மாசுடை யுடம்பொடு தலையுலறி
வாய்ப்புறம் வெளுத்தொரு போதுமுண்டு,
தேசுடைத் திறலுடைக் காமதேவா
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்,
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்
என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்
காதலால்
கட்டப்பட்ட
காளையரும்
கன்னியரும்
காமத்தில் இணையத் தன்
கரும்பு வில்லில் மலராலான
கணை செலுத்தி
கருணை செய்யும்
காமதேவா, அந்தக்
கருங்கடல் வண்ணன்
கண்ணபிரானை அடைய வேண்டி
கடும் நோன்பு இருந்து,
எண்ணை இடாது
என் கூந்தல் வாரிமுடியாது,
உடலில் அழுக்கேறி,
உணவு ஒரு முறை மட்டும்
உண்டு, அதனால்
உடல் மெலிந்து,
உதடுகள் வெளிற,
புவியில் மற்ற
பூவையரைப் போல் என்னை
அலங்கரித்துக் கொள்ளாது,
அந்தக் கேசவனின் பாதக்கமலங்களை
அடையவேக் காத்திருக்கும் என்
ஆசை பூர்த்தியாக
அருள்புரிவாய்;
No comments:
Post a Comment