399. சீதையைத் தேடும் பணி துவங்கியது மழைக் காலம் முடிந்த பின் தான்.
கண்ணனைச் சுமந்து வசுதேவர் கோகுலம் வர வழியெங்கும் நல்ல மழை.
கோவர்த்தன மலை தூக்கி கோவிந்தன் மக்களைக் காக்கக் காரணம் பெரும் புயல் மழை.
சிவனடியார் புசிக்க முன்தினம் தான் நட்ட நெல்மணிகளை சேகரிக்க இளையான்குடி நாயனார் விரைந்தோடினார் மழையில்.
பஞ்சம் போக்க ஸ்ரீராகவேந்திரர் யாகம் செய்ய தஞ்சையில் பொழிந்தது மழை.
புராணத்தில் சரி, நிகழ்காலத்தில் உனைப் பற்றி எண்ணையில்
*நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை*
398. வசந்த காலம் - குளிருக்கும் வெயிலுக்கும் இடைப்பட்ட காலம்.
ராமன் பிறந்தது வசந்த காலம்.
பஞ்சவடியில்* சீதையுடன் மகிழ்ந்து வாழ்ந்து வந்தது வசந்த காலம்.
அவளைப் பிரிந்து கிஷ்கிந்தையில் துயரத்தில் துடித்தது வசந்த காலம்.
காலங்களில், தான் வசந்த காலம் எனச் சொல்கிறான் கிருஷ்ணன்.
சிவன் மீது மன்மதன் பானம் எய்து பின் சாம்பலானது வசந்த காலம்.
சாபம் பற்றித் தெரிந்தும் பாண்டு மாத்ரி இணைந்தது வசந்த காலம்.
மோகினி அவதாரம் பார்த்து சிவம் மோகம் கொண்டது வசந்த காலம்.
ஆம்...இதோ இந்த வசந்த காலம் ...
என்ன தான் நாம் இருவரும் விலகி விலகி நின்றேப் பழகினாலும்,
ஒருவரை ஒருவர் வெறுக்காது ஒதுங்கியே நின்றிருந்தாலும்
நாட்கள் தானே நகருது,
காலம் வீணே ஓடுது,
*வசந்த காலங்கள் கசந்து போகுது*
397. கோதா கூந்தல் சுகந்த மாலையை ரங்கமன்னார் கேட்டதும் பெரியாழ்- -வாரை சந்தோஷ மின்னல் ஒரு கோடி தாக்கியது.
'இனி எமை தொடாதீர், இது சிவம் மீது ஆணை' என்று மனைவி
சொல்ல திருநீலகண்டர் மனதில் மின்னல் கோடி தாக்கியிருக்கும்.
வழி மறித்த காவல் தெய்வம் லங்கிணி மார்பில் அனுமன் விட்ட குத்து மின்னல் ஒரு கோடி தாக்கியதற்கு சமமானது.
கூடப்படித்த துருபத அரசன் 'யார் நீ?' எனக் கேட்டதும் உதவி கேட்க வந்த ஏழை துரோணருக்கு மின்னல் ஒரு கோடி தாக்கியதாய் இருந்தது.
தேவகியின் எட்டாவது பிள்ளை சிறை தப்பிய செய்தி கேட்டதும் கம்சனுக்கு மின்னல் ஒரு கோடி தாக்கியது போல் இருந்திருக்கும்.
பாம்புகள் தீண்டியும் தீ சுட்டெரித்தும் மலையுச்சியிலிருந்து வீசப்பட்டும் ப்ரகலாதன் இறக்கவில்லை என்ற செய்தி ஹிரண்யகசுபுவிற்கு மின்னல் ஒரு கோடி தாக்கியது போல் இருந்தது.
உன் ஒரு ... ஒரே ஒரு முத்தம் தான் தந்தாய், என்னைத் தாக்கியதோ
*மின்னல் ஒரு கோடி*.
