Sunday, January 20, 2019

பொன்மாலைப் பொழுதில் 46

351. இதோ பார்.
நீ கோபப்படு, முறைத்திடு, கெட்ட வார்த்தையில்  திட்டு
(நம்ம வாய்ல நல்ல வார்த்தை தான் வராதே).
சாம்பாரில் நிறைய உப்பு போடு
(அப்போதாவது சாப்டுற மாதிரி இருக்கா பாப்போம்).
தொல்லைக்காட்சி பெட்டியை உடை (நிம்மதி).
(உன்) ஆடைகளைக் கிழித்தெறி.
பாலைத் தயிராக்கும் வித்தை ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை;
அவ்வித்தை கை வரவில்லை என்பதற்காக இப்படியா பேசாது கதவை அடைத்துக் கொண்டு, தனியே (மகிழ்ச்சியா) இங்கெனை புலம்பவிட்டு ... ம்ம்ம்
சரி அவள் தான் (அடங்காப்பிடாரி) சொற்பேச்சு கேளாள், எத்தனை முறை எண்ணை ஊற்றி, துடைத்து பளபளவென்று பாதுகாக்கிறேன்,  நீயாவது ...
*பூங்கதவே ... தாள் திறவாய்*


350. அடி என் வாயாடிச் சகி, ஒரு சேதி சொல்லணும் அருகில் வாயேன்டி.
அமாவாசை நாளில் அந்தி சாயும் வேளையில் ஆரம் தொடுத்த படி அமர்ந்திருந்தேன்.
கள்ளப்பார்வை கமகம வாசனை, அவன் தான் மெல்ல என் அருகில் வந்தமர்ந்தான்.
என்ன என்று விழி உயர்த்திக் கேட்க, பசி என்றவனுக்கு பொரி உருண்டையும் பாயசமும் தந்தேன்.
வாயில் வையகம் எனக்கும் காட்டுவானா என்ற நப்பாசையில் கொஞ்சம் நெருங்கி அமர ...
என் உள்ளங்கை பிடித்திழுத்து தன் கை வைத்து அழுத்தி ... கையில் என்னவோ தடதடவென ஆடுவதாய் உணர்ந்தேனடி.
அகில உலகமும் தெரியுது பார் என்றானடி.
அயர்ச்சியில் அச்சத்தில் அப்படியே அவன் மடியில் சரிந்து விட்டேன்.
அடுத்தென்ன நடந்தது எப்போது அவன் அகன்றான் என்ற நினைவு இல்லாது ...
இன்னொரு சந்தர்ப்பம் அமையாதா என்ற ஆசையில்,
காத்திருக்கேன் தவமிருக்கேன்
அவன் வரும் பாதை பார்த்தபடி இந்த அந்தி மாலையில்
*கண்ணன் வரும் வேளையில்*


349. எதற்காகக் கலங்குகிறாய் ?
என்னாயிற்றென்று  புலம்புகிறாய்?
இரவும் பகலும் மாறி வருவது தானே வாடிக்கை
இன்பமும் துன்பமும் இணைந்து இருப்பது தானே வாழ்க்கை.
யோசித்து செயல்படு,
துணிவோடு முடிவெடு.
இன்றில்லையேல் நாளை.
தொடர்ந்து முயல்; உன்னால் முடியாதது ஏதுமில்லை.
சோதனைகளே நம் செயல்களை சாதனைகள் ஆக்குகின்றன.
அயரா உழைப்பே வெற்றிக் கனி ஈட்டுத் தருகின்றன.
போராடப் போராட வலி விலகும்; காலம் வழி தரும்; காய்த்தது பழுக்கும்.
கலங்கலாகுது,  கோடையில் துளிர்க்கும் *வாடையில பட்ட மரம்.*


348. முன்பெல்லாம் பசிக்க சாப்பாடு,
இப்பொழுது என்ன சாப்பிட்டேன் எப்போது என்ற நினைவேயில்லை;
படுத்தவுடன் உறங்கியது அப்போது.
தூக்கமெனை விட்டு தூரச்சென்று விட்டதை உணர்கிறேன் இப்போது.
நேர்த்தியாகப் பார்த்துப் பார்த்து ஆடை அணிந்தது பழைய கதை.
அவசரத்தில் ஆடையே இல்லாது கிளம்பிடுவேனோ என்றச்சமின்று.
பார்க்கும் எதுவும் எனை ஈர்த்ததாய் ஞாபகமில்லை இதுவரை.
இப்போதோ எதைப் பார்த்தாலும் கவிதை எழுவது புதுவகை.
இதெல்லாம் உனைப் பார்த்த பின், உன்னோடு பழகிய பின் தான்.
இயற்கையோடு இசைந்து வாழ்ந்து வந்தேனே, இப்போது எல்லாமே எதிர்மறையாய் உணர்கிறேன்.
நீ அருகிலிருந்தால் ஒரு மாதிரி, இல்லையெனில் வேறு மாதிரி, சுருங்கச் சொன்னால்
*சுடும் நிலவு ... சுடாத சூரியன்*


