Wednesday, October 24, 2018

பொன்மாலைப் பொழுதில் 39

301. நிற்காது ஓடு, ஓடிக்கொண்டேயிரு
உன்னோடு வர வேண்டியவர் வருவர்.
நீ வேண்டாமென்றாலும் தொடர்வர்.
வராதாரை வேண்டி அழைத்தாலும் வரார்.
அவர் வரத் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டிருப்பதை உணர்.
நீ எதையும் தேடத் தேவையில்லை.
உனக்கானது வந்து சேரும்.
நீ போகும் பாதை புரிந்து கொண்டு, தக்க சமயத்தில் குறுக்கிடும்.
ஓடு ஓடு ஓடுவது மட்டுமுன் வேலை
நடக்கவேண்டியவை தானே நடந்தேறும்.
வளைவுகளில் வளைந்து விழ வேண்டிய இடத்தில் விழுந்து, எழும் சமயம் வீறுகொண்டெழுந்து விவேகத்தோடு விரைந்து ஓடு.
துன்பம் துடை. இன்பங்களில் இணை. உனக்கேது தடை.
உன் பணி முடிந்தவுடன் உன் பாதை முடியும்; அதுவரை ஆடு ஓடு பாடு
உன்னால் எல்லாம் நலமே
*நானென்ற நதிமுலமே*


300. எது எப்படியிருந்தாலென்ன,
எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தானே மெய்;
விரும்பினாலும், வெறுத்தாலும்,
இரண்டும் இல்லாது தவிர்த்தாலும்,
தனித்திருந்தாலும்,
சில சமயத்தில் ஒட்டி, வேறு பல சமயங்களில்  எட்டி நின்றாலும்,
புரிந்த போதும் புரியாததுபோல் பாவித்தாலும், புரியாத போதும் புரிந்ததாய்ப் பாராட்டினாலும்
இன்றும் இதானா என்று இகழ்ந்தாலும்,
இன்று இதுவா, நாளை எதுவோ என்று எண்ண வைத்தாலும்,
ஏன் எப்படி எதற்கு என்றெதுவும் சொல்லாது மறைத்தாலும்,
எது வரை இது போகும், என்று நிற்குமென்றுத் தெரியாதெனினும் எப்போதும் எல்லாருக்கும்
*வந்தனம் ... என் வந்தனம்*

299. என்ன கேட்டாலும் அசராது விடை தருகிறாளே.
ஏழெட்டு வரிகளில் விளக்கி விவாதிக்கிறாளே.
அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம், ஐரோப்பிய தொழில் நுட்பம் அத்தனையும் அறிந்திருக்கிறாளே.
1917 லிருந்து இன்றைய வரலாறு வரை இயல்பாய் இயம்புகிறாளே.
ம்ம்ம் ... இவளை வேறெப்படி மடக்க?
கடினமான விடயங்களையெல்லாம் கரைத்துக் குடித்தவள் எளிமையான கேள்வியில் ஏமாறலாமே,
மலை தடுக்கி யாரும் விழுவதில்லை, கல் தடுக்கி தானே.
சரி சரி ஒரே ஒரு வினா, ஆம் / இல்லை விடை; ஒரு வார்த்தை ஒரு கோடி, தயாரா ?
*சந்திரனைத் தொட்டது யார் ... ஆம்ஸ்ட்ராங்கா ?*

298. சரி, புது ஜிமிக்கி, புரிகிறது
அதை இப்படி தட்டித் தட்டி ஆட்டித் தான் காமிக்கணுமா ?
நான் பார்ப்பதெப்படித் தெரிகிறது? சட்டென்று இங்கு அங்கு இழுத்து மறைத்துக் கொல்கிறாயே.
மல்லிப்பூ சூடிய அன்றாவது முதுகு தெரிய ஜாக்கெட் அணிவதை நிப்பாட் ... சுடிதார் அணிந்து வா என்றர்த்தம்.
ஃபோன் பேசிக்கிட்டே அதென்ன குனிந்து ஒரு கண்ணை இழுத்து மூடி என்னைப் பார்க்குறது?
பூ வாங்கித் தந்தால் கூந்தலில் முடியச்  சொல்வது, சாப்பிடுகையில் ஊட்டிவிடச் சொல்வது, இதெல்லாம் சரி, நாயுடு ஹாலுக்கு நான் எதற்கு?
ஐயோ ... எனைக் கொல்லாதேடி
*ஐயங்காரு வீட்டு அழகே*


