Tuesday, June 24, 2014

அபிராமியம்மைப் பதிகம்


கற்றது மறவாது,
முதுமையில் வாடாது,
நட்பானோர் ஏமாற்றாது,
வளம் என்றும் குறையாது,
இளமை அகலாது,
நோய் அண்டாது,
மனம் சலிக்காது,
மனைவியின் காதல் மங்காது,
பொருள் வரும்வழி பிழையில்லாது,
புகழ் நீங்காது,
வார்த்தை பிறழாது,
வாழ்க்கையில் துன்பம் வாராது,
கொடுக்கையில் தடை ஏற்படாது,
அரசாங்கம் தவறாது,
அருள்புரிய வேண்டுகிறேன்,
தூய்மையான உன்பாதத்தில்
அடியவரோடு அடியவனாய்
அடிபணிகிறேன்;
கடவூரில் வாழும்
அபிராமி அன்னையே,
காக்க வேணும் எமையே;

Friday, June 13, 2014

பரமா - நியாயமா?



மீசை நரைத்ததே பரமா,
ஆசை அழியவில்லையே நியாயமா?

காது கேட்கும் சக்தி குறைந்ததே பரமா,
கொலுசு ஒலியை மனம் இன்னும் விரும்புதே நியாயமா?

கால் வலு இழந்ததே பரமா,
கண்கள் கண்டபடி அலைபாயுதே நியாயமா?

தெய்வத்தைத் தொழ முடியாதடா பரமா,
தேவை இன்னொரு பாவை என்றே பறப்பது நியாயமா?

ஓடி உழைத்து வேலைசெய்ய முடியாதே பரமா,
ஓடம் போலே மனம் ஆடி அலைபாயுதே நியாயமா?

ஆடை இடையில் நிற்பதில்லை பரமா,
பெண்வாடை மட்டும் அகலவில்லை நியாயமா?

தேவாரம் தினம் படிப்பதுண்டு பரமா,
தேகம் மட்டும் மனக்கண்ணில் தெரிவது நியாயமா?

அன்பே சிவம் என்று அறிந்திருந்தும் பரமா,
கோபத்தில் கொதித்துப் போகிறேனே நியாயமா?

ஆண்டவனே அழைத்துக்கொள் என்று அரற்றுகிறேன் பரமா,
அவள் வருவாளா என்றும் பாடுகிறேனே நியாயமா?

யோகி என்றே சொல்லித் திரிகிறேன் பரமா
போகி போலே வாழ்கிறேன் நியாயமா;

Thursday, June 5, 2014

நடுத்தெருவில் ஆண்டவன்



"...........
...........
பேசு தெய்வமே நீ பேசு,
நீ பேசு,
தெய்வமே நீ பேசு
இன்று என்னோடு .......
நீ பேசு ... தெய்வமேஏஏஏ,
தெய்வ..மே."
பாட்டு முடியும்வரை
பரவசநிலையில் கேட்டுக்கொண்டிருந்த தெய்வம்,
பாடியவரைப்
பார்த்துப் பேச
பாய்ந்தோடி வந்தது;

ஆண்டவன் வந்ததை
அறியாத அன்பர்
அங்கிருந்து நகர்ந்தார்,
அவசர கதியில்;

அழைத்தவர் யாரென்று
அறியாத ஆண்டவன்
அப்பாவியாய்
நடுத்தெருவில்;