347. பரிக்ஷித் மன்னன் கேட்க
சுகர் மகரிஷி கூறியது பகவான் க்ருஷ்ணரின் கதை.
தந்தை தலை தாழ்த்திக் கேட்க
தனயன் சொன்னது ஓம் எனும் ப்ரணவ மந்திரம்.
மந்திரி கேட்டதற்கிணங்க
கண்ணன் தான் கற்றதை உரைத்ததே உத்தவ கீதை.
ப்ரகலாதன் தாய் வயிறில் இருந்து கேட்க
நாரதமுனி விவரித்தது நாராயண நாம மகிமை.
அட பார்வதி கேட்டதால் தானே
பரமசிவம் பகிர்ந்தது காம சாஸ்திரம்.
உனக்குக் கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தால் சொல்கிறேன்
*ராகங்கள் பதினாறு உருவான வரலாறு*


346. 'லூசு' என்று பாராட்டு
'மவனே பிச்சிபுடுவே' என்று மிரட்டு
எதற்கும் வருந்தேன், எல்லாம் நீ என்று அறிந்த பின்னே;
நீ இல்லாது நான் இல்லை என்று உணர்ந்த பின்னே;
ஆம் எனக்கு எல்லாமே நீ தான்
என் ஊன் உயிர் நீ தான்
என் உறக்கம் நீ
உறங்க வரும் கனவில் நீ
உறங்கையிலும் ஓடும் சுவாசம் நீ
என் உலகம் நீ, உறவு நீ, நான் அடைய எண்ணும் உன்னதம் நீ;
நான் பார்த்து ரசிக்கும் ஓவியம் நீ
படித்து இன்புறும் காவியம் நீ;
என் நம்பிக்கை அறிவு ஆற்றல் நீ;
அழகு நீ, அமிர்தம் நீ, நான் படித்து இன்புறும், கேட்டு ரசிக்கும்,
*வேதம் நீ, இனிய நாதம் நீ*


345. அப்புறம் ... வாழ்க்கை ஓடுதா ?
எப்போதாவது ஞாபகம் வருதா ?
என் தொணதொணப்பு, நக்கல், சீண்டல் இல்லாம ...
கோபம் கொள்ளத் தேவையே இல்லாம, மகிழ்ச்சி தானே?
நாம நட்ட முல்லைக் கொடி பூ பூக்க ஆரம்பிச்சிடுச்சா? இல்லே அதையும் பிய்த்துப் போட்டாச்சா?
பக்கத்து வீட்டுப் பாப்பா தேடுதா?
அதுக்குப் புரியாதெனினும் எனைப் பற்றி கண்டபடி சொல்லியிருப்பியே
அடிக்க மாட்டேன்னு உத்திரவாதம் தந்தா ... அடுத்த வாரம், அந்தப் ~புர~ பக்கம் வரலமா ?
அனுமதியின்றி வந்தால் தவறாகிப் போகுமா ? தண்டனை கிட்டுமா?
சரி விடு, இப்போது எப்படி இருக்கே?
*என் இனிய பொன் நிலாவே*

Sunday, January 13, 2019

பொன்மாலைப் பொழுதில் 45


344. மலராய், செடியாய், நீ வந்தால்
மண்ணாய் மாறி உன் வேர் பற்றிக்கொள்கிறேன்.
அலையாய் ஆடி ஆடி வர
கரையாய் நின்று உனைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறேன்.
பறவையாகு, இறக்கை விரி,
காற்றாய் மாறி நீ பறக்க துணை நிற்கிறேன்.
வானவில்லாய் வானை அலங்கரி,
நீர்த்துளியாய் விழுந்து உனை தோற்றுவிக்கிறேன்.
நிலவாய்த் தோன்று, ஒளி தா,
தள்ளி நின்று ரசிக்க *மேகமாய் வந்து போகிறேன்*.


343. யோசித்துப் பார்க்கிறேன்
ஆச்சரியப்பட்டுப் போகிறேன்.
இதுவரை எத்தனை வேடங்கள் நீ ஏற்றுக் கொண்டிருக்கிறாய்.
ஆரம்பத்திலேயே கொஞ்சம் பயம் கலந்த கூச்சத்தோடுதான் பழகினாய் - பள்ளித் தோழனாய்,
காண்கையில் காணாது காணாப் பொழுது கண்டு - ஒரு கள்வனாய்.
எனக்குத் தெரியாததைக் கற்றுத் தருகையில் - ஆசிரியனாய்,
நான் ஏதும் உளரினால் வாய் மூடிக் கேட்டுக் கொள்ளும் - மாணவனாய்,
பல சமயங்களில் என் சுமைகளைச் சுமந்தபடி -  கூலியாய்,
நான் சோர்ந்திருக்கையில் எனை சிரிக்க வைக்கும் - விகடகவியாய்,
மெல்ல மெல்ல என் நெஞ்சில் ஊடுருவி நிரந்தரமாய் ஓரிடம் பறித்துக் கொண்டு - காதலனாய்,
உனைப்போலொருவனில்லை, என் மடியிலுனைக் கிடத்திப் பாடுவேன்
*அன்பே அன்பே நீ என் பிள்ளை*


