Sunday, June 23, 2019

பொன்மாலைப் பொழுதில் 57

430. புயல் வருதாமே, பொறம்போக்கு இது எங்கே போச்சோ, தெரிலியே.
குட்டி போட்ட பூனையாட்டம் என்னையே சுத்தி சுத்தி வருவான்,
ரண்டு நாளா ஆளக் காணோம்.
எனக்கு அவன் நெனப்பாவே ...
கையில குடை இருக்கு, எங்கேனு போய் தேடுவேன், எருமை எருமை.
பக்கத்தில் இருந்தா ஏதாச்சும் தொணதொணன்னு  பேசுவான்.
கைய வச்சிக்கிட்டு சும்மாயிருக்க மாட்டான், கடங்கார கம்னாட்டி.
மழை ஆரம்பிச்சிடுச்சி, காய வச்ச துணியெல்லா ஈரமாகுது,
எனக்கோ அவன் நெனப்பா ... 
கோழி நனையுது, ஊற வச்ச சோளம் நனையுது, பாவிப்பய என் நெஞ்சில் அவ நெனப்பு எப்போதும்,
இரவோ பகலோ
மழையோ வெயிலோ
வேர்வையிலும் குளிரிலும்
சாமத்தில் சாய்த்த பின்னும்
*சாரக்காத்து வீசும் போதும்*

429. தீவை எறித்த பின், கட்டுண்டு நிற்பவனைப் பார்த்து ராவணன் கேட்டது 'யாரிந்த வானரம்?'
சகுந்தலை பிள்ளையோடு படியேற துர்வாச சாபத்தால் உறவு மறந்த துஷ்யந்தன் கேட்டது 'யார் நீ?'
திருமணத்திற்குத் தடை சொல்லும் கிழவனை பார்த்து சினத்தோடு சுந்தரன் கேட்டது 'யாரிந்த பித்தன்?'.
கையில் சிலம்பு, கண்ணில் கோபம், கண்ணகி நெடுஞ்செழியனைப் பார்த்துக் கேட்டது 'யார் கள்வன்?'.
சோ ராமசாமி எழுதி இயக்கி நடித்த புகழ் பெற்ற மேடை நாடகம் 'யார் ப்ராமணன்?'
இன்னும் ஒருவர் மட்டும் வரணும் என முரளி சொல்ல சுபா கேட்டது 'யார், ஜானுவா?'.
அன்பே சிவம் என்பதை அறிந்த நல்ல சிவம் இறைவன் பெயரில் ஏமாற்றுவாரைப் பார்த்துக் கேட்டது *யார் ... யார் ... சிவம்?*

428. தினம் தினம் மன அழுத்த வேலை
காலநேரமின்றி ஆட்டணும் வாலை
மாட்டிக்கிட்டோம், வேறு வழி இலை
தப்பித்து ஓட தைரியமுமில்லை
சகதியில் குதித்த வராக நிலை
பணம் பதவி பாசம் எல்லாம் வலை
தீரும் தொல்லை? மாறுமா கவலை?
இதற்கில்லையா ஒரு எல்லை ?
என்று இதிலிருந்து விடுதலை?
உலக வாழ்க்கையோ கடல் அலை
அல்லல்களே நம் லீலையின் விலை
காத்திருக்க, வரும் அவன் ஓலை
அது தரும் வேண்டிய ஆறுதலை
சரி போகட்டும், இப்பொழுது மாலை
கேட்கவும் இன்றைய பாடலை
காயட்டும் கண்களின் திவலை
இது *கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை*

427. புராணங்களின் படி நான்கு வர்ணங்களுக்கு வண்ணம் உண்டு.
வேதம் சொல்வோர்க்கு வெள்ளை.
போர் புரியும் அரச குலத்தோர்க்கு சிகப்பு, வணிகர்க்கோ மஞ்சள்.
உடல் உழைத்து வேலை செய்வோர்- க்கு கருப்பு என்று குறிப்பு இருக்கு.
இது ஒருபுறமிருக்கட்டும்.
அதியமான் அவ்வைக்கு தந்த நெல்லிக்கனி பச்சை; நாரதர் கலகம் செய்த மாம்பழம் மஞ்சள்.
இது இப்படியிருக்க,
புல்வெளி பச்சை, குருதி சிகப்பு.
வானம் நீல வண்ணம்; விடிகாலை பொன்நிறம்; இரவு கருப்பு;
கோபத்தில் கண் சிவப்பாகும்.
நாணம் பயம் மகிழ்ச்சி  இவற்றுக்கு வேறு வேறு வண்ணம்  ... சரி சரி
*தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ ?*

