Monday, August 6, 2018

பொன்மாலைப் பொழுதில் 32


250. புடவை கட்டி, பூ பொட்டு வைத்து
'தேவதையாய்த் தெரிகிறாய்' என்றால்
மூன்று முறை கண் சிமிட்டிச் சிரிக்கிறாய்.
*
'காபி சாரி சாரி டீ ப்ரமாதம்' என்றால்
'அது பாயாசம்' என்று சொல்லி எனை பயமுறுத்துகிறாய்.
'ஹிஹி முந்திரி காணும்' என சமாளிக்க எண்ண முறைக்கிறாய்.
*
சங்க கால வார்த்தைகளை
இங்கு அங்கு தூவி கவிதை சொன்னால்,
கை தட்டி பாராட்டி முத்தம் தருகிறாய்
*
திரைப்படத்தில், (என்) தொடையில் தட்டி சிரித்து மகிழ்கிறாய்.
என் விரலை வளைத்து உன் வாயில் வைத்து விசிலடிக்கிறாய்.
துணிக்கடையில் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு 'பின்னாலேயே வந்துடாதே' என்று ஞாபகப்படுத்தி விட்டு உடை மாற்றச் செல்கிறாய்.
*
மொத்தத்தில்
உன் தூண்டில் விழிகளால்
கண் பேசும் மொழிகளால்
எனை மொத்தமாகத்
*திருடுகிறாய் ... திருடுகிறாய்*

249. மிகவும் கட்டுப்பாடோடு தான் வாழ்ந்து வந்தேன்.
கல்லாய், அலை பாயாது நெஞ்சை அழுத்திப் பிடித்து வைத்திருந்தேன்.
என்றுனைப் பார்த்தேனோ, மீசையில்லா பாரதியாய்த் தெரிந்தாய்.
அகந்தை ஆணவம் அணுவளவும் அண்டாது அளவாடினாய்.
அழகாய் நீ பாட, அதற்கு நான் அர்த்தம் சொல்ல அமைதியாய் நீ செவி மடிக்க
கண்ணிமைக்கும் நேரத்தில் என் நெஞ்சைக் களவாடிவிட்டாய்.
காதலை மறைக்க விரும்பினேன்
கோபத்தைத் துணைக்கு அழைத்துக்  கொண்டேன்.
காணாது மறைந்து நின்றேன்.
கொதித்துக் கிடக்கும் எனைக் குளிர்விக்க நினைத்தாயோ, காதலே ?
மெல்லக் கதவு திறந்து, தென்றலாய்க்  *காற்றே என் வாசல் வந்தாய்*.

247. இதோ இதோ கிளம்பிவிட்டேன்.
ஒரு நாழிகையும் இனி காலம் தாழ்த்தாது துள்ளிக் குதித்துச் செல்லப் போகிறேன்.
அவனின் நீல வர்ணத்திற்கேற்றார் போல் நானும் நீல அட்டிகை அணிந்துகொண்டேன்.
அவன் குரலுக்குத் தேனும் குழலுக்குக் குஞ்சலமும் எடுத்துக் கொண்டேன்.
அரையில் அவன் அணிய அழகுப் பட்டாடை ஒன்று என் பரிசாய்த் தரப் போகிறேன்.
போனமுறை தான் இடையில் அவன் என்னவோ எழுத ஆடை நெகிழ்ந்து, இந்த முறை கவனமாய் இறுக்கி அணிந்து கொண்டேன்.
ஏராளமானோர் அவனுக்காய் காத்திருக்க,
சந்தோஷமாயிருக்கிறது எனக்காகக்
*காத்திருப்பான் கமலக் கண்ணன்*


