461. உனக்குப் பிறக்கும் பிள்ளைக்கே அரசாட்சி என்று சத்தியம் செய்தான் தசரதன்.
உனைத் தவிர இன்னொருத்தியை மனதளவிலும் தொடேன் என்று சத்தியம் செய்தான் ராமன்.
அர்ச்சுனனைத் தவிர வேறாரையும் கொல்லேன் என்று சத்தியம் செய்தான் கர்ணன்.
எசகுபிசகாய் எதையோ கேட்டு உண்மையைச் சொல என்று
தன் மேல் சத்தியம் வாங்கிக கொண்டாள் ஜானு.
எது எப்படியோ நான் உனக்கொரு சத்தியம் தருகிறேன்.
*கண்ணே கனியே உனைக் கைவிட மாட்டேன் *
460. அந்த காலத்தில் எல்லா செயலும் நடந்தது சமூக அக்கறையோடு.
மக்கள் விட்டுக் கொடுத்து வாழ்ந்தனர் ஒற்றுமையோடு.
விழைந்தது காடு, எல்லார்க்கும் கிட்டியது நல்ல சாப்பாடு.
ஆடு மாடு சகலமும் வாழ்ந்தது மகிழ்ச்சியோடு.
செழித்து வளர்ந்திருந்தது நமது பண்பாடு.
இன்றோ காணும் இடத்திலெல்லாம் கள்ளம் கபடு,
செய்யும் செயல்கள் யாவும் சுயநலத்தோடு.
நல்லது செய்ய நிறைய உண்டு கட்டுப்பாடு.
எங்கும் எதிலும் குறைபாடு,
எது எப்படியோ, புராணங்களும் இதிகாசங்களும் நிறைந்த என்,
*தங்கமே, தமிழுக்கில்லை தட்டுப்பாடு*
459. சில விஷயங்கள் இப்படித்தான் என்று தெரிந்துவிடும்.
மார்கழியில் குளிர்,
வழி வருதோ இல்லையோ தையில் பொங்கல் வரும்.
பகல் முடிய இரவு வரும், நிலவு மறைய பொழுது விடியும்.
சில விஷயங்கள் நடப்பது எப்போதோ என்று தோன்றும்.
எப்போது மீட்கப்படுவோம் எனத் தெரியாது அசோக வனத்தில் சீதை.
எப்போது முடிவாளோ எனத் தெரியாது கூந்தல் விரித்து திரௌபதி.
கோவலன் எப்போது வருவானோ எனத் தெரியாது காத்திருந்த கண்ணகி.
எப்போது கீதம் ஆகுமோ, தெரியலை
*இதோ இதோ... என் பல்லவி*
458. ஏழு மரங்களின் உட்புகுந்து வெளி வந்தது ராமன் எய்திய அம்பு.
ஏழு ரிஷிகள் நகுஷனை இந்திரபுரி க்கு பல்லக்கில் தூக்கிச் சென்றனர்
ஏழாம் நாளில் நீ கொல்லப்படுவாய் என்று சாபம் பெற்றான் பரீக்ஷித்.
ஏழு நாட்கள் கோவர்தன மலையை கண்ணன் குடையாய்ப் பிடித்தான்.
உலக அதிசயங்கள் ஏழு.
கண்டங்கள் ஏழு.
வாரத்திற்கு நாட்கள் ஏழு.
வானவில்லில் வர்ணம் ஏழு.
ஏழுமலையான் இரண்டாவது பணக்கார தெய்வம்.
ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியன் வலம் வருகிறான்.
ஏழு வார்த்தைகளில் எழுதப்பட்டது திருக்குறள்.
ஏழு - இதில் தான் எத்தனை விஷயங்கள் அடங்கி...அட ஆமால்ல,
*ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?*
457. காலபைரவரிடம் அனுமதி பெறாது சஞ்சீவி மலையை கடத்திய வாயு புத்ரனுக்கு சாபம் கிட்டியது.
அரக்கனை அடக்க அனுமதி கேட்ட ஆறுமுகனுக்கு அன்னை வீரவேல் தந்தாள்.
மகாவிஷ்ணுவை பார்க்க ஜய விஜயர் அனுமதி மறுக்க சன குமாரர்கள் சாபம் தந்தனர்.
பொறுத்தது போதும் பொங்கியெழு என்று அன்னை அனுமதி தந்ததும் மனோகரன் எதிரிகளைப் பந்தாடினான்.
தன் வீட்டிலேயே இருந்தாலும் 'ஜானு வரலாமா?' என்று அனுமதி கேட்டு பின் ராம் அறையினுள் நுழைந்தான்.
அனுமதி சம்மந்தமாக இத்தனை நடந்திருக்க, எதற்கு வம்பு ... நான்
*வரலாமா உன் அருகில்?*
456. ஹே ராதே, தெவிட்டாத் தேனே,
முதன் முதலில் உனைப் பார்த்தனுபவம் சொல்கிறேன், செவி தா நீயே.
மார்கழி மாதம், விடிகாலை நேரம்
குளிர் வாட்டி எடுக்கும் தருணம்.
யமுனா நதியில், கரை அருகில், ஒரு படகில், கூட சில கோபியரும்.
*
தோழி லலிதாவுடன் நீ ஓடி வந்தாய்.
எனைக் காணும் ஆர்வம் கண்ணில், மறைத்துக் கொண்டாய்.
அன்று தான் ப்ருந்தாவன் வந்த தகவல் சொன்னாய்.
மயிற்பீலி ஒன்றை என் முடியில் சூட்டி விட்டுச் சிரித்தாய்.
அக்கணமே என் நெஞ்சைக் கொள்ளை கொண்டாய்.
*
பச்சை தாவணி, படபட பார்வை.
மை இட்டு அழகேற்றவில்லை, முன்னம் இட்ட தடம் விழியில்.
பூ சூடவில்லை, நுகர்ந்தேன், வாசம் மட்டும் கருங் கூந்தலில்.
எனை ஆள வந்திருப்பவள் என்று புரிந்ததந் நொடியில்.
*நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரில்*
455. ஹே ராதே,
இடையில் நீ இல்லாததால் இதர கோபியரோடு இணைந்து பேச இதயம் இசைவதில்லை.
அருகில் நீ இல்லாது அவஸ்தை பலவோடு அல்லாடுகிறேன்.
*
ஹே ராதே,
கனிந்த உன் காதல் பார்வை, தாமரை மணம் ததும்பும் உன் முகம்,
செவ்விதழ் செப்பும் இன்னிசை மொழிகள் இவையெல்லாம் என்னோடில்லாது தவிக்கிறேன்.
*
ஹே ராதே,
இதோ குழலெடுத்து வாசிக்கிறேன், மனதில் உன் முகம் இருக்கு, எனினும் ராகம் சோகமாகவே இருக்கு,
நீ வரும் வரையில் உனை எண்ணியே, உன் பெயரைச் சொல்லியபடியே, உனக்காகவே காத்திருக்கப் போகிறேன்.
*
ஹே ராதே,
வேறென்ன நான் செய்ய அன்பே ?
என்னை நீ இன்னும் என்ன செய்யப் போகிறாயோ
*என் காதலே ... என் காதலே*