426. இராமன் கேட்கவில்லையே,
விஸ்வாமித்ரர் தேடிச் சென்று கலை பல சொல்லித் தந்து ....
துரியோதனன் தேடவில்லை,
கர்ணன் வர, அர்ச்சுனனை வீழ்த்த அவனை தன் பக்கம் சேர்த்து ...
யசோதா கேட்டாளா என்ன?
கண்ணன் இரவோடு இரவாக தேடிச் சென்று ...
சுந்தரரோ கல்யாண கனவில்,
சிவன் அவனைத் தேடிச் சென்று, பித்தா என்றழைத்த போதும்...
பெரியாழ்வார் வேண்டவில்லை,
ரெங்கமன்னாரே தேடி வந்து ஆண்டாளை பெண் கேட்க...
ஜானுவோ ராமோ அறியவில்லை,
கேளாமலே ஒருவரை ஒருவர் பார்த்துப் பேச 22 வருடம் ....
ஆம் நடக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் தானே ... எனக்கும் கூட
*கேளாமல் கையிலே வந்தாயே காதலே*


424. எல்லாரிடமும் நீ இப்படித்தான் ... பார்த்தால் அப்படித் தெரியவில்லை.
எனைச் சுற்றி சுற்றி வந்து, சிரித்து சிரித்துப் பேசி சிரிக்க வைத்தாய்.
கவிதை பல சொன்னாய். பதில் நான் சொல்ல கை தட்டி ரசித்தாய்.
உள்ளே எதையோ அசைத்து உனை பற்றி எண்ண வைத்து விட்டாய்.
நீ அருகிலில்லாத தருணத்தை நான் வெறுக்கும் அளவிற்கு ...
இப்படி நான் மாற அப்படி என்ன மாயம் செய்தாயடா, சிநேகிதா !
காணுமெல்லாவற்றிலும் உனைத் தொடர்புப் படுத்திப் பார்க்கிறேன்.
செல்லுமிடமெங்கும் உனை பற்றி பேசி பரவசித்து எனை மறக்கிறேன்
உன் விரல் பிடித்து ... ம்ம்ம்
முடிவெடுத்து விட்டேன், இனி பின்வாங்க மாட்டேன்.
உன் நிழலாய்த் தொடர்வேன்
*எங்கெங்கு நீ சென்ற போதும் ...*

423. இராவணன் தன் தவறை திருத்திக் கொள்ளாததால் தம்பி விபீஷணன் இடம் மாறினான்.
அரக்கு மாளிகை துரியோதனன் சூழ்ச்சியால் தீ வைக்கப்பட பாண்டவர் இடம் மாறினர்.
ஜராசந்தனோடு மல்போர் புரிந்து இரண்டாய்க் கிழித்து தலை கால் இடம் மாற்றி எறிந்தான் வீமன்.
வந்த காரியம் மறந்து சனாவின் கனவில்  கவிதை படித்தான் கவனம் இடம் மாறிய சிட்டி.
உடம்பு சரியில்லாது சில நாட்கள் கழித்து பள்ளி வந்த ஜானு, ராமைப் பார்த்துப் புன்னகைக்க
*இதயம் இடம் மாறியதே*

Wednesday, June 12, 2019

பொன்மாலைப் பொழுதில் 56

421. மகிழ்ச்சியாக இருக்கிறது.
நெஞ்சினுள் ஒரு புத்துணர்ச்சி புதிதாய்ப் புகுந்திருப்பது புரிகிறது.
காணும் அனைத்திலும் ஒரு ஈர்ப்பு.
கவிதை சுரக்கிறது; பார்த்தாலே பரவசம், பாராதிருந்தால் நானில்லை என் வசம்.
அகத்தில் ஆயிரம் மாற்றங்கள்
செய்யும் அனைத்திலும் புதுமைகள்
மனதிலுன்னோடு மல்லாடுகிறேன்.
என்னுள் நான்  அலவாடுகிறேன்.
அடிக்கடி உன் அருகாமையை அவதானிக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் நீ தான் காரணம் என்று சொல்ல வேண்டுமா என்ன?
உன்னாலே ஒரு புது மனிதனாய் உருவாகியிருக்கிறேன்.
*நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்*


