா?*

370. கிறுக்குப்பய, ரவுடியாத் தெரியறா, பாசமாப் பழகுறா ன்னு பார்த்தா ...
தனி ஆளா நின்னு திருவிழா தேரை ஓட வச்சதுக்கு பாராட்னா ...
ரஜினி போல தலை முடியை ஸ்டைல் செய்வதும் கண்ணாடியை சுத்தி சுத்தி மாட்டுவதும்;
புகை விடாதவனா இருக்கணும்.
2 முறுக்கு அதிரசம் தந்ததுக்கே 'தேவாமிர்தம்'ங்கானே, லூசுப்பய.
கொல்லையில குளிக்கையில அவ நெனப்பா ... ஐய நாந்தே லூசோ ?
இருந்தாலும் ... இப்டியா சடங்கான பொண்ணு கிட்ட வந்து 'அம்சமா இருக்கே' ன்னு ....
*அய்யய்யோ என் உசுருக்குள்ள தீயை வச்சா அய்யய்யோ*


369. ஆரம்பத்தில் அசமந்தன், கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லித் தந்தாய்.
விழி பேசும் வார்த்தைகளையும் சிரிப்பின் அர்த்தத்தையும் புரிய வைத்தாய்.
அழகாய் உடுத்தி அளவாய் உண்டு உன்னிடம் கற்றுக் கொண்டேன்.
வீணை மீட்டி விளையாடுகிறாய், உன் விரல் தொட்டு வணங்க வெட்கிச் சிவக்கிறாய்.
கவிதையென்று என்ன எழுதித் தந்தாலும் படித்துப் பாராட்டுகிறாய்.
கை கோர்த்து மழையில் நனைந்து, மடியில் படுத்து நிலவை ரசித்து;
'எனக்கா, எனக்கே எனக்கா?' என்று எண்ணி மகிழ்ந்துப் போகிறேன், கனவுலகில் திரிகிறேன்.
மேகத்தினிடையில் மிதக்கிறேன், சிறகின்றி ... மெல்ல மெல்ல
காதல் என்னை உந்தித் தள்ள
*நான் போகிறேன் மேலே மேலே ...*

368. நினைத்துப் பார்க்கிறேன்.
ஞாபகம் வர ரசிக்கிறேன்.
நீல உருளை ஏதும் சுழலாது புகை சூழாது பின்நோக்கி நகர்கிறேன்.
அன்றொருநாள் ...
கன்னி, எனை நோக்கி வந்தனை.
காற்றில் பறக்கும் கருங்கூந்தல்,
மை தடவிய கரு விழி
விரலி பூசிய வதனம்
விரல்களில் மருதாணிச் சிவப்பு
மஞ்சள் பாவாடை, பச்சை தாவணி,
காதில் நீல ஜிமிக்கி, முத்து மாலை
மூக்குத்தி மின்னும் மரகதப் பச்சை
சிகப்பு சாயம் பூசிய உதடு, கையில் தங்க கிண்ணம் மஞ்சள் வண்ணம்.
உள்ளே வெள்ளை கொலுகட்டை,
கோவைப்பழ உதடு பாதி சுவைத்து ஊட்டிவிடுகிறாய் எனக்கு.
நீளும் என் கை விரல், சட்டென்று இழுத்து மறையும் சந்தன இடை.
இன்னும் ... இன்னும் உனை எண்ண எண்ண, ஆசை பொங்க
*நெஞ்சமெலாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே*


367. உசந்தது எது என்பதில் வேறுபடும் ஒவ்வொருவரின் கருத்தும்.
தாய்க்கு பிள்ளைகளின் நலத்தை விட
உசந்தது எதுவுமில்லை.
பசித்தவனுக்கு ஒரு கைப்பிடி உணவு,
வேறேதும் உசந்ததில்லை.
உழவனுக்கு வயல் விளைச்சலை விட
உயர்வானது வேறு இல்லை.
பேராசைக்காரனுக்கு பணம் பொன் பொருள் தவிர
பிற ஏதும் பிரதானமில்லை.
காதலனுக்கு தன் காதலியின் ஒரு பார்வை, சின்னச் சிரிப்பு, முத்தம்
வேறேதும் உசந்ததில்லை.
எனக்கு, ஆருயிரே *உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லே*