297. பார்த்து ஐந்து நாள் ஆகுது.
பழகியதெல்லாம் ஞாபகத்திற்கு வந்து வந்துப் போகுது.
எனை இங்கு ஏங்கித் தவிக்க விட்டு எங்கு சென்றாயோ ?
எப்படி இருக்காயோ, எதற்கிந்தத் திடீர்த் தலைமறைவோ ?
எவ்வாறுனை நான் தேட? யாரென்று யாரேனும் கேட்டால் என்ன சொல்ல ?
ஏதாவதொரு வழியில் தகவல் தா
என்னுயிரே இக்கணமேயருகே வா.
தழுவியக் கரங்களைத் தேடுகிறேன்
படர வழியில்லாதக் கொடியாய் அல்லாடுகிறேன்.
ஊண் உறக்கம் ஏதுமின்றி உன் நினைவால் வாடுகிறேன்.
என்றுனை மீண்டும் காண்பேனோ,
அதுவரை என் நிலை
*அனல் மேலே பனித்துளி*


296. கோபம் தானே, பட்டுக்கொள்.
ஊடல் தானே, ஒதுங்கி நில்.
கவிதை சொல்லமாட்டாயா, சரி
நீ சொல்ல நினைப்பதை நான் சொல்லவா ? கேட்டு ரசி, வா.
*
அள்ள அள்ளக் குறையாத அளவு உன்னுள் கற்பனைகள் சுரக்க வைக்கும் ~அமுத~ கவிதைசுரபி நானல்லவா.
உன் உள்ளத்தினுள் உற்சாகம் உற்பத்தியாகும் உயிர்நாடி நானல்லவா.
விழி திறந்திருக்கையிலேயே உன்னைக் கனவு காண வைப்பவள் நானல்லவா.
உண்ண விடாது உறங்க விடாது
அகிம்சை முறையில் இம்சை செய்பவள் நானல்லவா.
எல்லாம் மறந்து நீ  உறங்க,
உன்னைத் *தாலாட்டும் பூங்காற்று நானல்லவா*

295. காத்திருந்துக் காத்திருந்துக் காலம் கழித்தது போதும்.
கனவுகளில் மட்டும் கைகோர்த்து வாழ்ந்தது போதும்.
உண்ணப் பிடிக்காது உறங்குவதும்
உறங்காது உளறுவதும் போதும்.
எந்த சம்மந்தமும் இல்லாதபோதும்
ஏதும் மறக்காது ஏங்கித் தவித்து இளைத்துக் களைத்தது போதும்.
நெஞ்சில் நிறைந்த ஆனந்தமே
என்றும் என் கூடவேயிருக்கும்
*வசந்தமே, அருகில் வா*

Thursday, October 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 38

293. கண் விழிக்கையில் நெஞ்சில் புத்துணர்ச்சி,
நிம்மதியாய் நானுறங்க யாரேனும் தாலாட்டு பாடினாரோ ?

அருமையான சிற்றுண்டி, ரசித்து உண்கிறேன்.
இத்தனை சுவையாக யார் சமைத்தது ?

என் மனங்கவர் வண்ணத்தில் உடுத்தப் புத்தாடை,
எனக்காகவா ? யார் இதை வாங்கியிருக்கக் கூடும் ?

அதிசயமாயொரு மின்னஞ்சல் இன்று  உன்னிடமிருந்து.
எப்படி எதனால் உன் மனம் இளகியிருக்கும்?

நான் போகும் பாதையில் அற்புதமான சுகந்தம் உணர்கிறேன்
*யாரிந்த சாலையோரம் பூக்கள் வைத்தது ?*


292. கொஞ்ச நாளாகவே நான் உன்பால் ஈர்க்கப்பட்டிருப்பதை உணர்கிறேன்.
அமைதியாய் அகந்தையின்றி அளவோடு  அலவாடுவது கண்டு அதிசயிக்கிறேன்.
விசாலமான உன் சிந்தனையும், விவேகமானப் பேச்சும், நுண்ணறிவும், செயலில் நேர்த்தியும், நியதி பிறழாத நேர்மையும் ... ம்ம்ம் என் நெஞ்சை நெகிழ்த்திட்டாய்.
உபத்திரவமில்லாது உதவுகிறாய், உதவினேன் என்று உரக்க உரைக்காதிருக்கிறாய்.
எனக்கென்னவோ இன்னுமதிகம் சிந்திப்பதும் குழப்பிக் கொள்வதும் வீண் என்றே தோன்றுகிறது.
காலம் போகும் போக்கில், கா...தல் காட்டும் பாதையில் உனைத் தொடரப்போகிறேன்.
புரிந்து விட்டது, இனி நீ இல்லாது வாழ்வது வீணே.
*உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே*.