420. கணவனுக்கு கண் தெரியாததால் தன்  கண்ணையும் துணி கொண்டு மூடிக் கொண்டாள் காந்தாரி.
தவ வேடத்திலிருந்த வியாசரின் கோர உருவம் காண முடியாது கண் மூடிக் கொண்டாள் அம்பிகை.
ஹஸ்தினாபுரத்து இளவரசர்கள் துரோணரிடம் பணிவாய் குனிந்து வாய் மூடிப் பாடம் கற்றனர்.
'மண் தின்றாயா?' என்று அன்னை வினவ 'திங்கலை' என்று வாய் மூடி பொய் சொன்னான் கண்ணன்.
பீஷ்மரின் நல்லறிவுரை ஏதும் கேட்கக்கூடாதென காதை இறுக்க மூடிக் கொண்டான் துரியோதனன்.
எந்த பாரபட்சமும் பாராது தீர்ப்பு சொல்வதற்காக நீதி தேவியின் கண்கள் எப்போதும் மூடியிருக்கும்.
தீயது பார்க்க கேட்க பேசக் கூடாதென காந்தியின் குரங்குகள் கண் காது வாய் மூடிக் கொண்டன.
இதெல்லாம் சரி, போதும் நிப்பாட்டு.
நீ மறைந்தே நிற்க கவிதை சுரக்கும் வேகம் மட்டுப்படுதே, எனவே
*முகத்தை எப்போதும் மூடி வைக்காதே*

419. ஒரு நாள் என்றால் பகல், இரவு என்று இரண்டு பாதி உண்டு;
மரம் எனில் வெளியே தெரியும் கிளை உள்ளே இருக்கும் வேர்.
இயற்கையிலேயே இப்படி இணைந்து அமைந்திருக்கும்.
சில விடயங்கள் சில சமயம் மாறிவிடும்.
எவ்வளவு பெரிய சிவபக்தன், மாறி இழிவான செயல் செய்தானே.
ஒன்றாய் இருந்தவர்கள் இரண்டு அணியாய் மாறி எதிரியானரே.
இன்று இப்படி, நாளை எப்படியோ; எது என்னாகும் என்று யாரரிவர்.
நமக்குள் கூடத்தான், தாமரை இலை மேல் தண்ணீர் போலத்தான்.
சண்டை எல்லாம் ஒன்றுமில்லை.
புகைவண்டி ஒன்று தான், சேர முடியாத தண்டவாளம் இரண்டு.
அட, '96 கதையும் இது தானே.
நானாக நான், இங்கு தனியே என் வழியில் ஒரு மூலையில்
நீயாக *நீ, உன் வானம், உனக்கென ஒர் நிலவு*



418. ஒரு வழியாக தீபாவளி முடிந்தது.
எத்தனை வேலை எத்துனைப் பணி எல்லாம் சரிவர செய்து விட்டாய்.
முருக்கு வடை லட்டு அதிரசம் பால் பாயசம் அப்பப்பா எத்தனை வகை தின்பண்டம் செய்ய நீ தெரிந்து வைத்திருக்கிறாய்.
மிகவும் களைத்திருப்பாய், சரி ஓய்வெடுத்துக் கொள்.
இங்கு வந்து உட்கார், கால் பிடித்து விடுகிறேன்.
தலை, தோள் மெல்ல அமுக்கி, பாதம் மத்தியில் கொஞ்சம் அழுத்தம்
பின்னங்கழுத்தில் பிடித்து விட உடல் வலி பறந்தோடும்.
சித்த நேரம் உறங்குகிறாயா?
*மாமரத்துப் பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா?*

417. சாபம் பெற்ற தசரதன் சிரித்தான், ராமன் பிறந்தான்.
ஜானகி காதலால் நாணத்தோடு சிரித்தாள், சிவதனுசு முறிந்தது.
துரியோதனன் தடுமாற பாஞ்சாலி சிரித்தாள், பாரதப் போர் மூண்டது.
இறக்குமுன் ஈந்து சிரித்தான் கர்ணன், முக்தி தந்தான் கண்ணன்.
'முத்தைத்தரு' முதலடி தந்த முருகன் சிரிக்க, திருப்புகழ் கிடைத்தது.
தூக்குமேடையில் பகத்சிங் சிரிக்க இந்தியாவிற்கு சுதந்திரம் கிட்டியது.
இங்கு ஒரே கோலாகலம், காரணம்
*நான் சிரித்தால் ... தீபாவளி*.

