திருக்குறள்
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30)
எல்லா
உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
----------------------------------------------------------------------------
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று. (61)
தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது
----------------------------------------------------------------------------
அபிராமி அந்தாதி
பொருந்திய
முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே. (5)
அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும்,
நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற
வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு
செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய
அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே,
என் தலைமேல் கொண்டேன்.
--------------------------------------------------------------------------------
தேவாரம்
ஊர்திரை வேலையுள் ளானு முலகிறந் தொண்பொரு ளானும்
சீர்தரு பாடலுள் ளானுஞ் செங்கண் விடைக்கொடி யானும்
வார்தரு பூங்குழ லாளை மருவி யுடன்வைத் தவனும்
ஆர்திரை நாளுகந் தானு மாரூ ரமர்ந்தஅம் மானே. (4.4.6)
பரவும் அலைகளை உடைய பாற்கடலில் உள்ளவனும், உலகுக்கு அப்பாற்பட்ட மேம்பட்ட பொருளாவானும், சிறந்த பாடல்களில் உள்ளவனும், சிவந்த கண்களை உடைய திருமாலாகிய காளையின் வடிவம் எழுதிய கொடியை உடையவனும், நீண்ட பொலிவு பொருந்திய கூந்தலை உடைய பார்வதியைத் தழுவி ஒருபாகமாக வைத்தவனும், திரு ஆதிரை நாளை விரும்பி ஏற்றவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான்.
--------------------------------------------------------------------------------
திருவாசகம்
யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்
கென்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான்
மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேஎம்
பெருமான்எம்
மானேஉன் அருள்பெறுநாள் என்றென்றே
வருந்துவனே (8.5.12)
திருமந்திரம்
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவ்வே
சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே (10.4.5)
சூரிய காந்தக் கற்கள் தனியே நிற்கும் பொழுது தம்மை மூடியுள்ள பஞ்சு களைச் சுடமாட்டா. அது போலப் பசுக்கள் தனியே நின்று தம்மைப் பிணித்துள்ள பாசங்களை நீக்கமாட்டா. ஆயினும், அச்சூரிய காந்தக் கற்கள் சூரியன் வந்தபொழுது அதன் கிரணத்தைப் பெற்றுத் தம்மை மூடியுள்ள பஞ்சுகளைச் சுட்டெரிக்குமாறுபோல, சிவன் ஞானாசிரிய னாய் வந்த பொழுது பசுக்கள் அக்குருவின் அருளைப் பெற்றுத் தம்மைப் பிணித்துள்ள பாசங்களை அகன்றொழியச் செய்யும்.
--------------------------------------------------------------------------------
( தொடரும் )
copy right to the respective web sites.