Friday, August 5, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 5

பாசமே உருவான கண்ணன்

காத்திருப்பேன் நானென்
காதலி ராதைக்காக இங்கேயே;
அவளை இங்கே வரச்சொல்; நான்
அழைத்ததாக நீ போய்
அவளிடம் சொல்லிடு;
உரைத்ததை
உரைத்தவாறே
உரைத்தாள்
உயிர்த் தோழி, ராதையிடம்;

முன்னம்,
எங்கே நீ கண்ணனோடு,
இனிமையாகப் பொழுது கழித்தாயோ,
காம தேவனின்
கணைகளை எதிர்கொண்டு
களிப்புற்றுக் கிடந்தாயோ,
அங்கேயே,
அந்த யமுனையின் கரையில்,
உன்னை எண்ணியே
உன் பெயரைச் சொல்லியே
உனக்காகவே
தவம் செய்து காத்திருக்கிறானுன்
தலைவன்;


ராதா,
உனைப் பார்க்க முடியாது, தன்
ஆசைகளை
அடக்கிக் கொள்கிறான்
அந்தக் கண்ணன்;
எங்கிருந்தாவது நீ
எதிர்படமாட்டாயே திடீரென்று
என
எல்லா திக்கிலுமுனைத்
தேடிக்கொண்டே இருக்கிறான்
அந்தக் கண்ணன்;
வண்டுகள் மொய்க்குமந்த
வாசம் மிக்கச் சோலையிலே
நீ இருப்பதாய் எண்ணி
நுழைந்து உனைக் காணாது
திகைக்கிறான்
அந்தக் கண்ணன்;
அழகி உனக்காக
அழகானப் பூ மஞ்சனையை
அலங்கரித்துக் காத்திருக்கிறான்
அந்தக் கண்ணன்;

ஏ ! ராதே,
இளம்பெண்ணே,
வலுவிழந்த
உன் குற்றச்சாட்டைப் போல்
வலுவிழந்து மறையத் தொடங்கி
விட்டானந்த ஆதவன்;
கருத்த கண்ணனின்
நிறமொத்த இருள் எங்கும்
பரவத் தொடங்கிவிட்டது;
காதல் பறவைகளின்
கானம் போலென் உரை;
இன்னும் கால தாமதம்
எதற்கு ?
இப்பொழுதே
கிளம்பு;
கண்ணனைக் கண்டபின்பே
திரும்பு;

கருத்த
மரங்களின்
மத்தியிலமர்ந்து
தியானத்தில்,
"என்னருகே வருகிறாள்,
என்னைக் காண்கிறாள்,
என்னிடமெல்லக் கதையும் சொல்கிறாள்,
காதல் விளையாட்டுக்கள் விளையாடுகிறாள்,
என்னை அணைத்து ஆனந்திக்கிறாள்"
என்றே அர்ச்சித்து வந்தாலும்,
கண் விழித்து
காதலி நீ அருகிலில்லாததை
கண்டுணர்ந்து
உன் வருகைக்காகக்
காத்திருக்கிறான்;
வாராததேன் எனக்
குழம்பிக் கிடக்கிறான்;

ஒளியேதும்
உட்புக வழி
இல்லா இந்த
இருளில்,
யாருமறியாது
மெதுவாய்
உன் தடம் பார்த்துச்
செல்வாயானால்
கண்ணன் உன்னைக்
கண்டுகொள்வான்;
களித்திருக்க கூட்டிச்
செல்வான்;
கிளம்பிடு இப்போதே;

No comments:

Post a Comment