416. சிவதனுஷை நாணேற்ற மிதிலை நகரே பார்த்து வியந்தது போல
இலங்கை நகரின் அழகைப் பார்த்து அனுமன் வியந்தது போல
வேலோடு நிற்கும் பால முருகனைப் பார்த்து சூரன் வியந்தது போல
அட எனை விடு, நான் உன்னோடு கொஞ்சம் பழகியிருக்க;
உன் நடை உடை பாவனை எல்லாம் ஓரளவு அறிந்திருக்க ...
கருங்கூந்தல், பூ, காட்டன் புடவை, கையில் வளையல், காலில் கொலுசு ... ம்ம்ம்
கோவில் சிலையோ, தரையில் மிதக்கும் தேவதையோ என்றெல்லாம்
*ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா?*

415. தினம் தினம் எனைப் பார்த்ததும் ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறாய்.
கனவில் நான் செய்த குறும்புகளை கரம் மசாலா சேர்த்து கதைக்கிறாய்.
மறைத்து என் கைக்குள் எதையோ திணித்து தின்னச் சொல்கிறாய்.
'நேத்து வாங்கிய நைல் பாலிஷ்'
கண்ணருகே விரல் நீட்டுகிறாய்.
'அது?' என்று கேட்டால் 'எது?' என்று முதலில் முழித்து, பின் 'எருமை லூசு' என்று திட்டுகிறாய்.
இடுப்பில் கிள்ளி 'ஆம்' என்று காதினுள் பேசி முத்தம் தருகிறாய்.
வேண்டாம் என்று சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளாது,
என்னை அரைகுறை ஆடையோடு நிற்க வைத்து விட்டு ... ம்ம்ம்
*இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் ... அன்பே*

Wednesday, June 5, 2019

பொன்மாலைப் பொழுதில் 55

414. வெயில் மழை காடு மேடு பாராது இராமன் நாடு கடந்து போரிடக் காரணம் சீதை மேலிருந்தக் காதல்.
பீஷ்மர் துரோணர் கர்ணனை பாண்டவர் அழிக்கக் காரணம் பாஞ்சாலி மேலிருந்தக் காதலே.
ஏழை சுதாமா நண்பனை தேடிச் சென்றதற்கு காரணம் மனைவி பிள்ளையர் மேலிருந்தக் காதலே.
பாலகன் மணிகண்டன் காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டுவரக் காரணம் தாய் மேலிருந்தக் காதலே.
வேடனாய் வந்து  கிழவனாய் மாறி யானை காட்டி மிரட்டி ... காரணம் வள்ளியின் மேலிருந்தக் காதலே.
தீக்ஷிதர்களிடம் வாதிட்டு திருமறை ஏடுகளை ராஜராஜன் கைபற்றக் காரணம் தமிழ் மீதிருந்தக் காதலே.
அப்பூதியடிகள் தன் சேவைகளுக்கு அப்பரடிகளின் பெயரிடக் காரணம் அவர் மேலிருந்தக் காதலே.
நான் தொடர்ந்து எழுதுவதற்கும் எழுதாத அன்று 'என்னாச்சி ?' என்று நீ கேட்பதற்கும் காரணம் *காதலே ... காதலே*

413. என் உயிர்த்தோழி உறங்குகிறாள்.
சாகசங்கள் பல புரிய வல்ல என் சகி சயனித்திருக்கிறாள்.
தன் தினக் கவலைகளை தூர வைத்து விட்டுத் துயில்கிறாள்.
நெஞ்சை அழுத்தும் சோகங்களை மறந்து நித்திரையிலிருக்கிறாள்.
யசோதையின் மடியில் கண்ணன் போல் கோதை என் மடியில் நிம்மதியாய்க் கண்ணயர்கிறாள்.
முல்லை நீ தொல்லை தராது தூர நின்று நாசி தீண்டு.
பால் நிலவே நீ மேகத்தின் பின் நின்று வெளிச்சம் குறைத்து ஒளிர்.
இடி மின்னல் இரண்டும் இந்தப் பக்கம் வராதிருக்க உத்தரவு.
இன்றைய பொன்மாலைப் பொழுது கேட்டபடியே தொடர்ந்து உறங்கு.
*தென்றலே ... தென்றலே ...*
*மெல்ல நீ வீசு*

412. லக்குமணுக்கு இராவணனின் சேதி 'நல்லதை உடனேயும், கெட்டதை காலம் தாழ்த்தியும் செய்யணும்'.
கிருஷ்ணன் மந்திரி உத்தவருக்கு சொன்ன சேதி உத்தவ கீதையாம்.
அரிமர்த பாண்டியன் வாதவூரார்க்கு குதிரைகளோடு விரைந்து வரணும் என்று சேதி அனுப்பினான்.
சிவன் பார்வதிக்கு சொன்னதில் முதலான சேதி உண்மை சத்தியம் காக்கப்பட வேண்டும் என்பதே.
பீஷ்மர் தருமருக்கு சொன்ன சேதி 'நல்லதும் கெட்டதும் அவரவர் சிந்தையில் இருந்து தோன்றுவதே'.
ஆதிசங்கரின் சேதி 'பரம்பொருளே மெய், பணம் பொருள் எல்லாம் பொய், மூடனே' என்பதாம்.
இத்தனை நெருங்கி நாம் பழகி, நீ மட்டும் ஏனடி ... சொல்லடி
*சுந்தரி, கண்ணால் ஒரு சேதி...*