291. காடு காய்ந்துக் கிடந்ததெல்லாம் பழைய கதையாகட்டும்.
வானம் பார்த்தே வறண்டு போன பூமி இனி வரலாறில் மட்டும்.
ஆழிமழைக் கண்ணன் வரம் தரட்டும்.
ஆண்டாள் பாடியது பாடியபடியே பழிக்கட்டும்.
வானின் கொடை அருள் அனைவர்க்கும் விளங்கட்டும்.
கருமேகங்கள் சூழட்டும்.
இடி இடிக்கட்டும்,
மின்னல் ஜொலிக்கட்டும்
காய்ந்த நிலமெல்லாம் செழிக்கட்டும்.
*மாரி மழை பெய்யாதோ !*

290. தவறு தான்
தப்பாய் யோசித்தது நான் தான்
பெண் புத்தி பின்^புத்தி என்பது சரிதான்
*
எவன் வராது ஏமாற்றி விட்டான் என்று நான் எண்ணினேனோ ...
எவன் என்னை மறந்து விட்டான் என்று நினைத்தேனோ ...
*
எவன் என் உறக்கத்தினுள் புகுந்து கனவு பல விதைத்தானோ ...
எவன் என்னைச் சீண்டி சிரிக்க வைத்து சிநேகித்தானோ ...
எவன் இல்லாது என்னால் வாழ முடியாது என்றாகிப்போனதோ ...
எவனால் நான் பெண்ணாகப் பிறந்ததன் பொருள் புரிந்துக் கொண்டேனோ ...
*
அந்தத் *தங்கமகன் இன்று சிங்க நடைபோட்டு அருகில் அருகில் வந்தான்*

^ பின் - pin - sharp

289. நீ வெட்டி எறியும் நகங்களெல்லாம்
   பிறைநிலவாகும்
நீ வரையும் புள்ளியும் கோடும்
   ஒப்பில்லா ஓவியம்
நீ நடக்கையில் கொலுசு இசைப்பது
   சுகமான ராகம்.
நீ தொட்டு உண்ணத் தருவதெலாம்
   தேவாமிர்தமாகும்.
நீ என்ன எழுதினாலும்
   கவிதைகள்
நீ பேசும் வார்த்தையெல்லாம்
   *சங்கீத ஸ்வரங்கள்*

288. காலையில் இன்று கண் விழிக்கும் போதே நல்ல சகுனமாய்ப் பட்டது.
என்றுமில்லாமல் பச்சைக்கிளி ஒன்று சாளரம் அருகில் வந்து கிச்சித்து, மறவாத உன்னை ஞாபகப்படுத்தியது.
குளித்து வர கோடியம்மன் கோவில் ப்ரசாதமாய், உனக்குப் பிடித்த, அக்காரவடிசல் தயாராயிருந்தது.
நான் எண்ணியதுபோலவே, உன் தங்கை நீ வந்திருப்பதை பறையறிவிக்க நெஞ்சம் பரபரத்தது.
அடுத்த நொடியே உனக்குப் பிடித்த பச்சை நிறத்தில் உடுத்திக் கொண்டேன்.
ஜிமிக்கி உனக்குப் பிடிக்காதே, கழட்டி எறிந்து விட்டுத் தோடு அணிந்து கொண்டேன்.
மறவாது மூக்குத்தி, மல்லிப்பூ;
உதட்டுச் சாயம், சுவையில்லை என்பாய், தவிர்த்து விட்டேன்.
மதியமும் முடிந்து மாலை ஆறு ஆனதும் கோவிலில் உன்னைத் தேடினேன், காணோம்.
ஏழு, எட்டு, இரவு் ஒன்பது, மறந்து விட்டாயா? என்னையா? வீட்டையா?
*நீ வருவாய் என நான் நினைத்தேன்*