366. 'கண்டேன் சீதையை !' என்று ஓடி வந்துச் சொன்னது அனுமன்.
'எடுக்கவோ, கோர்க்கவோ ?' என்று சொன்னது துரியோதனன்.
'இன்னொரு கண் இருக்க கவலை எதற்கு?' சொன்னது கண்ணப்பன்.
மண் திங்கவில்லை என்று பொய் சொன்னது மாயக் கண்ணன்.
'பித்தா' என்றே தொடங்கிப் பாட சுந்தரர்க்குச் சொன்னது சிவன்.
தாகம் அடங்க மோகம் தொடங்க ... வள்ளியிடம் சொன்னது வடிவேலன்
நாலைந்து நாட்கள் கவிதை வரலை அதற்காக இப்படியா சொல்வது ?
சந்தேகமாய் இருக்கு எனக்கு,
*சொன்னது நீ தானா?*

Sunday, February 17, 2019

பொன்மாலைப் பொழுதில் 48

365. நீ என்ன செய்தாலும்  யாராவது ஏதாவது சொல்லத்தான் செய்வார்.
உன்னைப் பற்றி வாய்க்கு வந்தபடி உளராவிட்டால் ஊரார் உறங்கார்.
நின்றுகொண்டிருந்தால் 'கவுக்க தயாரா நிக்கா' என்பர்.
சும்மா அமர்ந்திருந்தாலோ 'சோம்பேறி' என்பர்.
ஓடி ஓடி உழைத்தால் 'பேராசை பிடித்தவன்' என்பர்.
தர்மம் செய்தாலோ 'காசு அருமை தெரியாத பைத்தியம்' என்பர்.
புகழுரைக்கு மயக்காதே, யாரும்
பழித்தால் கலங்காதே, உனக்கு உன்னைத் தெரியும், குழம்பாதே.
அறிவை வளர்த்துக் கொள்.
நல்லதோ கெட்டதோ நீ முடிவெடு;
இருக்கையில் ஆடாதே, இல்லாப்பொழுது அழாதே.
தீர்மானி திட்டமிடு செயல்படு
அடுத்தவர் சொல் மற, துற.
தருமி என்பார், கருமி என்பார், *ராஜா என்பார், மந்திரி என்பார்*


364. சிறையில் அவதரித்தவன்
எங்கள் சிரமங்கள் விலகத் துணையிருப்பவன்.
இருள் நிறத்தவன்,
இப்புவிக்கு அருள் ஒளி தரும் மனம் படைத்தவன்.
கோபியர் ஆடை கவர்ந்தது அன்று,
பாவியர் பாதம் பணிய பாவம் தீர்ப்பது இன்று.
வெண்ணையை மட்டுமா திருடினாய்
எங்கள் நெஞ்சையும் அல்லவா களவாடினாய்.
காலிங்க நடனம் ஆடினாய்,
ராதையோடு காதல் கூத்து நடத்தினாய்.
உன் குழலோசை மயக்க பால் சுரந்தது, மரம் வளர்ந்தது,
நதி நிறைந்து ஓட, கிளி பேச ஆட
*பூ மலர்ந்திட, நடமிடும் பொன்மயில்*


363. பட்டுப்புடவை,
தலையில் கொண்டை, சுற்றி மல்லி
குளத்தில் இறங்குகிறாய்
பின்னால் தயங்கி நிற்கிறேன்
என் கை பிடித்திழுத்து
நெஞ்சில் நெஞ்சால் முட்டி ...
அழகுடி நீ.
*
நாற்காலியில் அமர்ந்திருக்கிறாய்.
காலை மேலே வைத்து, இரு கையால் இருக்கிக்கொண்டு;
கருநீலப் புடவை
அதே நிற ரவிக்கை
சந்தன நிறமா, எலுமிச்சையா,
சின்னக் கீற்று போல் தெரியும் உன் சிற்றிடை; ஐயகோ ...  அழகுடி நீ.
*
துணி துவைக்கிறாய் நீ, அதை உலர வைத்து உதவுகிறேன் நான்.
தேநீர் நீ தயாரிக்க, சூடேற்ற, குடிக்க  அருகிலேயே உதவிக்கு நான்.
பாடல் நீ பாட, அடுத்த வார்த்தை ஞாபகப்படுத்த உதவி நான்.
ஆடை அணிகிறாய், அரை கண்ணால் ரசித்தபடி நான்;
வாவ் ...அழகுடி நீ.
*
~புகைவண்டிப் பயணம், இரவு நேரம்~
~மடியில் நீ, பறக்கும் தாவணி~
....
....
*அழகே ... அழகு ... தேவதை*


