Wednesday, June 19, 2013

திருவாசகம் - ஆசை பத்து

திருவடி காட்டி எனை ஆட்கொண்டத்
தலைவா,
அறியாமை அகற்றி
வா என்றெனை
உன்னோடழைத்துக்கொள்ள
ஆசைப்பட்டேன், இறைவா.
      நரம்பு மூளை தோல் இவற்றாலான
இவ்வுடம்பை விட்டு விலகி, ஐயனே
என்னைத் தங்களோடழைத்துக்கொள்ள
தயை புரிய வேணும் என்று
ஆசைப்பட்டேன், ஹரனே


சீல் வழிய, ஆசை ஈக்கள் மொய்த்து
அழியும் இவ்வுடல் நீங்கி, சங்கரா
'ஐயோ' என்று நீ இரங்கி
அன்போடென்னை உன்னோடு
அழைத்துக்கொள்ள
ஆசைப்பட்டேன், சர்வேஸ்வரா.
      உடம்பும் என்னோடு தொடர்ந்து
வருகுதே, எனை
உன்னோடு இணைய விடாது
தடுக்குதே
உமைபாகா,
உன்னை வணங்குகிறேன்,
மனமுருக வேண்டுகிறேன்;
உன் திருவடி அடையவே
ஆசைப்பட்டேன், உருத்ராட்சா;


உடம்போடு ஒட்டாது
தனித்திருந்தேன், உமையோனே
உன்னால் ஆட்கொள்ளத்
தகுந்தவன் என்று
கண்டோர் எல்லாம் சொல்ல
ஆசைப்பட்டேன், சடையோனே.
      இளைத்தேன், இனி
இங்கிருக்க விரும்பிலேன்;
இந்தப் பொய்யான வாழ்க்கையிலிருந்து
என்னை விடுவிக்க வேண்டும், அத்தா;
உன் முக ஒளியையும்
திருப் புன்னகையையும் காண
ஆசைப்பட்டேன், முத்தா;


மண்ணுலகத்தாரும்
விண்ணுலகத்தாரும்
வழிபட்டுப் போற்றும் வரதா,
முக்தி அளித்து
ஆட்கொள்ளும் விஸ்வேஸ்வரா,
உன் திருப்பெயர் அனைத்தும்
உச்சரித்து வழிபட
ஆசைப்பட்டேன், விருடவாகனா;
      ஆராவமுதா,
உன் திருவடிகளைக்
கையால் தடவி,
தலையில் ஏந்தி
உன் புகழ் பாடி
தீயைச் சேர்ந்த மெழுகாய் உருக
ஆசைப்பட்டேன்,
ஆலகண்டா;

குறை பல நிறைந்த
இவ்வுடலை விடுத்து, சிவனே,
உன் இடம் சேர,
உன் பார்வை ஒளியில் பரவசமடைய,
உன் அடியார் கூட்டத்துள் இணைய
ஆசைப்பட்டேன், சங்கரனே;
      மாதரது
மாய வலையில்
மாட்டி நான் அவதியுற்றேன்,
மகேஸ்வரா, உன் திருவாய்
மலர்ந்து 'அஞ்சேல்' என்று கூற
ஆசைப்பட்டேன், மகாதேவா.

Wednesday, June 12, 2013

சிவபஞ்சாட்சர ஸ்தோத்திரம்



      நாகங்களே நகையாய்,
நெற்றியில் ஒரு கண்ணோடு,
உடலெங்கும் திருநீறு பூசி
எல்லோரையும் ஆள்பவனாய்
என்றும் எளியவனாய்
எங்கட்கு அருள்பாலிக்கும் பரமேஸ்வரா
உன் பாதம் பணிகிறேன்;

