264. அடேய் அழகா, அற்புதா,
தினம் உனைக் காண, அது போதும்.
உன்னோடு கண்டபடி சிரித்துப் பேசிப் பழக, அது போதும்.
நீ செல்லுமிடமெல்லாம் உன் விரல் கோர்த்தப்படியே சுற்றுவது போதும்.
உன் கவிதைகளைப் படிக்கையில் பரவசம் பிறக்குதே, அது போதும்.
எங்குனை இழுத்துச் சென்றாலும் துணையாய் வருவாயே, போதும்.
சாப்பிடுகையில் 'ஊட்டிவிடவா?' என்று கேட்பாயே, அது போதும்.
வஞ்சியை வசீயம் செய்துவிட்ட
*வசீகரா, என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்*
263. வாழ்க்கையிலுண்டு பல இக்கட்டு
அசந்தால் உன் திறமைகள் போகும் திருட்டு
கலங்காது போராடு
அயராது போட்டியிடு
நற்சிந்தனைகளை நெஞ்சில் புகட்டு
நீ முன்னேற முன்னேற தினம் கிட்டும் வசை தோல்வி திட்டு
காதில் கொள்ளாது காரியம் ஆற்றிடு
உன் உழைப்பைக் காட்டு
புது யுக்திகளைக் கடைபிடித்திடு
பாராட்டப் பார்க்கப் பணிந்திடு
வெற்றி கிட்டும், மகிழ்ந்திடு
கர்வம் கொள்ளாதிருந்திடு
நெஞ்சைக் கொஞ்சம் அமைதிப்படுத்திடு
காது குளிர மெல்ஸிசைப் பாட்டு
ஒருவகையில் இதுவும் தாலாட்டு
இதோ இன்று *நிலவே முகம் காட்டு*
262 திடீரென்றெனக்குப் பொறையேற
ஓடிச்சென்று தண்ணீர் கொண்டு வந்தாய், மகிழ்ச்சி.
நூலகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு சில புத்தகங்கள் கேட்க,
தேடி எடுத்துத் தந்தாய், மகிழ்ச்சி.
நானெது சொல்லினும்
சிரித்த முகத்தோடு நீ செய்வது கண்டு பெருமகிழ்ச்சி.
*
ஒருநாள் இருவரும் தனிமையில் இருக்க,
மெதுவாய் நீ என்னை நெருங்க
'முத்தம் தரணுமா ?' என்று நான் வினவ,
'மதி தெரிய, மழை பொழிய, மடியில் நீ கிடக்க ...' கவிதை மட்டும் பாடிவிட்டுப் போய்விட்டாய்.
*
இதோ ... இன்று ...
காத்திருக்கிறேன், ஏமாற்றாது வா.
எனை மீண்டும் மகிழ்ச்சியில் திழைத்திடச் செய், வா.
நீ சொன்னபடியே, இது மதி தெரியும்
*மாலை நேரம், மழை தூறும் காலம்*
261. இன்றென்ன சொல்ல என்றெண்ண
எதுகை மோனையோடு ஏழெட்டு வரிகள் எடுத்தியம்பினாய்.
எவ்வழி என்வழி என்று நான் தேடிக்கிடக்க
இவ்வழி நல்வழி என்று நீ அழைத்துச் சென்றாய்.
சோகத்தில் நான் துவண்டிருக்க
தோள் தந்தென் துயர் துடைத்தாய்.
தாகத்தில் தவித்தேன், பருக பானகம் தந்தாய்.
*நிழல் வேண்டி நின்றேன், மேகமென*
260. இதுவரை என் மனம் இப்படி சஞ்சலப்பட்டதில்லை.
பார்க்குமெல்லாவற்றிலுமொரு பரவசம் பிறந்ததில்லை.
உள்ளத்திலொரு புத்துணர்ச்சி, இதுவரை உணர்ந்ததில்லை.
கனவுகள் கருப்பு வெள்ளையில் மட்டும் என்று படித்திருக்க,
என்னுறக்கத்தின் உட்புகுந்து உள்ளத்துணர்வுகளில் வர்ணமிறைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறேன்.
இசையிலார்வம் இருக்கெனினும்
ஸ்வர வரிசையிலிதுவரை சிந்தித்ததில்லை.
எதனாலிப்படியொரு மாற்றம் ?
இதெப்படி நிகழ்ந்திருக்குமென்று யோசித்திருக்க,
இத்தனைக்கும் காரணமான அந்த *ஒரு பொன்மானை நான் காண ... தகதிமிதோம்*
259. தவறு தான், ஒத்துக்கொள்கிறேன்.
வேலை வேலை என்றோடி தேவையற்ற செயல் பல செய்தது தவறு தான்.
பணம் தேடும் பயணத்தில் பாவையுன் குணம் மறந்துத் திரிந்தது தவறு தான்.
கன்னியுன் கட்டழகை வர்ணித்தக் காதல் வார்த்தைகள் காலப்போக்கில் காற்றில் கரையவிட்டது தவறு தான்.
சீற்றத்தில் சுடுசொற்கள் பலவற்றை சிந்திவிட்டு விலகி நின்றது தவறு தான்.
ஆப்பக்குழி கன்னத்தில் அதரம் பதித்தது மறந்து அறைந்தது தவறு தான்.
எல்லாமே என் தவறு தான், ஏற்றுக் கொள்கிறேன், என்னுயிரே ...
*ஆருயிரே எனை மன்னிப்பாயா ?*
258. பிடித்திருக்கு என்றால் ... அதற்குப் பத்து காரணங்கள் சொல்லி கன்னி மனதைக் குழப்பணுமா என்ன ? சண்டாளா;
வேதியல் மாற்றங்களை விலாவாரியாய் படித்திருக்க, இன்று கணக்குப் பரிட்சையாம். படுபாவி படுபாவி.
வெயிலில் சிரித்துக்கொண்டே தனியே நடுவீதியில் நின்றிருந்தேனாம், வத்தி வைத்து விட்டார்கள். இதற்கும் நீ தானடா காரணம்.
இன்று காலையில் 'குட்மார்னிங் அங்கிள்' என்று சொல்ல, தூக்கக் கலக்கம் என்று போகவேண்டியது தானே, அப்பப்பா காதில் ரத்தம் வரவர அறிவுரை, அப்பாவை அங்கிள் என்று அழைத்ததற்கு.
அடுத்து நீ என்னை என்ன செய்ய வைக்கப் போகிறாய் என்று பயந்தபடியே இருக்கிறேன், புரியாமலேயே எனைப் படுத்தி எடுக்கும் இது, *என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?*
257. கந்தர்வ விவாகம் செய்து கொண்டு 'இல்லை' என்று பொய் சொல்லவில்லையா துஷ்யந்தன்;
'தலைமுடியைக் கண்டேன், தாளம்பூவே சாட்சி' என்று பொய் சொல்லவில்லையா நான்முகன்;
தான் க்ஷத்ரியன் இல்லை என்று பொய் சொல்லி வில் வித்தை கற்கவில்லையா கர்ணன்;
மண்ணை நான் திங்கவில்லை என்று பொய் சொல்லவில்லையா மாயக் கண்ணன்;
நீ மட்டும் தயங்குவதேனடி பெண்ணே?
உன் காதலன் நான் தானென்று
*ஒரு பொய்யாவது சொல் கண்ணே*