362. பார்த்தேன் ப்ரமித்தேன்
மெய் சிலிர்த்தேன், மயங்கினேன்
~பல~ சிலமுறை யோசித்தேன்
பிடித்திருக்க, பேசிப் பழகினேன்
சிரித்தேன், சிரிக்க ரசித்தேன்.
தனிமையில் பரிதவித்தேன்.
பார்க்காப் பொழுது பிதற்றினேன்.
இணைந்திருக்க எனை மறந்தேன்.
பிரியாதிருக்க வழி யோசித்தேன்.
வரம் யாசித்தேன்.
கவிதை எழுதினேன்
வாசித்துக் காட்டினேன்.
பாராட்ட மகிழ்ந்தேன்
நிறைய சிநேகித்தேன்,
நிழலாய்த் தொடர்ந்தேன்
அவள் இல்லாதிருக்க வெறுத்தேன்
துதித்தேன், துவள்ந்தேன்
அன்பை அனுபவித்தேன்,
பாச மழையில் நனைந்தேன்
பார்வை அமுதம் பருகினேன்
என்னை மறந்தேன்
கை தொட்டேன், முத்தமிட்டேன்
அணைத்துக் கொண்டேன்
புரிந்தது, அவள் *தீண்டத் தீண்டத் தித்திக்கும் தேன்*


361. காலையிலேயே இன்றொரு நல்ல நாள் என்பதை உணர்ந்தேன்.
என் கோரிக்கை நிறைவேறப் போவதைப் புரிந்து கொண்டேன்.
சாளரத்தில் இரு சிட்டுக் குருவிகள் கொஞ்சிக் குலாவக் கண்டேன்.
தோட்டத்தில் புதிதாய்ப் பூத்த பூக்களின் வாசத்தை நுகர்ந்தேன்.
சாலையில் நடக்கையில் எங்கோ நல்ல இசை ஒலிக்கக் கேட்டேன்.
மழலையரோடு மழலையாகி நீ சிரித்து மகிழ்வதை ரசித்தேன்
'எனக்கென பிறந்தவள்' பாடலைப் பாடலாமா என்று எண்ணினேன்
மிதந்து கொண்டே *நிலத்தில் நடக்கும் நிலவைக் கண்டேன்*.


360. எதற்கு நாம் அறிமுகமானோம்.
ஏன் நீ என்னோடு சிரித்துப் பேசிப் பழகினாய்.
சரி பிடித்திருக்கட்டும், அதை எதற்கு என்னிடம் உரைத்தாய்
ஆரம்பத்தில் முறைத்து விலகினாய் இப்போதெதற்குத் திரும்பி வந்தாய்.
என்ன செய்து என் கவனத்தை உன் பக்கம் திருப்பினாய்.
நான்கு நாள் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருக்கிறேன்.
முன்பெல்லாம் ஊண் உறக்கம் என்று நேரம் போக்குவேன்.
இப்போதோ ஊண் இறங்கவில்லை, உறக்கம் நெருங்கவில்லை.
ஒருநாள் ஓட்டுவதே இத்தனை கடினமாய் இருக்குதே
இன்னும் மூன்று நாள் ... அய்யகோ.
நடுநிசி, நான் மட்டும் கொட்டக் கொட்ட விழித்திருக்க,
வீட்டிலுல்லோர் உறங்கியாச்சி,
இருமி இருமி உருமும் பக்கத்து வீட்டுத் தாத்தா படுத்திருச்சி
*ஊரு சனம் ... தூங்கிருச்சி*


