Monday, August 1, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 2

நல்லவன் கண்ணன்

தன்னையும் சேர்த்து எல்லோரிடமும்
தராதரமின்றிப் பழகும் கண்ணன்,
காந்தம் போல் எல்லோரையும்
கவர்வதைக்
காண முடியாது
எதையோ தான் இழப்பதாய்
எண்ணினாள்;
தேனிக்கள் நிறைந்த
மலர் பல
மலர்ந்த சோலைக்குள்,
தன் தோழி யோடு
தனிமையில் பேச
வந்தாள் ராதை;
வந்தவுடனே
கண்ணன் மேல் தான்
கொண்டிருக்கும்
கோபத்தையும்
தனிமையில்
தவிப்பதையும்
தெரிவித்தாள்;

தோழி,
என்
எண்ணப்படி இசைவதில்லை
என் நெஞ்சம்,
கண்ணனைச் சுற்றியே என்
கற்பனைகள்;
கோபியர் பலரோடுக்
கொஞ்சி விளையாடிக்
கிடக்கையில்,
எனை மறந்து விட்டதாய்
ஏனோ ஓரெண்ணம்
என்னுள்;
தவறுகளெல்லாம்
தள்ளி வைத்து,
அவன் செய்த
நற்செயல்கள்
கணக்கெடுத்தால்
கண்ணனைப் போல்
நல்லவர் யாருமில்லை;
அவனைப் பற்றி
எண்ணுகையில்
என் நெஞ்சில் மகிழ்ச்சி
எழுகிறதே;
என் செய்ய ?


தோழி,
கோபியரோடவன்
குதூகலமாய் விளையாடுகையில் ,
நான் அங்கே நுழைகையில்,
மெதுவாய் எனைப்
ஓரக்கண்ணால் பார்த்து
பல பெண்களோடவன்
பழகுவதை நான்
பார்த்து விட்டதைப்
பார்த்து
பதறி,
வேர்த்து
அழகான
அவன் முகம் நாணி,
அழகான மங்கையர் பலர்
அவனோடு
ஆடிக் கிடக்கும்
அச்சூழலில்
அங்கே நானென்
மகிழ்ச்சியை வெளிப்படுத்திருக்கவேண்டுமோ ?
உண்மையைச் சொல் என்
உயிர்ச்சகி;

நீரின் மேல்
நிதானமாய்
நடந்து செல்லுமிந்த காற்று,
புதிய வேரூன்ற
விழுது பல
விரித்துப் படருமிந்த
விருட்சம்,
மலரத்துடிக்கும்
மாமரத்தின் இந்த
மலர் மொட்டுக்கள், அதன்
மேல் மொய்க்குமிந்த தேனீக்கள்
இவைகளெல்லாம் தனியாயிருக்கும்
என்னுள் எதையோ
விதைக்கிறதாய்
உணர்கிறேன்;
இவைகள்
இருக்குமிடம்
நாடாமலிருப்பதே
நலமென
நான்
நினைக்கிறேன்;

கண்ணனின்
காந்தச் சிரிப்பால்
கவர்ந்திழுக்கப்பட்ட
கன்னியர் பலர் அவனோடு
கலந்தாடிக்கிடக்கையில் அவர் தம்
கூந்தல் களைய, தோல் மேல் புரள,
கை தூக்கி அதையவர்
கட்ட எத்தனிக்க,
மார்பகங்கள் பிதுங்கக்
கண்ணன் மேல் தாங்கள்
கொண்ட இச்சையைக்
கண்களாளுணர்த்த,
கண்ணனும் தன்
தாபத்தைப் போக்கிக்கொள்ள
விழைவானோ ?

No comments:

Post a Comment