Wednesday, October 12, 2011

பக்த பிரகலாதன் - 9

                                    பக்திக்குப் பரிசு

'பிரகலாதா,
புரிந்து கொண்டு
பதில் சொல்;
பெரியவன், பெரும் புகழ் கொண்டவன்
பெயரைச் சொல்'
பிதா கேட்டான்;

'தந்தையே,
பெரியவனும் அவனே,
பெரும் புகழெல்லாம் அவனுக்கே'
பிள்ளை சொன்னான்;

'எவன் அவன் ?'
என்று கேட்க
'நாராயணன்' என்றான்
அச்சம் ஏதுமின்றி
அரக்கனின் எச்சம்;

கண்கள் சிவந்தான்,
'பிரகலாதா, இந்தப்
பிதற்றல் பேச்சுக்களை இன்னும் நீ
விடவில்லையா ?
அரக்கக் குலத்திற்கு நீ
அவமானச் சின்னம்';

காவலரை அழைத்தான்,
பிரகலாதனைக்
கொல்லப் பணிந்தான்;

அரச கட்டளைக்கு
அடிபணிந்தனர்
அரக்கர்கள்;
பிரகலாதனை
அழைத்துச் சென்றனர்;


பாறையில் அமர்ந்து
பரந்தாமனை எண்ணிப்
பிரகலாதன் தியானித்திருக்கும் வேளையில்,
காவலர்கள் வாளால் வெட்டினர்;
வாள் முறிந்தது, எந்த விதத்திலும்
பாதிக்கப்படாது
பிரகலாதன் கண் மூடி அமர்ந்திருந்தான்;

     




     

நஞ்சு நிறைந்த பாம்பைக் கொண்டு
கடிக்க வைத்தனர்;
பாம்பின் விடம்
பிரகலாதனைத் தொடாதது கண்டு
பதறிப்போயினர் காவலர்கள்;


பட்டத்து யானையின்
பாதத்தில் மிதிபட
பிரகலாதன்
பிணமாவான் என்றெண்ணி,
யானை வரும் பாதையில்
படுக்க வைத்தனர்;
பட்டத்து யானை
பிரகலாதனை தன் துதிக்கையால் ஆசிர்வதித்து
வந்த வழி திரும்பிப் போனது;

     




     

மலையிலிருந்து கீழே
தள்ளிவிட்டு காவலர் திரும்பினர்
அரண்மனைக்கு;
ஆனால் அவர்கள் வரும் முன்
அரண்மனைக்கு வந்தடைந்தான் பிரகலாதன்;


நெருப்பில் அவனை
நிறுத்திவைத்தனர்;
நெருப்பு அவனை
நெருங்காது எரிந்தது கண்டு
அதிசயித்தனர்;

     


நாடாளும் வேந்தனிடம்
நடந்ததெல்லாம்
தெரிவித்தார்கள்,
எரியும் நெருப்பில்
எண்ணையுற்றினார்கள்;

                                                                        ( பக்தி தொடரும் )

No comments:

Post a Comment