மீசை நரைத்ததே பரமா,
ஆசை அழியவில்லையே நியாயமா?
காது கேட்கும் சக்தி குறைந்ததே பரமா,
கொலுசு ஒலியை மனம் இன்னும் விரும்புதே நியாயமா?
கால் வலு இழந்ததே பரமா,
கண்கள் கண்டபடி அலைபாயுதே நியாயமா?
தெய்வத்தைத் தொழ முடியாதடா பரமா,
தேவை இன்னொரு பாவை என்றே பறப்பது நியாயமா?
ஓடி உழைத்து வேலைசெய்ய முடியாதே பரமா,
ஓடம் போலே மனம் ஆடி அலைபாயுதே நியாயமா?
ஆடை இடையில் நிற்பதில்லை பரமா,
பெண்வாடை மட்டும் அகலவில்லை நியாயமா?
தேவாரம் தினம் படிப்பதுண்டு பரமா,
தேகம் மட்டும் மனக்கண்ணில் தெரிவது நியாயமா?
அன்பே சிவம் என்று அறிந்திருந்தும் பரமா,
கோபத்தில் கொதித்துப் போகிறேனே நியாயமா?
ஆண்டவனே அழைத்துக்கொள் என்று அரற்றுகிறேன் பரமா,
அவள் வருவாளா என்றும் பாடுகிறேனே நியாயமா?
யோகி என்றே சொல்லித் திரிகிறேன் பரமா
போகி போலே வாழ்கிறேன் நியாயமா;
No comments:
Post a Comment