411. சீதையைத் தேடுவதற்கு கார்காலம் முடியக் காத்திருந்தான் காகுந்தன்.
வாலி மாயாவி சண்டை முடியும் வரை காத்திருந்தான் சுக்ரீவன்.
'இன்னும் ஒரு திங்கள் மட்டும் வரை காத்திருப்பேன்' என்று சீதை சேதி சொல்லியனுப்பினாள் அனுமனிடம்
8 வது பிள்ளை அவதரிக்கும் காலம் வர காத்திருந்தான் கண்ணன்.
வீரபாகு தூது சென்று விவரமறியும் வரை காத்திருந்தான் வடிவேலன்.
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு.
2 நாளோ 5 நாளோ சம்மதம் கிட்டும் வரை காத்திருந்தான் அமுதன்.
இதோ இங்கே *காதலெனும் தேர்வெழுதி காத்திருக்கும் மாணவன் நான்*


410. சீதையை சந்தித்த பின், தீவை நாசம் செய்த அனுமனை கட்டியது இந்திரஜித்தின் ப்ரம்மாஸ்திரம்.
ஹிரண்யனைக் கொன்ற நரசிம்மம் கோபம் அடங்கி கட்டுப்பட்டது் ப்ரகலாதன் அன்பில்.
பாகிரதன் வேண்ட, கங்கையின் காட்டு வெள்ளத்தை கட்டுக்குள் வைத்தது சிவனின் ஜடா முடி.
தன் இன்னொரு கண்ணையும் பிடுங்க முயன்றவனை தடுத்தது 'கண்ணப்ப நில்' எனும் ஒலி.
புயலெனப் புறப்பட்ட ப்ரசன்னாவை போக விடாது தடுத்தது பைரவி கட்டிய சிறு கயிறு^.
நானெங்கும் நகர முடியாது நீ எனைக் கட்டி இழுத்து வைத்திருப்பது,
*கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்*

^ அபூர்வ ராகங்கள்

409. அரியாசன் என்றார்கள், அமைதி காத்தேன், ஆடவில்லை.
அன்றிரவே ஆரண்யம் என்றார்கள், அலட்டிக்கவில்லை.
அப்படியா சரி என்று சொல்லி விட்டு கிளம்பி வந்து விட்டேனன்றோ.
அடக்கடவுளே, இப்படியாகிவிட்டதே என் செய்வேன்?
என் பெண்மான் ஒரு பொன் மான் கேட்டாள், அது ஒரு பிழையா?
மாயமான் பின் ஓடியது தவறோ?
இப்போது என் மட^மானை இழந்துத் தவிக்கிறேனே, தகுமா?
எங்கு சென்றாள்?யார் வேலை இது?
விதியோ இல்லை சதியோ?
நடந்தது என்ன?அறிந்தவர் உண்டா?
அடி சீதே, என் உயிரே,
*காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே?*


408. மூன்றாவது முறையாய் இன்று சந்தித்தேன், பார்க்கையிலேயே புரிகிறது, அவள் தேன் தேன்.
மெல்லிய தேகம், மல்லிப்பூ வாசம், ஒரு சில அடி தூரம் வரை வீசும்.
பார்வையில் கனிவு, பேச்சில் நடையில் பணிவு;
தள்ளி நின்று யானையை பார்க்கும் துணிவு, கிட்ட நின்று சிலையை ரசிக்கும் அழகு;
ஒரு சிலையே சிலையை ரசிக்குதே!
எனக்குப் பிடித்திருக்கிறது, பழக மனம் விரும்புது.
எங்கிருக்கிறாள், யார் ஏதும் தெரியாது, காதல் என்ன காலம் நேரம் எல்லாம் பார்த்தா வருது.
ஒரு மின்னல் போல்... சடாரென்று என்னுள் புகுந்து, தன்னை நோக்கி என்னை இழுத்து....
இப்பொழுதெல்லாம் எப்பொழுதும் அவள் ஞாபகம்.
எங்கு நோக்கினும் அவள் திருமுகம்
அயராதே கண் முன் சொப்பனம்
தள்ளிப் போய் விட்டது தூக்கம்
*விழிகளின் அருகினில் வானம்*