Friday, December 8, 2017

பொன்மாலைப் பொழுதில் 8

கழுத்து வரை பணம்
நெஞ்சில் நிறைய விடம்
எதற்கெடுத்தாலும் சினம்
யாரைப்பார்த்தாலும் உதாசீனம்
எழுத்தில் மட்டுமே நற்குணம்
போதுமிந்த துர்குணம்
அழியட்டும ஆணவம்
மாறட்டும் சுபாவம்
இனி தினம் தியானம்
வேணும் ஞானம்
உணரணும் வாழ்க்கையின் தத்துவம்
புரியணும் பரம்பொருளின் மகத்துவம்
வரம் தரவேண்டும் சிவம்
எங்கே அந்த சிவம் ? 
யார் சிவம் ?
*யார் ... யார் ... சிவம் ?*

---

என்ன வருத்தம் உனக்கு,
ஏது செய்தாய் பிணக்கு;
கருவி நீ, காரியமெல்லாம் அவனது,
அசைவு மட்டும் உன்னது, ஆட்டமெல்லாம் அவனது;
நீ நீயாய் இரு,
வெளியிலிருந்து உன்னைப் பார்த்திரு,
உன்னுடையது ஏதுமில்லை என்பதை உணர்ந்திரு;
நேசிப்பவர் நேசிக்கட்டும்,
வெறுப்பவர் வெறுக்கட்டும்;
படைத்தவனுக்குத் தெரியும் உன் பாதை
வாழ்க்கை செல்லும் வழியில் செல்;
தெரிந்தா வந்தாய் நீ ?
தெரிந்தால் வந்திருப்பாயா நீ ?
கிடைத்தால் ஆடாதே,
கைவிட்டுப் போனால் அழாதே,
*தலைமகனே கலங்காதே, தனிமை கண்டு மயங்காதே*

---

இதுவரை எத்தனையோ ஆணுடன் பேசியதுண்டு.
ஏன் இவனுடன் கூடத்தான்
எத்தனையோ முறை அளவாடியதுண்டு.
கள்ளமில்லாது சிரித்துச்சிரித்துப் பேசி பழகியதுண்டு.
உரிமையோடு சண்டை கூட போட்டதுண்டு.
கூச்சப்படாது காசில்லை என்று சொல்லி இவனிடம் கடன் வாங்கித் தின்றதுண்டு.
என் மற்ற தோழியரோடு சேர்ந்து நக்கல்
பல நாள் செய்ததுண்டு.
எப்படியோ என்னவோ செய்து
என்னைக் கவர்ந்துவிட்டானே ...
சிரிப்பா படிப்பா அழகா ஆற்றலா ...
அன்பா பண்பா ....
ஐயோ ... இன்றிவனைப் பார்க்கும் பொழுதே
என்னுள் ... ஒரு ...ஒரு...

*ஒரு வெட்கம் வருதே வருதே*

---

ஆறு கேட்டேன்
   அருவி தந்தனை
புத்தகம் கேட்டேன்
   நூலகம் தந்தனை
பருகநீர் கேட்டேன்
   பானகம் தந்தனை
மருந்து கேட்டேன்
   உணவு தந்தனை
உறக்கம் கேட்டேன்
   கனவு தந்தனை
*மலர்கள் கேட்டேன்*
   *வனமே தந்தனை*

---

போதுமென்ற மனம் வேண்டும்
பொன் பெண் மாயை விலக வேண்டும்

பேசுவதெல்லாம் உண்மையாக வேண்டும்
பேசாதிருக்க, பொறுமை நிறைய வேண்டும்

சுத்தமான நீர் காற்று வேண்டும்
சூடாய் உண்ண பசி வேண்டும்

கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும்
கிடைத்ததெல்லாம் கொடுத்துப் பழக வேண்டும்

படுத்தவுடன் உறங்க வேண்டும்
உறக்கத்தில் நல்ல கனவே வேண்டும்

அதிகாலை துயிலெல வேண்டும்
ஆத்திரம் அடக்கப் பழக வேண்டும்

புதுயுலகம் பிறக்க வேண்டும்
*புத்தம் புதுபூமி வேண்டும்*

No comments:

Post a Comment