      மந்தாகினி நீரினால் அபிஷேகம், ஆராதனை,
மந்தாரை மலரால் ஆனந்த அர்ச்சனை
சந்தனப் பூச்சு இவற்றால் ஜொலிக்கும் எங்கள் தேவா,
நந்தி தேவர் மற்றும் பலருக்குத் தலைவா,
உன் பாதம் பணிகிறேன்;

சி       சிவந்த ரூபிணி பார்வதியின் பதியே,
தக்ஷனின் கர்வம் அழித்த மகாநிதியே,
நல்லோரைக் காக்க நஞ்சுண்ட
நீலகண்டா,
விடையே கொடியாய்க் கொண்ட
விருடவாகனா,
உன் பாதம் பணிகிறேன்;

வா       வசிட்டர் அகத்தியர் ஆகியோர்
வணங்கிய தேவா,
தேவர்கள் வணங்கும்
திருலோச்சனா,
சூரிய சந்திர நெருப்பை
முக்கண்ணாய்க் கொண்ட
முக்கண்ணா,
உன் பாதம் பணிகிறேன்;

      யக்ஷ சொருபனாய்*,
ஜடாமுடி தரித்தவனாய்
பினாக வில்லை ஏந்தியவனாய்
என்றும் எங்களைக் காப்பவனாய் விளங்கும்
திகம்பரா
உன் பாதம் பணிகிறேன்;

-------------------------------------------------------------------------
* - மரம் செடி கொடி இடையே வாழ்பவர்

Friday, June 7, 2013

லிங்காஷ்டகம்

பரமேஸ்வரா - உன்
பாதம் பணிகிறேன்.
தேவர்களின் தேவனே,
புனிதங்களின் புனிதனே,
பூமாலைகளால் அர்ச்சிக்கப்படுபவனே,
பிறப்பு இறப்புத் துயர் தீர்ப்பவனே,
உன்னை வணங்குகிறேன்.

     
      முனிவர்களால்
முக்காலமும் பூஜிக்கப்படுபவனே,
காமனை எரித்தவனே - ராவணனின்
கர்வம் அழித்தவனே,
துன்பம் நேர்கையிலெல்லாம்
துணை நின்று
துயர் துடைப்பவனே,
தூயவனே உன்னை வணங்குகிறேன்.

வாசம் மிக்க மலர்களால்
நேசம் கொண்டு அர்ச்சிக்கப்படுவோனே,
நாடி வந்தோரின்
வாழ்வு கூட வைப்போனே,
சித்தர்களும் அசுரர்களும்
சிரம் தாழ்த்தி வணங்கப்படுவோனே,
சங்கரனே உன்னை வணங்குகிறேன்.

     
      உயர்ந்த பல ஆபரணங்களால்
அலங்கரிக்கப் படினும்,
நாகங்களை நகையாய்
அணிந்திருப்போனே,
தக்ஷனின் யாகம் அழித்தோனே,
தயாளனே உன்னை வணங்குகிறேன்.

சந்தனம் தடவி,
குங்குமம் இட்டு,
தாமரை மலர்களால் மாலை சூட்டி,
எங்கள் பாவங்களைப் போக்கும்
பார்வதி மணாளா,
உன்னை வணங்குகிறேன்.

     
      தேவர்கள்
வாழ்த்தி வணங்கி வழிபட
வரம் பல தரும் விமலா,
ஆயிரம் ஆயிரம்
ஆதவனுக்கு நிகராய்
பேரொளி வீசி
பிரகாசிக்கும் பரமா,
உன்னை வணங்குகிறேன்.

எட்டு மலரிதழ் இடையே அமர்ந்து,
நல்லது நிலைக்கவும்
தீயது அழியவும்
அருள் புரியும் பிரணவா
உன்னை வணங்குகிறேன்.

     
      உன் அடிபணிந்து தேவர்களின் ஆசான் நிற்க
உனை மலர் தூவி மற்றெல்லோரும் அர்ச்சிக்க
உயர்ந்தவனும்,
வலியவனுமான
வரதா
உன்னை வணங்குகிறேன்.