Wednesday, July 26, 2017

வயசாகிடுச்சே



அவள்,
அழகாய் இருப்பாள் என்று தனியாய்ச் சொல்லவேண்டுமா என்ன ?
அலுவலகத்தில், என் இருக்கைக்குக் கொஞ்சம் தள்ளி;

இன்று நீல நிறம், வேறு உடை,
ஆனால்
பக்கத்து இருக்கைப் பையனுடன்
அதே சிரிப்பு, பேச்சு, பேச்சு, பேச்சு;
நேற்று ஒருமாதிரி  பச்சை நிறத்தில் ஒரு ஆடை,
பக்கத்து இருக்கைப் பையனுடன்
சிரிப்பு, பேச்சு, பேச்சு, பேச்சு;
போன வாரமும் இதே கதைதான்.

நாளை அலுவலகத்துக்கு
என்ன நிற உடையில் வருவாள் என்று தெரியாது,
ஆனால் வந்தபின் என்ன செய்வாள் என்பது -
இப்பொழுது உங்களுக்குக் கூட தெரிந்திருக்கும் தானே.

என்னது ? நான் ஏன் அவளை நோட்டம்விடுகிறேனா ?
நீங்க மட்டும் உத்தமரா என்ன ?
வேறு பெண், வேறு நிறம், வடிவம்,
ஆனால் உற்றுநோக்குவது
 ஆண்களின் அடிப்படை உரிமை என்பது
தங்களுக்குத் தெரியாதா என்ன ?

பெறுவார் இல்லையேல் ஈவார்க்கு ஏது பெருமை ?

சரி சரி
நமக்குள் சண்டை வேண்டாம்,

என் சந்தேகமெல்லாம்,
இவர்கள் அப்படி என்னதான் பேசுவார்கள் என்பதைப் பற்றியில்லை,
வார விடுமுறை நாட்களில்
இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான்
என் கவலையெல்லாம்.

வயசாகிடுச்சே கலியபெருமாளே !

1 comment:

  1. வயசாகிடுச்சே கலியபெருமாளே !.....


    வித்தியாசமான பகிர்வு...


    ReplyDelete