Tuesday, August 21, 2018

பொன்மாலைப் பொழுதில் 33


256. அருந்தவத்தில் அமர்ந்திருக்கையில்
ஆக்கையில் அபூர்வ அதிர்வலைகள் அனுபவித்தேனே,
ஆண்டவன் அருள் அளித்துவிட்டானோ ?

எழுதத் தொடங்கையில்
கோவில் மணியோசை காதில் கேட்குதே,
இன்றிதை யாரேனும் படித்துப் பாராட்டிவிடுவார்களோ ?

இன்னும் இரு வரி எழுதலாம் என்றால்
கற்பனைக் குதிரை பாய்ந்தோட மறுக்குதே,
காதல் மை தீர்ந்துக் காய்ந்துப் போயிருக்குமோ ?

ஆகா, அதோ அங்கே,
*தோகை இளமயில் ஆடி வருகுதே,
வானில்  மழை வருமோ ?*

255. காலையில் விழித்து
'முருகா, க்ருஷ்ணா' என்று தெய்வ நாமம் சொல்லியழைத்து,
சிவபுராணம் ஒலிக்கவிட்டு, தொடர்ந்து பாடி
அம்மாவைக் கொஞ்சி காபி குடித்து
அமைதியாய் யோகா செய்து
மெல்லக் குளித்து அழகாய் உடுத்தி ... இதெல்லாம் அப்போது;
கிமு கிபி போல் உமு உபி; உனைப் பார்க்குமுன், பார்த்து பழகிய பின்.
இப்பொழுதெல்லாம் இமையின் இடையில் நீ நின்றிருக்க,
எங்கிருந்து நான் உறங்க?
'எந்திரி.. டீ எருமை' என்று யாரோ தொடர்ந்து கத்துவதைக் கேட்டுக் கனவு கலைகிறது.
'எவ்ளோ நேரம் குளிப்பே, காஃபி ஆறுதுல்ல ?' என்ற சத்தம் பலமுறை கேட்கிறது.
எதை உடுத்த என்று குழம்பி, நீ என்ன நிறத்தில் உடுத்தியிருப்பாய் என்று யோசித்து ...
உனக்காகக் காத்திருந்து,
நீ பார்க்காது போனால் வருந்தி, பேசாதிருந்தால் உள்ளே அழுது ...
முன்பெல்லாம் நான் உண்டு என் வேலையுண்டு என்றிருந்த என்னை இப்பொழுதெல்லாம் உனைப் பற்றி எண்ணி இருப்பதே வேலையாகி,
என்னை இப்படி தலைகீழாய் மாற்றிவிட்ட நீ
*எங்கிருந்து வந்தாயடா ?*

254. கொஞ்சம் நீளம் தான், கவிதையைச் சொன்னேன்.
இது எப்போது நடந்தது என்றால், சரி அது  கடைசியில்.
ஹாஸ்டலில் அறையில் இரவில்
தடையின்றி துயிலத் தயாராக,
கதவு மெதுவாய் சுரண்டப்பட அவசரமாய் ஒரு துண்டை எடுத்து சுற்றிக்கொண்டு திறக்க,
என்னவள் என் கற்பனைகளுக்கும் கவிதைகளுக்கும் சொந்தக்காரி, சட்டென்று உள்ளே நுழைந்தாள்.
'என்னடி இந்நேரத்துல?' என்றேன்.
'ஆர்கானிக் கெமிஸ்ட்ரில டவுட்டு' என்றாள், சொல்லித் தந்தேன்.
H2SO4 க்கும் CuSO4 க்கும் வேறுபாடு கேட்க, சொன்னேன்.
ட்ரான்சிஸ்டருக்கும் கசின் சிஸ்டருக்கும் வித்யாசம் வினவ விளக்கினேன்.
பேசிக்கொண்டிருக்கும் போதே பையிலிருந்து அதை எடுத்தாள்.
எதை என்று சொல்லிவிட்டால் இந்தக் கவிதைக்கு 18+ முத்திரை குத்தவேண்டியிருக்கும், எனவே உங்கள் கற்பனைக்கு அதை விட்டு விடுகிறேன். 
'இது என்னடி?' என்று கேட்டேன்.
'ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பொளந்து கட்டுற, அத்தியாவசியமான இது என்னன்னு தெரியாது ?' கேட்டாள்.
'தெரியும், இப்போ இங்கே எதுக்கு ?' என்று நான் கேட்க,
'மூடிக்கோ' என்றவள் சமிக்ஞையில் பதில் தர,
அதையும் தொடர்ந்து அமெரிக்க அணு ஆயுதக் கொள்கையையும் ஐரோப்பாவின் வளர்ச்சியையும் கலந்தாலோசித்து ...
இதெல்லாம் நடந்தேறியது
*ஏப்ரல் மாதத்தில், ஓர் அர்த்த ஜாமத்தில்...*