359. அழகில் தெய்வீகம்
பேச்சில் சாத்வீகம்
பார்வையில் கம்பீரம்
உள்ளத்திலெப்போதும் உற்சாகம்
உதட்டில் திருவாசகம்
மனதில் திருமந்திரம்
நடையே நாட்டியம்
பாட, தேவ கானம்
பெண்குலத்திற்கு நீ வெகுமானம்
உனக்காருமில்லை சரி சமானம்
நீ பார்த்தால் பொழியும் கார் மேகம்
பழகப் பழகப் புரியும் பிள்ளை மனம்
பாவையுனைச் சுற்றி பூ வாசம்
பளபளவென்று மின்னும், உன்
*ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்*

Sunday, February 3, 2019

பொன்மாலைப் பொழுதில் 47


358. நம் காதல் வரலாற்றுக்கு அங்கங்கு நினைவுச் சின்னங்கள் உண்டே.
முதலில் பார்த்துக்கொண்டது தேர் ரத வீதி முக்கில்.
பேசிவிட்டு ஓடினாயே, பாட்டு வாத்தியார் வீட்டின் அருகில் சந்தில்
சிரித்து சிரித்துப் பழகியதெல்லாம் தெப்பக்குளம் மறைவில்.
முதல் சண்டை ரெட்டியார் கடை வாசலில்.
பின் சமாதானமாகி சாக்லேட் வாங்கித் தந்ததும் அங்கேயே தான்.
விரல் கோர்த்து நின்றது மீனாட்சி கல்யாண மண்டபத்தில்.
மேலே எச்சரிக்கை என்று எழுத மறந்து போனதால் என்ன நடந்தததென்று சொல்ல முடியாது போனது,
காமராஜ் பூங்காவில் *ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்*


357. உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து போகிறோம்.
சேர்த்து வைத்ததை எண்ணக்கூட முடியாது போய்ச் சேருகிறோம்.
நாளைய தேவைக்கு என்று இன்று வாழ மறக்கிறோம்.
எதுவும் நிரந்தரமில்லை என்பதை எண்ண மறுக்கிறோம்.
கூடி வாழ்வோம், கொடுத்து மகிழ்வோம்.
எதையும் கொண்டு வரவில்லை, எதுவும் கூட வரப்போவதுமில்லை.
இருக்கும் வரை சுயநலமின்றி முடிந்த வரை பொதுநலக் கொள்கையோடு;
இன்று சுகமாய்த் தெரிவது நாளையே சுமையாய் மாறும்.
ஆசைப்பட்டு, கிட்டியதும் மறந்து, அடுத்தெது என்று மனம் அலையும்.
வாழ்க்கையே இவ்வளவுதான்
எல்லாம் முடிந்து போகையில் ஆறடி
இருக்கையில் *நடந்தால் இரண்டடி*


356. சித்திரையைச் சேர்ந்து வரும் பௌர்ணமி சிறந்த நாளாகும்.
வைகாசியின் விசாக நட்சத்திரம் வடிவேலனுக்கு விசேஷ தினம்.
ஆடியின் வெள்ளி, அமாவாசை இரண்டும் அமர்க்களமாகும்.
அவிட்ட நக்ஷ்த்திரம் ஆவணியில் சேர்ந்து வர அனைத்திற்கும் சுபம்.
புரட்டாசியில் வரும் சனி விஷ்ணு பகவானுக்குப் ப்ரியமான தினம்.
கார்த்திகை பௌர்ணமி சிவன், முருகன் இருவருக்கும் விசேஷம்.
மார்கழி திருவாதிரையில் களி படைத்து சிவனை வழிபட உசிதம்.
தை பூசம் அன்று முருகனை எண்ண, வணங்க முக்தி கிட்டும்.
இவ்வாறு இன்று இது இதற்கு என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பக்ஷே எதெங்கிலும் திவசம் என்டே மனோகரமாய பெங்குட்டி, புஷ்பம்,
*சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம்*


355. துஷ்யந்தன் சகுந்தலையை மறந்தது
துர்வாசரின் கோபத்தால்.
ப்ரம்மாஸ்திர மந்திரத்தை கர்ணன் மறந்தது
பரசுராமரின் சாபத்தால்.
இராவணன் வீழ்த்தப்பட்டது
வாழ்வின் ஒழுக்கத்தை மறந்ததால்.
கூடஇருப்போர் தன்னிலை மறந்து ஆடியது
கண்ணன் குழலிசையால்.
ஆக மொத்தம், மறதியால் நன்மை தீமை இரண்டும் இருக்கு.
என்னைப் பொறுத்தவரை நான் என் கவலை மறந்து ஈர்க்கப்படுவது
*உன் சிரிப்பினில் ...*