396. பரந்தாமனின் பரிந்துரைபடி பரமசிவனைப் ப்ரார்த்தித்து பசுபதஸ்திரம் வேண்டினான் பார்த்தன்.
'பெருமாளே உம் பவளவாய் பார்த்தபடி இருத்தல் போதும், இந்திரப் பதவி வேண்டா' என்று வேண்டினார் பெரியாழ்வார்.
காலம் தவறாத மழையும், வயல் நன்கு விளையவும், கொட்டிலில் மாடு கன்று நிறையவும் வேண்டியது ஆண்டாள்.
'பிறவாமை வேண்டும், பிறந்தாலோ இறைவ, உமை மறவாமை வேணும்' என்று வேண்டியது ஔவையார்.
'பால் தேன் வெல்ல பாகு நானுக்குத் தர சங்கத் தமிழ் நீ எனக்குத் தா' என்ற வேண்டலும் ஔவையாரே.
'உன் புகழ் நான் பாடுகிறேன், என் குடி நீ காத்திடு' வேண்டியது பாரதி.
'கல்லானால் தணிகை மலையில், மரமானால் பழமுதிர் சோலையில்' என வேண்டியது சௌந்தர்ராஜன்.
உன்னோடு உன் அருகில் அமர்ந்து 96 பார்க்கணும். இது போதும். எனக்கு *வேறென்ன வேறென்ன வேண்டும்*
395. இலங்கை நோக்கிக் கிளம்பு முன், அனுமனிடம், சீதையும் தானும் மட்டும் அறிந்து சில சேதிகளை ராமன் எடுத்துரைத்தான்.
கர்ணனைக் கொன்ற காண்டிபன் கதற, அவனை ஏற்கனவே பல பேர் கொன்ற சேதிகளை கண்ணன் விவரித்தான்.
பல மாறு வேடங்களணிந்து வள்ளியை மணந்த பின், அவள் பூர்வ ஜென்ம சேதிகளை முருகன் உரைத்தான்.
தன் வம்சத்தை அழிப்பதேன் என்று கேள்வி கேட்ட போது சந்தனுவிடம் அஷ்டவசுக்கள் பற்றிய சேதியை கங்கை சொன்னாள்.
நரகம் கிட்டும் என்று தெரிந்தும் கோவில் கோபுரமேறி நாராயண மந்திர சேதிகளை ராமானுஜன் சொன்னான்.
ஆக இவ்வளவு பேருக்கு சொல்ல ஏதோயிருக்க, எனக்குள்ளும் இருக்கே; *மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு*
394. முன்பெலாம் மனமுழுதும் விசனம்
எதைப் பார்த்தாலும் உதாசீனம்
வாய் திறந்தாலே வெளிபடும் சினம்
அழகை ஆராதிக்காத முட்டாள்தனம்
உன் மேல் படிந்தது என் கவனம்
வாழ்வில் கிட்டியது ஒரு பிடிமானம்
பிடித்திருக்கு உன் பிள்ளைத்தனம்
அதிராது ஓரிரு வார்த்தை வசனம்
கொஞ்சும் சிரிப்பே உன் மூலதனம்
இதுவே தினம் தினம் என் தியானம்
சலனமில்லா வதனம் தந்த ஞானம்
கை கோர்த்து கனவுகளூடே சயனம்
பேசிப் பழகி ஒன்றியது இரு மனம்
நீயுன் நெஞ்சில் தந்தாய் ஆசனம்
என் தவத்திற்கிட்டிய வெகுமானம்
உன் யவ்வனம் கவிதைக்கு தீவனம்
இதோ மழை, வானம் தரும் தானம்
கேட்குதா, பறவைகளின் கானம் ?
புறப்படுவோமா, இது நல்ல சகுனம்
நிறைய வரும் ஏளனம் விமர்சனம்
நல்லது என்று பேசும் நம் ஜனம் ?
அவர் தம் வாய் மூடுவது கடினம்
துறந்து வா, நாம் போகுமிடம் ...
*பனி விழும் மலர் வனம்*