393. வாலி அனுப்பிய ஆட்களோ என்று ரிஷிமுக் மலையிலிருந்த அனுமன் எண்ணினான் ராம லக்குமனை முதல் முறை பார்த்த போது.
'பித்தன் இவன்' என்று பழித்தான் கிழ வேடத்தில் இருந்தச் சிவனை முதல் முறை பார்த்த சுந்தரன்.
தன் பெண்ணை திருமணம் செய்து தர திட்டமிட்டான், அர்ச்சுனனின் வீரத்தை முதல் முறை பார்த்து ரசித்த பாஞ்சாலன்.
முகத்தில் பல தையல்களிருக்க நல்லாவை தீவிரவாதியோ என்று யுகித்தான் முதல் முறை அன்பரசு.
ராம் பதறி மயங்கி விழுந்தது ஜானகி அவன் நெஞ்சில் முதல் முறை கை வைத்துப் பார்த்த போது.
நீ என் கவிதை படித்துப் பாராட்டியது பெரு மகிழ்ச்சி; வாழ்க்கையில் இன்று தான் என்னையே நான்
*முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்*
392. மனம் மகிழ்ந்து கிடக்கிறது.
உனைக் கண்டதிலிருந்து உற்சாகம் பீறிட்டெழுகிறது.
உன்னருகில் அமர்ந்து பேசிச் சிரித்து, உண்டு, பகிர்ந்து ...
ஒருசில கேள்விகள் நறுக்கென்று ... உனைப் பார்த்ததும் மறந்துவிட்டது.
அற்புதமான இச்சூழலுக்காக இத்தனை வருடம் காத்திருந்தது தகும் என்று இன்று தோன்றுகிறது.
நீ, உன் அன்பு இன்னும் கொஞ்சம் கூட மாறாதது பார்க்க, புரிய நெஞ்சம் பூரிக்கிறது.
இரவு முழுதும் இருவரும் உறங்காது சுற்றித் திரிந்தது, நீ தந்த பல புது அனுபவங்களில் முதன்மையானது.
இன்னும் ... கொஞ்சம் நேரத்தில் நான் கிளம்பணும் ... புரிகிறது.
மீண்டும் உனை எங்கு எப்போது பார்ப்பேன் என்று தெரியாது பதற,
விடியாதே இன்று இருந்துவிடக் கூடாதா என்று நெஞ்சு ஏங்க
*இரவிங்கு தீவாய் நமைச் சூழுதே*
391. பரத்வாஜ் முனிவர் சொல்படி சீதா, ராம், லக்குமன் சித்ரகூடம் வந்தது யமுனையைக் கடந்து.
கண்ணனை தலையில் சுமந்துபடி மழையில் நந்தகோபர் நடந்தது
யமுனை ஆற்றின் மத்தியில்.
சத்தியின் மறைவுக்குப் பின் சிவம் தன் கோபம் தனிய குளித்தது
யமுனை ஆற்றில்.
இறக்கும் முன் அர்ச்சுனன் பேரன் பரீக்ஷித் தவம் செய்ய அமர்ந்தது
யமுனை ஆற்றங்கரை.
கண்ணனின் காளிங்க நடனம், ராசலீலை அரங்கேறியதெல்லாம்
யமுனை ஆறு, கரை.
பாவியரின் பாவங்களைப் போக்கப் பாடுபட்டு இன்று பாழாகிக் கிடக்கு யமுனை ஆறு.
அந்த *யமுனை ஆற்றிலே ... ஈரக் காற்றிலே*
390. பேசணும் என்ற அவசியமில்லை.
பார்த்தாகணும் என்றெல்லாம் கட்டாயமில்லை.
விலகி நின்றாலும், புரியும் பதறாது.
தனியே தவித்தாலும், வெறுக்காது.
மின்னல் போலொரு தாக்கம்,
எப்பொழுதாவது ஏற்பட்டிருக்கும்.
அது ஒன்றே போதும். எண்ண எண்ண நெஞ்சு குழையும்.
உள்ளே ஏங்கும், அழும்; கூடவே நம் நலம் நாடும் ஒரு ஜீவன் எங்கோ இருக்கு என்றுணர்ந்து மகிழும்.
உங்களுக்குத் தெரியும் தானே, இல்லை இதுதான் அது என்று புரியுமுன் காலம் மாறிடிச்சா ?
வெற்றியோ தோல்வியோ, காதல் ஒன்றும் பந்தயம் இல்லையே.
அது ஒரு அனுபவம்; உணரணும்.
வலிக்கும், கொதிக்கும், ஆர்பரித்து அடங்கும்; அதுவரை அமைதியாய் காத்திருப்போம் ... அன்போடு.
ஏனெனில் ... *பேரன்பே காதல்*.
389. காகுந்தன் காடு நோக்கி நகர, அவன் பின்னே அயோத்தி நகரமே போனது, சோகமாய் ஊர்வலமாக.
அங்கதேசத்தையும் அளித்து கர்ணனை கௌரவர் தம் தோளில் தூக்கி வந்தனர், ஊர்வலமாய்.
திருமணம் முடித்து, கம்சன், தேவகி நந்தகோபரை போஜ நாட்டுக்குள் அழைத்து வந்தான், ஊர்வலமாய்.
கண்ணனை தரிசித்த சுதாமாவை பூரணகும்பம் தந்து வரவேற்க ஊரே ஒன்றுகூடி நின்றது ஊர்வலமாய்.
இதோபார்... நானுன் சொல் பேச்சு கேட்டு நடக்க, நீ என் தேவைகளை பூர்த்தி செய்ய, சம்மதமெனில்
*போவோமா ஊர்கோலம்?*
388. அசுரர்கள் அழிக்கப்பட அதற்கு நன்றி கூறும் விதமாக என்றாவது இவ்வாறு தேவர்கள் சொல்லியிருப்பார்களா தெரியாது;
தன் குலம் வளர உதவியதற்கு தாய் சத்யவதி வியாசரிடம் இதைக் கூறியிருப்பாளா தெரியாது;
சுக்ரீவன் இல்லை விபீஷணன் ... ஒருவராவது ... தெரியாது;
அள்ளித் தந்தவனிடம் கண்ணீர் மல்க சுதாமா சொன்னானா தெரியாது;
கர்ணன் பலமுறை சொல்லியும், தன் செயலிலும் காட்டியதுண்டு.
ஆண்டாள் சொன்னாள், அதற்குப் பிறகு நான் தானோ சொல்கிறேன்...
தெரியவில்லை, அதனாலென்ன
*உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே*
387. கண் விழித்ததும் கைப்பேசியில் காலை வணக்கம் அனுப்புகிறேன்.
நீ பதிலனுப்பும் வரை படுக்கை விட்டெழாது காத்திருக்கிறேன்.
சாப்டியா குளிச்சியா என்றெல்லாம் கேட்டு மகிழ்கிறேன்
நீ திருப்பி எனை கேட்கணுமென்று எதிர்பார்க்கிறேன்.
உன் மொக்கை பேச்சையெல்லாம் வெட்கிச் சிரித்து ரசிக்கிறேன்.
உன் ஆடை நிறத்திற்கொத்த நிறத்தில் நானும் அணிகிறேன்.
தயக்கமே இல்லாது பேசி உளரி உன்னோடே ஊர் சுற்றுகிறேன்.
நீ இல்லாது என்னால் தனியே வாழ முடியும் என்றெண்ணக் கூட முடியாது ... சுருங்கச் சொன்னால் ...
நீரின்றி நாடா?
*நீயின்றி நானா ?*
No comments:
Post a Comment