354. இவளா, இது சரியா? என்றென்னுள் மீண்டும் மீண்டும் ஒரு விவாதம்.
இதுபோல் இதுவரை இருந்ததில்லை தடுமாற்றம்.
மனதில் குழப்பம் தயக்கம் எனில்
இரவில் ஏது உறக்கம்,
காலை கண் விழிக்கையில் நல்ல சகுனம்.
கனவில் கண்டேனே ராதை கண்ணன் திருவுருவம்.
எங்கோ ஒலிக்க, காதில் விழும் ருத்ரம்.
புரிந்தது, நழுவ விடக்கூடாத நல்ல ஒரு  சந்தர்ப்பம்
இன்று பேசி விடவேணுமென்ற உத்வேகம்.
அவள் ஒரு கவிதையில் 'குடையாய் வருவேன்' என்று சொன்ன ஞாபகம்
தைரியமாய்க் கிளம்ப, துணையாய் மின்னல் இடி முழக்கம்.
தலை உயர்த்தி வான் நோக்க
*அதோ மேக ஊர்வலம்*


353. உலகிலேயே இரண்டாவது பழமையான நகராட்சி (1687).
தடை சொல்ல கழகம்லா அப்போ இல்லாததால இது உருவாச்சி.

ஆசியாலேயே பெர்சு சிருசேரி ஐடி பார்க்கு.
ஒருதபா எட்டி நின்னு பாத்தாலே சோக்கா இருக்கு.

ஜன நடமாட்டம் அதிகமிருக்கும் ஊரு, ரங்கநாதன் தெரு போய் பாரு, ஆய்டுவே நீ பேஜாரு.

சதா சாதா கட்ல போட மெரினா கீது.
தள்ளிகினு போணுமா மாபலிபுரம்;

நாமிணைந்து நாசமாக்கிய கூவம்.
என் செய்யினும் தீராது பாவம்.

மால்னா ஃபோனிக்ஸ்.
க்ரிகெட்னா சேப்பாக் (1916).
பஸ்ஸுக்கு கோயம்பேடு.
ட்ராஃபிக் ல வர்றது பெரும்பாடு.

கய்த கஸ்மாலம் சோமாரி ன்னு கத்துவா,  கண்டுகாத போ நீ.

இன்னு இருக்கு ஏராளம்,
கூட வர்றியா சவுண்டு குடு இல்லியா கம்முனு கெட, நான்
*மெட்ராஸ சுத்திப் பாக்க போறேன்*


352. எப்பொழுதும் போல் நாராயணன் நாமத்தை நா நவில்ந்தபடியிருக்க,
அருகில் சப்தம் கூர்ந்து கவனிக்க, கொஞ்ச தூரத்தில் வெள்ளைப் பரியில் இளைஞன் ஒருவன்;

பாற்கடலில் குளிப்பானோ, நல்ல நிறம். நிறைய தலைமுடி, தின் தோள்கள், ஆயிரம் ஆனைகளை அடக்கியாளும் வல்லமை உள்ளவனாய்த் தென்பட்டான்.

சிகப்புப் பட்டு, நீல அங்கவஸ்திரம்.
ஆரென்று அறிந்து கொள்ள ஆர்வம் எழ, வேகமாய் விரைந்தான், விடாது விரட்டினேன்.
மலையேற்றம் நீரோடை எல்லாம் கடக்க, கூடவே தொடர்ந்தேன்.

கண்ணிமைக்கும் நேரம் தான் காளை அவன் பறந்தான்.
இடது வலது நாற்புரம் தேடியும் கண்ணில் சிக்காது மறைந்தான்.
மந்திரவாதியோ? மாயவனோ? புரியாது தவித்தேன்.

சோர்ந்து நான் நிற்க, ஒரு கை பின்னாலிருந்து என் இடை பற்ற,
திடிக்கிட்டு நான் திமிர
அவ்வமயம் மின்னல் வெட்ட,
அழகு வதனம் கண்டு விட எண்ண
பூட்டிய கண்கள் திறந்து கொள்ள
இதுவரை தெரிந்தவை மறைய
*ஒரு நாள் ஒரு கனவு*