287. அடேய் அதிகப்ரசங்கிக் காதலா,
இன்னும்  இன்னும் என்று என்னுள் எப்போதும் எதையாவது தேடாதே.
நீண்டு  நீண்டிருக்கும் விரல்களால் எல்லை மீறி நோண்டாதே.
பூ போன்றிப் பூவை எனை நின் வலு தோள் மார்பினால் முட்டாதே.
காந்தப் பார்வையால் கன்னி நெஞ்சைக் கவர்ந்திழுக்காதே.
இன்று எனை எப்படி இம்சிக்கப் போகிறாயோ என்று ஏங்க விடாதே.
*எங்கெங்கு எங்கெங்கு இன்பம் என்று தேடி எனைக் கொல்லாதே*

286. சின்ன வயதிலெல்லாம் உன்னோடு தான் விளையாடுவேனாம்.
ஒன்றாய்ப் பள்ளி சென்று, விளையாடிக் கொண்டே திரும்புவோமாம்.
ஒருமுறை சைக்கிளில் பின்னால் நான், குரங்கு பெடல் போட்டு, இருவரும் கீழே விழுந்து, இப்போது நினைத்தால் சிரிப்பாயிருக்கு.
அதன்பின் வீடு மாறி, தெரு மாறி, ஊர் மாறி, காலம் மாறி ... ம்ம்ம் நாடு வேறு மாறி,
காலையில் கோலம் போடையில், நீ வந்து நின்றதும் ஒரு உற்சாகம்,
என்னை நீ மறக்கவில்லை என்ற எண்ணம் தந்த பரவசம்.
இது அதுவா ? அதுதானா இது ? என்றக் குழப்பங்கள் ஏதுமின்றி,
எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றிதான் பழகுகிறேன்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாய் சொல்ல முடியும்,
அது ... உன்னோடு பேசும் போதும் பழகும் போதும் ...
என்னுள் ... ஒரு ... ஒரு ...
*ஒரு வெட்கம் வருதே...வருதே*

Friday, October 12, 2018

பொன்மாலைப் பொழுதில் 37

285. மரம் நிழலும் கனியும் தந்துக் காத்திட
பறவைகள் கைமாறு என்ன செய்யுமோ ?
மழை பெய்துக் குளிர்விக்க
மேகத்திற்கு மண்ணோடு முன்ஜென்ம பந்தமோ?
தேடி வந்ததும் வாரியணைத்துக் கொண்டானே குசேலனை,
அத்தனை  பாக்கியவானோ ?
மல்லிப்பூ மலர்ந்து மணம் வீச
செடி ஏதேனும்  புண்ணியம் செய்திருக்குமோ ?
கண்ணனை மகனாய் வளர்த்திட
யசோதா ஏதும் வரம் பெற்றிருப்பாளோ ?
*நெற்றிக் குங்குமம் நீ சூட்ட
எத்தனைத் தவம் நான் செய்தேனோ ?*


284. ரசிக்கவா ? பாடவா ?
இனிய கானம் கேட்குதே

உண்ணவா ? மறுக்கவா ?
இனிப்பு அதிகமாய் இருக்குதே

சொல்லவா ? எழுதவா ?
நெஞ்சில் கவிதை சுரக்குதே.

சிரிக்கவா ? பேசவா ?
மெல்ல என்னைப் பார்க்கிறாளே.

எடுக்கவா ? தொடுக்கவா ?
*கொடியிலே மல்லியப்பூ மணக்குதே*


283. புரிகிறது,
உனக்குப் பிடித்திருக்கிறது.
நீ சொல்லாமலேயே தெரிகிறது.
உன் இதயம் அவன் பின்னே பறக்குது.
அவன் இருக்குமிடம் தேடி அலையுது.
அவன் உன்னருகே வந்து பேசணும் என்றுன் மனம் அல்லாடுது.
ம்ம்ம் ... சாதிக்கப் பிறந்தவள் நீ.
சாதிக்கப் பிறந்தவர்கள் காதலிக்கக் கூடாதா என்று தானே கேட்க வருகிறாய்?
காதல் ... வலி தரும், உன் வழி மாற்றும், வலிமை குறைக்கும்.
கனவுகள் பிறக்கும், உன் காரியம் கெட்டுப் போகும்.
நன்றாய் யோசி, பின் செயல்படு.
ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேலைக்காகாது.
எவ்வழியில் நீ பயணப்பட்டாலும் சங்கடங்களும் சச்சரவுகளும் உனைச் சந்திக்கக் காத்திருக்கும்.
விடாது முயன்றிடு, கலங்காது போராடு, வெற்றி என்றும் உன்னோடு.
என்ன பார்க்கிறாய்? யார் பேசுவது என்றா? நான் தான் *பேசுகிறேன், பேசுகிறேன், உன் இதயம் பேசுகிறேன்*


