Thursday, March 27, 2014

எக்காலம் ?

ஆணவம் கொள்ளாது ஐம்புலன்களையும் அடக்கி தூங்கி நேரத்தை வீணடிக்காது சுகம்பெருவது எக்காலம் ?       கவலையில் கவிழ்ந்து மனம் மிகத் தளர்ந்து உள்ளம் வாடி ஒழியாத பிறவித் துன்பத்தை அழிப்பது எக்காலம் ?


குழந்தையாய்ப் பிறந்து செவிடு ஊமை போல் திரிந்து பேய் போல் வாழ்ந்து உன்மேல் பைத்தியமாகி உனை எண்ணிக் கிடப்பது எக்காலம் ?       மண்ணுயிரைக் கொன்று தினம் தின்று பிறரை வதைத்து வாழாமல் தன்னுயிர் போல் எண்ணித் தவம் புரிவது எக்காலம் ?


பட்டாடை பொன் நகைகள் பொய் நடிப்பு தீஞ்செயல்கள் எல்லாம் விடுத்து சிவனே உன்பாதம் விரும்பிப் பிடிப்பது எக்காலம் ?       தூண்டிலில் சிக்கிய மீன்போல் துவண்டு வாடாமல் ஐய, உனைத் தேடி அடிபணிவது எக்காலம் ?


கஞ்சா அபின் கள் உண்டு களித்துக்கிடக்காமல் பஞ்சாமிர்தம் அருந்திப் பரவசமடைவது எக்காலம் ?       வயிறுக்கு உணவிடுவோர் வாயில் தேடி வெட்டியாய்த் திரிவதை விடுப்பது எக்காலம் ?


தேவையற்ற சிந்தனைகளில் சிக்குண்டு தவிக்காது சிவநாமத்தையே ஜெபித்திருக்கும் காலம் எக்காலம் ?       பக்தியால் தொழுது ஞானத்தால் உணர்ந்து பாசவலையில் சிக்காது துன்பமேது மில்லாது கரை சேர்வது எக்காலம் ?


அகில உலகங்களில் இருக்கும் அத்தனை உயிரினங்களும் ஆண்டவன் அருளால் அவதரித்ததே அல்லாமல் வேறில்லை என்று அறிவது எக்காலம் ?       மூலாதாரத்தில் வீற்றிருக்கும் மும்மூலக் கடவுள் விநாயகனின் திருவடித் தாமரைகளைத் தொழுது நிற்பது எக்காலம் ?

Monday, March 24, 2014

பஞ்சர்

தம்பி பஞ்சர் பாப்பியா ?

போர்டு போட்ருக்கு பாரு சார்

நா போர்ட பாக்குறே, நீ பஞ்சர் பாப்பியா ?

பாத்துருவோ, ஸ்டெப்னிலயா ? டிக்கி தொற சார்;

(கொஞ்ச நேரம் கழித்து )

“சார் 3 பஞ்சர்”

“டேய் நா ஒன்னு ஒட்டுனே, சார் 4 சார்”

“சரியா சொல்றா, ஏமாத்த நெனைக்காதே”

“சார் இதுல என்ன சார் ஏமாத்த, நா 3 ஓட்டுனே, அவே 1 ஒட்டுனா, மொத்தம் 4 பஞ்சர் சார்”

“3 தா ஓட்டுனே, நா தா பாத்தேனே”

“இதோ பாரு சார், லெப்ட்ல 3, ரைட்ல 1, 4 சார்”

“1 பழசு, 3 தா மொத்தம்”

“என்ன சார் சின்ன பசங்கள இப்டி ஏமாத்தறீங்க”

“ஏம்பா, 3 ஒட்டிட்டு 4 ன்னு சொல்றே, யாரு ஏமாத்தறது ?”

“சரி சார், பஞ்சருக்கு 30 ரூபா, மொத்தம் 90 குடுத்துட்டு இடத்த காலி பண்ணு சார்”

“வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்,
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் என் மூளையைச் சேரும்” பாட்டு
பாடிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினேன்;

2 நாள் கழித்துதான் அந்தக் கடையிலிருந்த இன்னொரு போர்டைப் பார்த்தேன் “பஞ்சருக்கு 20 ரூபாய்”.

Monday, March 10, 2014

அபிராமியம்மைப் பதிகம்


எனை விட
எல்லாவிதத்திலும் வலியவர் எனை
எல்லாவிடத்திலும் துரத்த,

எனைப் பீடித்த
நீங்காப் பிணி
நிழலாய் எனைத் துரத்த,

கோபம் கொண்டு நான் கொதித்தெழ – அக்
கோபமே எனை வேகமாய்த் துரத்த,

வறுமை தரித்திரம் வேதனை
இவை எனை
இடைவிடாது துரத்த,

நரைத்த முடி, மறைத்த கண் இவற்றோடு
முதுமை எனை முப்பொழுதும் துரத்த,

பருவ வயதுப் பாவங்கள்
பகையாகி எனை
பாவம் பார்க்காதுத் துரத்த,

வாட்டி எடுத்து, வஞ்சனை
விடாது எனைத் துரத்த,

காலம் மறக்காது
கதறும் பசி
பாவம் பார்க்காது எனைத் துரத்த,

பசி போக்க
பாவங்கள் செய்ய, அப்பாவங்கள்
பாய்ந்துவந்து எனைத் துரத்த,

பதவி பணம் இருந்தால் இத்தனை
பிரச்சனைகளும் பஞ்சாய்ப் பறக்குமே என்ற
பதிமோகம் எனைத் துரத்த,

பலகாரியம் செய்ய முற்பட,
அவையனைத்தும் எனைத் துரத்த,

அவசரத்தில் செய்யும் செயல் கண்டு
அத்தனைப்பேரும் ஊரும் சிரிக்க,

நேரம் நாள் எல்லாம்
நிற்காது ஓடி எனைத் துரத்த,

நாக்கு வறண்டு,
கால்கள் தளர்ந்துத்
தள்ளாடும் எனை
அந்தக் காலனும் துரத்துவானோ ?

அகில உலகையும் காக்கும்
அபிராமித் தாயே,
அருள்வாய் நீயே;