Monday, July 16, 2018

பொன்மாலைப் பொழுதில் 30

234. காலை மூச்சுப்பயிற்சி ஓட்டம் எல்லாம் சேர்ந்த உடற்பயிற்சி நேரம்.
இமை உருட்டி எமை மிரட்ட, புரியும் அது இயற்பியல் பயிற்றுவிக்கும் நேரம்.
கூந்தலை இழுத்து முத்தானையைச் சொருகி  ம்ம்ம் உனக்கேப் புரியாத கணக்கை எனக்கு சொல்லித் தரும் நேரம். 
'அது ஒன்னுமில்லேடா தம்பி' என்றால் அடுத்து கெட்ட வார்த்தையால் நீ எனைத் திட்டும் நேரம்.
சந்தனக்கீற்றுடன் சாய்ந்து ஒயிலாய்ப் பார்த்தாலோ இதழோரம்
*காதல் கவிதைகள் படித்திடும் நேரம்*

233. தினம் உனைப் பார்க்க வேண்டும்.
சினேகப் பார்வை சிந்த வேண்டும்.
தவறாகிப் போகுமோ என்றத் தயக்கம் ஏதுமின்றிப் பேசிப் பழக வேண்டும்.
நட்புச்செடி நாளும் செழித்து வளர வேண்டும்.
விரல் பிடித்து எங்கும் சுற்றித் திரியும் சுதந்திரம் வேண்டும்.
செவ்வானம் சிவக்கும் அழகை உன் கூடவிருந்து ரசிக்க வேண்டும்.
அருகிலேயே ஒரு அருவி, ஓடை ஓட வேண்டும்.
காதல் காமம் இரண்டும் கலந்து வாழ்வு செழிக்க வேண்டும்.
ஆள் ஆரவாரமற்ற
*யாருமில்லாத தீவு ஒன்று வேண்டும்*

232. ஏனோ உன்னோடு, கொஞ்சநாள் தான் என்றபோதிலும், பழகியபிறகு பார்க்காமல் இருக்க முடியவில்லை.
விடுமுறைக்குச் சென்ற நீ எப்போது வருவாய் என்று ஏங்கித் தவிக்கிறேன்.
எப்போதாவது என் நினைவு வருமா உனக்கு  என்றறிய ஆசைப்படுகிறேன்.
வந்ததும் வராததுமாய் நீ எனைக் காண ஓடிவரணும் என்று விரும்புகிறேன்.
'என்னடி செய்தாய்?' என்றெனை நீ  கேட்கணுமென்றுத் தவிக்கிறேன்.
உன் நினைவில் வாடுவதை வெளியே சொல்ல ஏழாதிருக்கிறேன்.
தயவுசெய்து  உன் பணியை சீக்கிரம் முடித்துக் கொண்டு ...எனக்காக ...
*முன்பே வா, என் அன்பே வா*


231. ஹூம் இதெல்லாம்...என்னென்பது.
வரவர உன்னை அதிகம் அழகுபடுத்திக் கொ(ல்)ள்கிறாய்.
கண்ணாடி முன்னாடி நொம்ப நேரம் நிற்கிறாய்.
பின்னாடி நான் நிற்பதைக் கண்டும் காணாதுப் போகிறாய்.
புரியாத வார்த்தைகளில், புலம்பலோ என்றெண்ண 'கவிதை எப்படி' எனக்கேட்டு எங்களைக் கலவரப்படுத்துகிறாய்.
எதையோ சொல்ல எண்ணி ஏதும் சொல்லாது மெல்ல நழுவுகிறாய்.
ஒருவேளை காதல் வலையில் கன்னி நீ  விழுந்திருக்காயோ ?
உன் நெஞ்சைக் கவர்ந்தவனோடு
தனிமையில் கட்டுண்டு கிடக்காயோ.
கனவிலும் நினைவிலும் காதலனே கதியென்று...ம்ம்ம்
அவ்வளவு சீக்கிரம் எம்மை விட்டுச் செல்ல ஏழுமா?
*மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ?*

