Thursday, August 4, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 4

எல்லா இடத்திலும் ராதையை தேடி
எங்கும் கிடைக்காது
என்ன செய்வதென
ஏதும் புரியாது
வருத்தம் மிக
வாடிக்கிடந்த கண்ணனிடம்
வந்தாள் ராதையின் தோழி.

கண்ணா,
ராதையின் வீட்டில் யாருமில்லாததால்,
அவளின் நெருங்கிய தோழியர் சிலர்
அவளை எந்நேரமும் சூழ்ந்திருக்கின்றனர்;
விருப்பமில்லாவிடினும்
வேறேதும்செய்யமுடியாது இருக்கிறாள்;
எல்லோரும் சேர்ந்து
காட்டுக்கு செல்ல,
அங்கே அவள் தனியே
அமர்ந்திருக்க,
தன் மூச்சிக்காற்றிலே வெந்து,
அந்த வெப்பம் தீயாய் மாற,
சில மரங்கள் தீ பற்ற,
காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிய,
ஒரு பக்கம் நெருப்பு,
மறு பக்கம் காமதேவனின் கணைகள்
புலியாய் அவளை
பின்துரத்த
நெருப்பினிடையே சிக்கிய மானாய்,
எப்பக்கமும் போக முடியாது
துடித்துக் கிடக்கிறாள்;


கண்ணா,
காதலெனும்
கடலில் மூழ்கிக்கிடக்கிறாள்;
திடீரென பேசுகிறாள்;
பலசமயம் பேசாதிருக்கிறாள்;
புலம்புகிறாள் சிலசமயம், ஏதும்
புரியாதுப் பார்க்கிறாள்
பலசமயம்,
உறக்கத்தில் எழுந்து நிற்கிறாள்;
ஏன் எழுந்தோமென அறியாது
மீண்டும் உறக்கம் தொடர்கிறாள்;
கண்ணை உருட்டுகிறாள்,
பாதி திறந்து
பாதி மூடி,
திடீரென மயங்கி
இன்னும் என்னென்னவோ செய்கிறாள்;
இந்த மாதிரி நோய்க்கெல்லாம்
நீ தானே சிறந்த மருத்துவன்;
கொஞ்சும் உன் காதல் பார்வையையே
கொஞ்சம் மருந்தாய்க்
கொடுத்தாயெனில்
உன்னாலவள் பிழைப்பாள்;
இல்லையேல் அவள்
இனி இல்லை;

நிலவால் குளிர்விக்கமுடியாது,
சந்தனத்தால் குளிர்விக்கமுடியாது,
தாமரை மலர்கள் குளுமை
தரமுடியாது,
தனியே ஓரிடத்தில்
தவமிருக்கிறாள்,
உன்னை நம்பி,
உன்னை மட்டுமே
முழுவதுமாய் நம்பி;
காத்திடு
கண்ணா;

முன்னம்
உன்னோடிருக்கையில் ஒரு
வினாடி கூட
விழி மூட மனமில்லாது
உன் உருவம்
விழி விட்டு மறைய இடம்தராது
வாழ்ந்தவள், இந்த
வசந்த காலத்தில்
விருட்சங்களெல்லாம் மலர்ந்து
வாசம் தருமிந்த
வேளையில் எப்படியெல்லாம்
வருந்திக் கிடக்கிறாளோ ?

No comments:

Post a Comment