282. தனித்திருக்கிறாய், எனை விட்டு விலகியிருக்கிறாய்.
ஆனால் எனை நீ மறக்கவுமில்லை, வெறுக்கவுமில்லை.
என்னவோ கோபம், இல்லை ஏக்கம்
வெளியில் சொல்ல முடியாதுத் தவிப்பு.
எனைத் தவிர்த்து மறைந்து வாழ்வதாய் எண்ணி உனை நீ ஏமாற்றிக் கொள்கிறாய்
உன் மனது அறிவேன், அந்த மழைநீர் போல் நீ மிகத் தூய்மையானவன் என்பதையும் அறிவேன்.
உனக்காக நான் காத்திருப்பேன்.
உன் கவலை தீர்க்கக் காரியம் ஆற்றுவேன்
முதல் வேலையாய், மன்னவனே
என் *மன்னவனே நீ போன பாதை தேடிதேடி வருவேன்*


281. நெஞ்சில் காதல்; கொஞ்சிப் பேச முடியாததால் கொஞ்சம் கோபம்;
கையளவு மனதில் கடலளவு சோகம்.
இருந்தும் இல்லை என்றாகிவிட்ட பின் இல்லாமலா போகும்?
அன்பு அறிந்துக்கொள்ளாதபோது அருகில் இருந்தாலென்ன, அயல்நாட்டில் இருந்தாலென்ன ?
காலம் ஆற்றாதா காயம்? நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
புதிய  இடம், புதிய வழி ஏதேனும் கிட்டும் என்றெண்ணி, கொஞ்ச நாள் பறந்து வந்து விட்டேன்.
அன்று அவமானமாய்த் தெரிந்தது, இன்று விலகி நின்று யோசிக்க வெகுமானமாய்த் தெரிந்தது.
எனக்கென்று இருந்தால் யாரால் பறிக்க முடியும் என்று ஆறுதலோடு,
இதோ காத்திருக்கிறேன்,
இமை கூட மூட இயலாது,
இரண்டு நாளாய் உறக்கமில்லாது,
இது இரவு நேரம்
*ந்யுயார்க் நகரம் உறங்கும் நேரம்*


280. எழுத எனக்கு நாட்டமில்லாத போது என் எழுத்தில் சுவையிருக்காது, எழுதியவரை போதும்.
என்ன வரைய என்றேதும் தீர்மானிக்காது வர்ணத்தை மட்டும் வாரியிரைக்க யாருக்கும் புரியாது. நிறுத்திவிட்டேன்.
பழைய அரவிந்த் சாமி கமல் அளவுக்கு இல்லையென்றாலும் பார்க்க சுமாராயிருந்தேன்.
'இருந்தேன்' இறந்த காலம் தானே ?
ஆமாம் எல்லாம் இனி இறந்தகாலம் தான்.
இதுவரை இப்படி இல்லை.
இனியென்ன இருக்கு.
கவிதைகளிலும் கனவுகளிலும், என் எண்ணங்களிலும், இன்றிலிருந்து இல்லாமலிருக்கலாம், ஆனால் *நேற்று அவளிருந்தாள்*


279. கடற்கரையில், அலைகளின் இடையில், ஆனந்தமாய் கைகோர்த்தபடி ஆடுகிறோம்.
பூஞ்சோலையில், பூக்களின் இடையினில், புல் தரையினில், பனிப் போர்வையில் புரண்டு கிடக்கிறோம்.
பத்து யானைகள், இருபது குதிரைகள், படை சூழ, வீரவாள் ஏந்தியபடி, வெள்ளைப் பட்டில் நீ,  தேரிலிருந்துக் குதிக்கிறாய்.
திரையரங்கம், மொக்கைப் படம், ஆளில்லா வரிசை, ஓர இருக்கை, முத்தக் காட்சி, மெல்ல எனைப் பார்க்கிறாய்.
வீடு, தனி அறை, இசையில் தொடங்குதம்மா பாடல், வெளியில் மழை, கையில் டீ, மடியில் நீ, கவிதை சொல்ல, நான் ரசிக்க, பரிசு கேட்க, எதைத் தர எப்படித் தர என்று நான் *கனா காண்கிறேன், கனா காண்கிறேன், கண்ணாளனே*