242. நல்லோர் நலமாய் வாழ துணை புரி
நலிந்தோர் வாழ வழி கொடு
நாளைய பயத்தை நீக்கிடு
நானில வாழ்வை இதமாக்கிடு
நிதானம் நிம்மதி அருளிடு
நற்சிந்தனை நலம் தருமென்பதை நிருபித்திடு
நல்லார் இல்லாரை நல்வழிப்படுத்திடு
நஞ்சு விதைக்கும் நீசரை நசுக்கிடு
நம்பினார்க்குத் துணையிருந்திடு
*நாராயணா நாராயணா நாராயணா*
241. திருவிழாவில் தேர்மீதிருந்து என் மீது பூ தூவியது
நீ தானே?
காகிதத்தில் 143 எழுதி என் தம்பியிடம் கொடுத்தனுப்பியது
நீ தானென்று அறிவேன்.
நயனம் அதரம் வதனம் போன்ற வார்த்தைகளில் கவிபுனைந்து
என் கட்டுரைப் புத்தகத்தின் இடையில் வைத்தது நீ தானே?
உனைப்போலவே இருக்கும் உன் கிறுக்கெழுத்து காட்டித் தந்து விட்டது.
உன் சிலபல குறும்புச் செயல்களில் நான் கவரப்பட்டது உண்மையே.
நான் வரும் நேரம் பார்த்துக் கோவிலில் இருக்கிறாய்.
கண் மோதையில் கண்மூடிப் ப்ரார்திக்கிறாய்.
உன் திருட்டுத்தனங்களெல்லாம்
எனக்குத் தெரியுமென்று சொன்ன பிறகும் இன்னும் நீ
*மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?*
240. இருபக்க ஜடை பின்னி கண்மை வழிய
கலர் ரிப்பன் வாங்கித் தர அழுதாலே, அவளா இவள்?
பள்ளி செல்கையில் ஒருமுறை பின்னால் தட்ட
எனை ஓட ஓட விரட்டினாளே, அவளா இவள்?
பாவாடைக்கு நடுவுல கமார்க்கட் வச்சி
பல்லால பாதி கடிச்சித் தந்தாளே, அவளா இவள்?
தாவணி, தலையில் பூ, காதில் ... என்னவோ சொன்னாளே ... ஜிம்மியா ?
மோர் தரும் போது ... அது சிநேகச் சிரிப்பா,
முறைமாமன் என்பதால் முறைப்பா ?
ஒருநாள் வரப்பு வழுக்கி, விழுந்து தொடையில் சிராய்ப்பு...
இப்போ அதுபத்திக் கேட்டா தப்பாகுமோ ?
இப்படி ஆவாள் என்றெனக்கு அப்போதுத் தெரியாதே, ஆனால் அப்போதிருந்தே இவள் இப்படித்தானே.
எனக்குப் பிடிச்சிருக்கே
என் நெஞ்சைக் கவர்ந்தவளே
வளர்ந்து நிற்பவளே,
என் *அத்தைக்குப் பிறந்தவளே*
239. ஆகா
பரிமள சுகந்தம் நுகர்கிறேன்
பீதாம்பரத்தின் சரக் சரக் ஓசையும்,
கால்ச் சதங்கையின் ஜல் ஜல்
ஒலியும் துல்லியமாய்க் கேட்கிறது.
உன் நடைவேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது,
உன் பின்னால் ஓடி ஓடி வரும் என் தோழியரின்
முக்கல் முனகலை உணர்கிறேன்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னருகில் நான்
என்று நினைக்கையிலேயே நெஞ்சு உவகை கொள்கிறது.
உன் புல்லாங்குழலிசையை முதலில் கேட்டு
ரசித்து சிலிர்க்கப் போகிறேன்.
நேரம் தாழ்த்த மாட்டேன்
இதோ கிளம்பி விட்டேன்
உனக்காகத் தானே தவமிருந்தேன்.
*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்*
238. உனைப் பார்த்ததும் புத்துணர்ச்சி,
நெஞ்சில் பரவுமொரு பரவசம்,
பார்க்குமெல்லாவற்றிலும் பரிவு தோன்றுகிறது
ஆசை பாசம் எல்லாம் அளவுக்கு அதிகமாய்ச் சுரக்கிறது.
சிலசமயம் என்னுளெழும் வெட்கம் கண்டு ஆச்சரியமடைகிறேன்.
எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டேன் என்றெண்ணி சிரித்துக்கொள்கிறேன்.
இவை எல்லாம் உன்னைப் பார்த்ததிலிருந்து தான்.
மெல்ல எனைப் பார்த்து நீ சிரித்தாயே அன்றிலிருந்து தான்.
இது அதுதானோ ?
அப்போ *காதல் நீ தானா ?*
237. புடவை அணிந்தக் கர்ணியோ?
பூ வாங்கியவள் மீதிப்பணத்தை பூக்காரியிடமே தந்துவிட்டாயே.
அந்தக் காட்டன் சேலை, தலையில் பூ, சிரித்த முகம் ... தேவதையே.
என் சந்தேகமெல்லாம் அழகான ஆடையே உடுத்துவாயா
இல்லை நீ உடுத்தும் எல்லாமே அழகானதா?
இத்தனை நீளக்கூந்தலா ? நடக்கையில் ஜதி பிசகாது
இருபுறமும் தொட்டுச் செல்லும் பாங்கு அருமை.
சந்நிதியில் பாடினாயே, வாரணம் ஆயிரம் ...
வாவ் கனவு பழிக்கும்.
ப்ரசாதக் கடையில் வாங்கி பூனைகளுக்கு உண்ணத் தந்தது,
அடடடடா அருமை.
இத்தனையையும் நீயறியாமல்,
உனக்கேத் தெரியாமல் நேற்று *முன்தினம் பார்த்தேனே*
236. சுரம் பிசகாது பாடுகிறாய்.
சுவாரஸ்யமாய் சிரிக்க வைத்துப் பேசுகிறாய்
குழல் ஊதி எமை ஈர்த்து நிழலாய் உனைத் தொடரச் செய்கிறாய்.
அருகிலமர்ந்து அளவாடுகையில் அழகாய் வரைந்து அசத்துகிறாய்.
பாசம் காட்டி ஆசை வார்த்தை சேர்த்து ஆளை மயக்கிவிடுகிறாய்.
அழகு தமிழில் எளிய சொற்களில் எழுதி எமை சொக்க வைக்கிறாய்.
சுந்தர வதனம் காட்டி எங்கள் சொப்பனங்களில் சுற்றுகிறாய்.
உனக்குத் தெரியாக் கலை எது ?
அன்பனே, என் உயிர் நண்பனே,
சகலமும் அறிந்தவனே
*சகல கலா வல்லவனே ...*
235. கவலை எதற்கு உனக்கு ?
காதலில் இல்லையே பிணக்கு
காணாமல் பிரிந்திருக்கிறோமே அதற்கா?
காரணமில்லாமல் காரியம் இருக்கா?
கரைந்து கிடந்தால் கலக்கம் மாறுமா?
கவலை தான் தீருமா?
காலத்தின் கட்டாயத்தால் கலம் மாறிப் பயணம்.
கரைகள் வேறானபோதும் மனம் மாறாது என்றும்.
காதலைச் சுமப்பவள்
கவலை மறந்து சிரிக்க வேணும்
கமலம் போன்றுன்
*கண்ணில் என்ன கார் காலம் ?*