230. விடிந்தது காலை
சம்மதம் சொன்னது ஓலை
அபலைக்கில்லை இனி தொல்லை
பறந்துபோயிற்று நெடுநாள்க் கவலை
எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை
நெஞ்சில் பொங்கும் இன்பத்திற்கில்லை எல்லை
கண்ணின் திவலைக்குக் கிட்டியது விடுதலை
சொல்லமுடியாத சுகம் இந்நிலை
வாடியிருந்த நிலத்தில் பெய்தது வான்மழை
வெகு விரைவில் *மாலை சூடும் வேளை*

229. கோதையோடு நீ கொட்டமடித்தது பற்றிப் பேசேன்.
என் வேறுசில தோழியரோடு ஒளிந்துப் புரண்டு நீ ஆடிய ஆட்டம் பற்றி அளவாடேன்.
சுந்தர வதனம் காட்டி சுந்தரியரோடு சுகித்திருந்ததைப்  பற்றிக் கேட்கேன்.
நேற்று வருவதாய்ச் சொன்னாய், வரவில்லை; அதைப் பற்றி வாய் திறக்க மாட்டேன்.
அரக்கரையே அழிக்கும் ஆற்றல் படைத்தவனுக்கு இந்த அம்மாச்சிப் பெண்டியரை வசப்படுத்துவது அரிதா என்ன?
ஆயிரம் வேலைகள் உனக்குண்டு; அபலை எனக்கோ உன்னை எண்ணிக் கிடப்பதே வேலையாம்.
என்னருகிலும் ஒருமுறை வாராயா?  நெஞ்சின் வேதனை தீராயோ?
இன்னும் *கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா*

228. எப்போதும் போல் குறித்த இடத்தில் குறித்த நேரத்தில் காத்திருந்தேன்.
என் புஜ்ஜிக்குட்டி ஆளைக்காணேம்.
வராது கம்பி நீட்டி விடுவாளே என்று என்னுளொரு சம்சயம்.
அலைபேசியில் முயற்சிக்க அவளோ அழைப்பை நிராகரித்தாள்.
கொஞ்ச நேரத்தில் வேகவேகமாய் வந்தாள், கோபமாய்த் தெரிந்தாள்.
கொஞ்ச எத்தனிக்க கொடூரப் பார்வையில் எனைத் தடுத்தாள்.
'பேசாதே' என்றாள். 'தொடதே' எனச் சொல்லி தள்ளி நின்றாள்.
'எனக்கெதற்கு வாழ்த்து ? எருமை' என்றெறிந்து விழுந்தாள்.
எனக்கெல்லாம் புரிந்தது. சினத்திற்குக் காரணம் தெரிந்தது.
அருகில் அழைத்து அமர வைத்தேன்.
அன்றைய நாளின் மகத்துவத்தை புரியும்படி எடுத்துரைத்தேன்.
'அப்படியா' என்றாள், ஆச்சரியம்
ஆனந்தம் கொண்டாள்.
கையில் ஒரு சிறு பூ தந்து வாழ்த்த, வெட்கத்தோடு *மெல்லச் சிரித்தாள்*

227. இதமான மாலை நேரம்
இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீ எனைக் காண வரும் நேரம்.
கதிரவனின் கதிர்கள் நமைக் காட்சிப் பொருளாக்க முடியா நேரம் .
நாமிருவரும் மனம் விட்டுப் பேசிச் சிரித்து மகிழும் நேரம்
நான் கேட்க கதைகளை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் நேரம்.
கன்னங்கள் உரச காதினுள் நீ கவிதைகள்  சொல்லும் நேரம்.
கைகளை இணைத்து கவலை மறந்துக் கலித்திருக்கும் நேரம்.
மெல்ல நீ இடை வருடி எனை உசுப்பிடும் அந்நேரம்
*என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்*

No comments:

Post a Comment