253. இப்பொழுதெல்லாம் நீ என்னிடம் விரும்பிப் பழகுவதில்லை.
சரியாய் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.
ஏன் பல நாட்கள் பேசாதே தவிர்த்துத் தனித்திருக்கிறாய்.
என் தேவை தீர்ந்திட்டதோ ? எனை வெறுக்கத் தொடங்கி விட்டாயோ ?
ஆனால் என்னால் உனை மறக்கவோ தவிர்க்கவோ முடியாது.
நீ ஒட்டாதிருந்தாலும் நான் உனை விட்டு விலகாதிருப்பேன்.
நீயாய் எனை நாடி வரும் வரை உனக்காகக் காத்திருப்பேன்.
எனக்குத் துணையாய் பழைய நினைவுகளும் உன் கவிதைகளும்.
கூடவே அடிக்கடி நாம் விரும்பிக் கேட்கும்  சில பல பாடல்களும்.
இப்போது கூட எங்கோ ஒலிக்கிறது.
இங்கிருந்தே கேட்டு மகிழ்கிறேன் 
என் நெஞ்சக் குமுறலை ஆற்றியபடி எங்கிருந்தோ
*எவனோ ஒருவன் வாசிக்கிறான்*

252. சிறிது சிறிதாக அரிக்கப்பட்ட முள்ளங்கி, வெள்ளை நிலா
நெய் வாசத்தோடு சூடான சாம்பாரில் மிதக்குதே, இட்லி நிலா
~நீ கூடத் தான் இழுத்து அடக்கி வைத்திருக்கிறாய், இரண்டு அழகிய~
உன் கண்ணில் வெள்ளை மேகங்களிடையில் மிளிருதே, கருப்பு நிலா
நீ வெட்டி எறிந்த நகங்களெல்லாம் பிறைநிலா
சைவம் என்ற போதிலும் கணக்கில் எனக்குக் கிடைத்ததோ, முட்டை நிலா
பெருமாளைப் பார்த்த பரவசம் நீங்குமுன் பரிசாய் லட்டு நிலா
தலையைத் தூக்கிப் பார்க்கத் தெரியும்
*நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா* 

251. இலக்கில்லாது சிட்டுக்குருவியாய் இங்கங்கு எனச் சுற்றினேன்.
விசை ஏற்றி பருந்தாய் எனை மாற்றிப் பல திசையிலும் பறக்கக் கற்றுத் தந்தாய்.

கருப்பில் கோடு வரைந்து ஓவியமென்று உளறி வந்தேன்.
வர்ணங்களை இரைத்து வரையக் கற்றுத் தந்தாய். 

எதையோ தட்டி இசை என்று சொல்லி பாட முயற்சித்தேன்.
சரிகமபதநி யும் ஸ்வரம் பிரிக்கவும் கற்றுத் தந்து மெல்லிசையை மெல்ல எனை உணர வைத்தாய்.

இன்று எங்கோ காண முடியாத தூரத்தில் மறைந்து நிற்கிறாய்.
ஒரு முறை எனக்குன் தரிசனம் தா.
*உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான்  எழுதுவேன் காற்றில் தானே*

No comments:

Post a Comment