246. இதுதான் காதல் என்றுப் புரிந்துப் போனது.
இனி எல்லாம் நீ தானென்றுத் தெரிந்துப் போனது.
தினம் தினம் இருவரும் சேர்ந்தே சுற்ற, பேசிச் சிரித்துப் பழக முடிகிறது.
இப்போது தானே விடிந்ததென்று இருக்கும், ஆனால் அதற்குள் இருள் சூழ்ந்து நமைப் பிரிக்கும்.
இரவெல்லாம் நீ அருகில் இல்லாது ஏக்கமாயிருக்கும்.
முன்பெல்லாம் உறக்கம் வரும், உறங்கக் கனவு வரும், கனவில் நீ வருவாய்.
இப்போல்லாம் உறங்கினால் தானே கனவு வர; எப்போது விடியும் என்று நான் காத்திருக்க;
எனக்கு உன்னைப் பார்க்கணும், அதற்கு இரவு முடியணும், பொழுது விடியணும்.
அதனால் *அதிகாலையில் சேவலை எழுப்பி அதைக் கூவிடச் சொல்லுகிறேன்*

245. பெண்ணைப் பார்த்ததும் பரவசம் பொங்கணுமாம்,
எனக்கு எந்த பெண்ணைப் பார்த்தாலும் ... அதை விடுங்க,
அழகாயிருந்தாள், சேலை சுற்றிய சோலை, பூ சூடிய பூவை.
நளினம் அடக்கம் அமைதி அனைத்து நல்ல பழக்கங்களும்.
சிரித்தேன், மெல்லச் சிரித்தாள்,
பெயர் சொல்லிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
கொஞ்ச நாள் பழகியாச்சி
அவளுக்கும் பிடித்திருக்காம், சுற்றி வளைக்காது சொல்லி விட்டாள்.
இப்பொல்லாம் ஒன்றாய்த் தின்று அருகருகில் அமர்ந்து படம் பார்த்து;
இன்று மாலை ... முதல் முத்தம் .... உங்க வாழ்த்து வேண்டி;
சம்மதம் சொல்லணும்னு சாமிகிட்ட
*நேந்துகிட்டேன் நேந்துகிட்டேன் நெய் விளக்கு ஏத்திவச்சி*


244. இன்னும் எத்தனை நாள் விழித்து கழித்து உண்டு உறங்கிக் கிடக்கப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் கண்டு ரசித்து சுகித்துக் கிடக்கப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் உழைத்து களைத்து அயர்ந்துக் கிடக்கப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் பாவப் பொருள் ஈட்டி, சுமந்துத் திரியப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் ஏய்த்து, பிடுங்கித் தின்று உயிர் வாழப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் பொய்யாய் மெய்யைப் புகழ்ந்து பாடி ஆடி மகிழப் போகிறேன்?
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்துப் பட்ட கடனைத் தீர்க்கப் போகிறேன்?
பலவித பித்தலாட்டங்களோடு வாழும் நானொரு பொய்யனே.
கருணை காட்டு மெய்யனே
*பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே*


243. பரிசுதான், அதற்காக இத்தனைப் புடவையா?
பாவி நீ தான் ஆடை அணியவே விடுவதில்லையே, பொறம்போக்கு.
அறத்துப்பால் பொருட்பால் வித்தியாசம் தெரியாது உனக்கு,
காமத்துப்பாலை மட்டும் கசடறக் கற்று, கற்பிக்கிறாயே, எப்படியடா ?
உன் வாய் சுவைப்பது சைவமென்ற போதினும் உமிழ்வதென்னவோ சுத்த அசைவமேயாம்.
தனிமையில் படிக்கையிலேயே வெட்கம் வெட்கமாய் இருக்கிறதே, இப்படியெல்லாமா வர்ணிச்சி எழுதுவாய்ங்க எருமை.
இப்படிப் பட்டக் கவிதைகளைப் படிச்சிட்டு இனி எப்படி உறங்க ?
என்னுள்ளும் கவிதை பொங்க !
மண்டு
நீ இப்பூவைச் சுற்றும் வண்டு
கனவில் வந்து நோண்டும் நண்டு
உன் நினைவில் *தூங்காத விழிகள் ரண்டு*

No comments:

Post a Comment