342. டேய் ... வெறும் பேச்சு மட்டும் தான், செயலில் ஒன்றுமில்லை நீ.
தஞ்சாவூரான், மாவு இல்லாமலேயே அல்வா கிண்டுவாய், தெரியாதா?
எப்போதும் என் ஞாபகம், எங்கு பார்த்தாலும் என் முகம் என்பாய்.
இதோ இங்கு இப்போது ... உன் முன்னால் தானே நிற்கின்றேன்.
என்ன செய்யப் போகிறாய்? சொல்.
தயாராய் வந்திருக்கிறேன், கேள். தரவேண்டியதைத் தந்துப் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்.
இன்னும் சந்தேகமெதற்கு?
பல ஆண்டுகளாய்க் காத்திருக்கு,
புதிதாய் இன்று தான் பூத்தது போல் புலர்ந்திருக்கு.
கரடி ஏதும் காலடி வைப்பதற்குள், சாகசம் காட்டிடு.
உன் சிவ *பூஜைக்கேத்தப் பூவிது*



341. இப்பொழுதெல்லாம் இப்படித்தான்
நித்தியப்படி உன் நினைவு தான்.
எதைச் செய்ய எண்ணினாலும் எதிரில் நீ நிற்கிறாய்.
காலையில் முத்தம் தந்து எழுப்பி, நான் குளிக்கையில் நனைகிறாய்.
உடை அணிய விடாது உருண்டு புரண்டு உசுப்பி விளையாடுகிறாய்.
பேசி சிரித்துக்கொண்டே கூட நடக்கிறாய்; என் கவிதைகளின் சில வரிகளை ஒப்பித்து கண்டபடி திட்டுகிறாய்.
சில சமயம் பழித்து, வாய் சுழித்து, முறைத்து, சோம்பல் முறித்து கண்ணடித்து, காதினுள் பேசி ...
பிரிந்திருக்கையில் தான் புரிகிறது
நீ அருகிலில்லாதது எத்தனை அவத்தை என்பது.
தனியே ஏதும் செய்ய முடியாது தவிக்கும் என்னுள்
*எப்போதும் உன் ஞாபகம்*



340. அன்பு அமைதி வேண்டும்
அடங்கும் வரை அடக்கம் வேண்டும்
பதவி அதிகாரத்தால் எதையும் தேவைக்கேற்ப வளைக்கக் கூடாது.
அளவுக்குஅதிகமான ஆட்டம் ஆபத்தை விளைவிக்கும்.
ஆள் அனுபவி வாழ் வாழவிடு
எத்தனை இருந்தாலும் எதுவும் கூட வராது.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
'நல்லது, அடுத்து?' என்று ஊர் எண்ணக் கூடாது.
எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பது முறையாகுமா?
*கண் போன போக்கிலே கால் போகலாமா ?*


339. சரி போதும்
இன்னும் எத்தனை நாள் தான்
ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருக்கப் போகிறோம்.
இன்னும் எத்தனை நாள் தான்
பார்க்கையில்  பிடிக்காததைப் போலவே நடிக்கப் போகிறோம்.
இதுவரை நான் உன் மனம் இணங்கும்
செயல்களை மட்டுமே செய்து வருகிறேன்.
எனக்குப் பிடிக்காத எதையும் நீ செய்வதாய்த் தோன்றவில்லை.
மோதிக்கொண்டது போதும்.
வாரியணைத்துக் கொள்வோம்.
மறைத்து மறைத்து மனதுள் மலையாய் மாறியிருப்பதை
மடுவாக்கி மகிழ்வோம்.
வேறு வேறாய்ப் போன நம் பாதையை
ஒரு புள்ளியில் இணைத்திடுவோம்.
அருகில் வா, கவலை மற,
என் மடியில் உறங்கு,
என்னோடு நீ, உன்னோடு நான்
நம்மோடு ... நீலக் கடல்
தள்ளாடும் மேகம்
*தாலாட்டுதே ... வானம்*



338. கேட்காமல் கிடைத்ததை இளப்பாய் எண்ணலாம்.
கேட்டது கிட்டவில்லை என்று  புலம்பலாம்.
அதாவது தேவை தகைக்காத போது
தேவையற்றது தகைக்கும் போதும்
யாரோ எங்கோ இருந்துகொண்டு மாற்றியமைப்பது புரிய வேண்டும்.
அந்த யாரோ தான் இறைவன் என்பதை உணர வேண்டும்.
அவன் ஆட்டிவிக்க ஆடி, நடித்து,
அனுமதித்தால் அனுபவிக்கிறோம்.
கருவி நாம், காரியம் அவனது;
உறக்குகிறோம் கனவு அவனுது.
எது எப்போது எதுவரை என்பது எல்லாம் அவன் திட்டமிடுகிறான்.
நாடகத்தை நடிக்கிறோம் என்பதை மறந்து ஆடித்திரிகிறோம்.
அறிந்து கொள்வோம், உலகில் எதுவும் நிலையில்லாதது.
புரிந்து கொள்வோம், கலைந்து போகும் மேகம் போன்றது
நாம் *கனவு காணும் வாழ்க்கை*.